நாகர்கோயில்,அக்.10- கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளை யும் கிராம்புக்கு `கன்னியாகுமரி கிராம்பு’ என புவிசார் குறையீடு வழங்கப்பட்டுள்ளது.
நறுமணப் பயிரான கிராம்பு தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவுப் பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மாறாமலை, கரும்பாறை, வேளிமலை, மகேந்திரகிரி பகுதிகளில் 750 எக்டேர் பரப்பளவில் கிராம்பு பயிரிடப்பட்டுள்ளது. இது, தமிழ்நாட்டில் கிராம்பு பயிரிடப்படும் மொத்த பரப்பில் 73 சதவீதமாகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலவும் மிதமான வெப்பநிலை காரண மாக, கிராம்பில் உள்ள வாசனை திரவியங்கள் குறைந்த அளவிலேயே ஆவியாகி, அடர்த்தியான வாசனை எண்ணெய் கிடைக்கிறது. இங்குள்ள கிராம்பு மரத்தின் மொட்டுகள், உதிர்ந்த இலைகள் மற்றும் தண்டுகளும் வாசனை எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவிலேயே, கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளை யும் கிராம்பு தரத்தில் முதலிடத்தில் உள்ளது. இதனால், குமரி மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், மாறாமலை தோட்ட விவசாயிகள் சங்கம், கரும்பாறை மலைத்தோட்ட விவசாயிகள் சங்கத்தினரால் `கன்னியாகுமரி கிராம்பு` என புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
இதனை அறிவித்த, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் கூறும்போது, ``இந்தியாவில் கிராம்பின் மொத்த உற்பத்தி 1,100 மெட்ரிக் டன். இதில், 1,000 மெட்ரிக் டன் தமிழ் நாட்டில் உற்பத்தியாகிறது. கன்னியா குமரி மாவட்டத்தில் மட்டும் 750 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தி யாவிலேயே கன்னியாகுமரி மாவட் டத்தில் சாகுபடியாகும் கிராம்பில், யூஜினால் அசிடேட் என்ற வேதிப் பொருள் அதிகளவில் இருப்பதால், வாசனை எண்ணெய் அதிகம் கிடைக்கிறது.
இந்தத் தனித்தன்மைக்காக, கன்னியாகுமரி கிராம்புக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவ னங்களுக்கு தரமான கிராம்பு கிடைப் பது உறுதி செய்யப்படுகிறது” என்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தா மொழியில் உற்பத்தியாகும் நெட்டை ரக தென்னைக்கு இதற்குமுன் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதுபோக, மார்த்தாண்டம் தேன், நேந்திரன் வாழை, மட்டி வாழை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கேட்டுள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி கிராம்பு புவிசார் குறியீடை பெற்றிருப்பது வேளாண் ஆர்வலர்கள் மற்றும் மலைத் தோட்ட விவசாயிகளை மகிழ்ச்சி யடையச் செய்துள்ளது.
No comments:
Post a Comment