தடையை மீறினால் கடும் நடவடிக்கை தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, அக்.31 சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பட்டாசுகளை விற்கவோ, வெடிக்கவோ கூடாது என்றும், தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் கடந்த 29ஆம் தேதி பட்டாசு தொடர்பான வழக்கில், நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. அதில் நீதிபதிகள் பட்டாசு வழக்கில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், குறிப்பாக பேரியம் நைட்ரேட்’ ரசாயனம் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கும், சரவெடி பட்டாசுகளுக்கும் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது’ என்றும் சுட்டிக்காட்டி இருந்தனர்.
மேலும் உச்சநீதிமன்றம், இந்த உத்தரவை மீறினால் அந்தந்த மாநில தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், மாநகராட்சி காவல்துறை ஆணையர் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மீது தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, பட்டாசு தயாரிப்பது, வெடிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று (30.10.2021) வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உச்ச நீதிமன்றம் தனது 29.10.2021 தேதியிட்ட தீர்ப்பில் 2016, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், அதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்புகளையும் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது. அதில் எதிர்வரும் தீபாவளி பண்டிகை மற்றும் இன்ன பிற நிகழ்வுகளின்போது சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்தவிதமான தடையும் இல்லை எனவும், ஆனால் பொதுமக்களின் உடல்நலன் மற்றும் சூற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பேரியம் ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து ஆணையிட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையான அளவில் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள், சரவெடி மற்றும் பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகள் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைக்கவும், கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
பொதுமக்கள் மேற்படி தடை செய்யப்பட்ட சரவெடி உள்பட பட்டாசு வகைகளை வெடிக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்சொன்ன உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அரசு விதிமுறைகளின் படி, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment