ஒடிசா கோயில் கொடுமை; எந்த ஆகமப்படி? பதில் கூறுவார்களா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

ஒடிசா கோயில் கொடுமை; எந்த ஆகமப்படி? பதில் கூறுவார்களா?

இன்றைய 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டில் ஒரு முக்கிய பக்திப் பிரவாகச் செய்தி!

"ஒடிசா மாநிலத்தில் மிகப் பிரபலமான பூரி ஜெகநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய 12 வயது சிறு பெண் ஒருவர் பூரி ஜெகநாதனை கும்பிட உள்ளே போய் கண்ணை மூடி பக்தியில் ஆழ்ந்தார்.

அந்த பெரிய கோயிலுக்குள் 136 சிறு சிறு கோயில்கள் உள்ளன.

இந்த பெண்ணுடைய பெற்றோர் பிரதான சாமியைக் கும்பிட பூரி ஜெகநாதர் கோயிலில் உள்ள முக்கியமான கோயிலுக்குள் போய் வணங்கினர்.

இந்தப் பெண் 'பாமனா கோயில்' என்ற சிறு கோயிலுக்குள் சென்றார் - இந்த பிரசித்திப் பெற்ற கோயில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

அந்த கோயில் அர்ச்சகர் ஒருவர், அச்சிறு பெண்ணைத் தொடர்ந்து அக்கோயிலுள் வந்து, பாலியல் தொல்லை கொடுத்து "வல்லுறவு" ("கற்பழிப்பு" என்ற சொல்லை எப்போதும் நாம் தவிர்ப்பவர்கள்) கொள்ள முனைந்த நிலையில் அப்பெண் கூச்சலிட எப்படியோ - பிறர் வந்து பார்த்து அர்ச்சகர் 'கையும் களவுமாக'ப் பிடிபட்டார்.

அழுதுகொண்டே ஓடி வந்த அந்தப் பெண்ணைக் கண்டு அதிர்ந்து போன அவரது பெற்றோரிடம் (இவர்கள் அய்தராபாத்திலிருந்து சேவித்து தரிசனம் செய்ய அங்கே சென்ற பக்தி குடும்பத்தார்). குறிப்பாக அவரது தாயாரிடம் அப் பெண் அழுதுகொண்டே இதனைக் கூற, சிங்கதுவார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.  உடனடியாக அந்தப் புகார் மனுவின்மீது நடவடிக்கை எடுத்திட காவல்துறை கண்காணிப்பாளர் கே.வி. சிங் என்பவர் ஏற்பாடு செய்தார். அர்ச்சகர்மீது வழக்குப் பதிவு செய்து, உடனடியாக கைது செய்யப்பட்டு, இப்போது 'கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்' அந்த அர்ச்சகர்!"

ஆகமப் பயிற்சியை ஓராண்டுக்கு மேல் படித்து, பல பூஜை புனஸ்காரங்களை நடத்தியும் வந்தவர்களை தமிழ்நாட்டில் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகும் வகையில் தமிழ்நாட்டுக் கோயில்களில் நியமனம் செய்தார் நமது முதல் அமைச்சர்.

'அய்யோ, ஆகம விதிப்படி இது அடாத செயல், சுவாமி "தீட்டாய்" விடுவார்' என்று பொய் அழுகை அழுது - தங்கள் ஏகபோகம் பறிபோவதை சகிக்க முடியாது, ஏற்க முடியாது நெற்றியில் பிறந்த "மஹா மஹா மேல் ஜாதியினர்"  - பார்ப்பனரின் புலம்பல் ஓயவில்லை. நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி நின்று, வல்லடி வழக்குகள் போட்டு "வித்தை" காட்டும் 'அவாள்களுக்கு' இந்த ஒடிசா செய்தியை நாம் அர்ப்பணிக்கிறோம்.

'இதென்ன பிரமாதம்; முன்பு சங்கராச்சாரியார் மடம் உள்ள நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் இருந்த தேவநாதன் என்ற அர்ச்சகர் எத்தனை எத்தனை பக்தைகளிடம் இந்த வல்லுறவுகளை நடத்தி 'வரலாறு?' படைத்தார்; எங்களுக்கு இது புது செய்தி அல்லவே' என்றா பதில் கூறுவர்? எந்த ஆகமப்படி இப்படி நடந்தது?

ஆகம விதிப்படிதான் அந்த அசிங்கங்கள் அங்கே அரங்கேறியுள்ளனவா?

எந்த ஆகமப்படி அர்ச்சகருக்கு இந்த உரிமை, கிருஷ்ணர் கோயில் என்றால் - வைகனாச ஆகமம் - சிவ ஆகமம் பொருந்தாது என்றெல்லாம் ஆய்வா நடத்த முடியும்!

பக்தி வந்தால் புத்தி போகும்

புத்தி வந்தால் பக்தி போகும்

என்றும்,

ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து

பக்தி என்பது தனிச் சொத்து

என்றும் சொன்ன பெரியாரின் பெருமை இப்போது விளங்குகிறதா?

எதற்கெடுத்தாலும் 'ஆகமம்' பேசுவோரே, ஒடிசா, 'சர்வம் ஜெகநாதம்' கோயிலில் நடந்த கொடூர அருவருக்கத்தக்க ஆபாசம் எந்த ஆகமப்படி நடந்தது; விளக்குவீரா பூணூல் பூஜ்ஜியர்களே?- 'புனிதர்களுக்குப் பிறந்த பெருமக்களே!'

No comments:

Post a Comment