பூட்டை உடைத்து கோயில் தரிசனமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

பூட்டை உடைத்து கோயில் தரிசனமா?

கரோனா காலம் - இந்தியத் துணைக் கண்டம் மட்டுமல்ல - உலகமே மிரண்டு போனது. கோடிக்கணக்கான மக்களின் உயிரை வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றது.

இதன் கோரப் பிடியிலிருந்து எப்படி விடுபடுவது என்ற அச்சம் குடி மக்களையும், ஆட்சிகளையும் அச்சுறுத்தியது.

கடவுள் காப்பாற்றுவார் என்று நம்பும் மக்களும் தங்களை அறியாமலேயே ஒரு முடிவுக்கு வந்தனர்.

ஆண்டவன் காப்பாற்ற மாட்டான் - ஆட்சியாளர்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

கரோனா கடவுளின் செயல் என்று சொன்ன ஒன்றிய அமைச்சரும் கடும் விமர்சனத்துக்கு ஆளானதுதான் மிச்சம். திடீர் தாக்குதலால் உடனடியாக தடுப்பூசியும் கண்டுபிடிக்க இயலாத நெருக்கடி - தடுப்பூசி வர எவ்வளவு காலம் தேவை என்பதிலும் குழப்பம்!

இந்திய ஒன்றிய அரசோ யாருக்கோ வந்த விருந்து என்று ஏனோ தானோ என்ற போக்கில் அசட்டையாக இருந்து தொலைத்தது.

தடுப்பூசி மூலம் தான் கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கரடியாய்க் கத்தியதைக்கூடக் காதில் வாங்கிக் கொள்ளாமல் தடுப்பூசி மருந்தினை வெளிநாட்டுக்கு அனுப்பி - இந்தியா தன்னிறைவு பெற்று விட்டது என்று உலகம் மெச்சக் காட்டிக் கொள்ள 56 அங்குல மார்பினைப் புடைத்துக் காட்டினார் பிரதமர் நரேந்திர மோடி!

விடயம் விபரீதமானது - வழக்கம்போல மதவாத கண்ணோட்டத்தோடு இஸ்லாமியர்கள் டில்லியில் நடத்திய தப்லிக் மாநாட்டில் கூடிய கூட்டம்தான் கரோனா பரவலுக்கு முக்கிய காரணம் என்று திசை திருப்பினர் - அது பொய்யான குற்றச்சாட்டு என்று அம்பலமானதுடன் - அவப்பெயரை சம்பாதித்ததுதான் மிச்சம்!

நிலைமை முற்றிய நிலையில், கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தது ஒன்றிய அரசு.

தொடக்கத்தில் அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்த மக்களும் உயிர்ப் பலிகளின் எண்ணிக்கை துரித கதியில் ஏறுமுகம் காட்டிய நிலையில்தான் விழித்துக் கொண்டனர்.

பூரி ஜெகந்நாதர் கோயிலில் திருவிழா உள்பட தடை செய்யப்பட்டது. எந்தமத விழாக்களும் நடைபெறக் கூடாது என்று ஒன்றிய அரசே வலியுறுத்த ஆரம்பித்தது.

அதனையும் மீறி நடத்தப்பட்ட கும்பமேளாவால் - கும்பல் கும்பலாக கரோனாவால் மக்கள் மரணக் குழியில் வீழும் விபரீதம் நடந்தது.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி மேடையின் உயரத்தில் நின்ற கேரளாகூட ஓணம் பண்டிகையை அவிழ்த்து விட்ட காரணத்தால் தலைகீழ் நிலைக்குப் புரண்டு வீழ்ந்தது. அதனுடைய பாதிப்பிலிருந்து இன்றுவரை மீள முடியாத மிகப் பெரிய துயரம்!

கோயில் விழாக்கள் நடத்துவதைத் தடை செய்து ஒன்றிய அரசே அறிவித்தது. தமிழ்நாடு அரசும் அதனைக் கறாராகக் கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் அரசியல் செய்ய எந்தத் துரும்பும் கிடைக்காத தமிழ்நாடு பா... - அதன் தலைவரும் மேனாள் காவல்துறை அய்.பி.எஸ். அதிகாரியுமான திருவாளர் அண்ணாமலை, தனது புதிய தலைமையை அடையாளப்படுத்திக் கொள்ளவும், விளம்பர வெளிச்சத்தில் மிளிரும் பட்டாம்பூச்சி போல மின்னித் தொலைக்கவும், வாரம் ஏழு நாட்களும் கோயில்கள் திறக்கப்பட வேண்டும், ஆயுதப் பூஜைக்காக கோயில்கள் திறக்கப்பட வேண்டும் என்று அனுமதியில்லாத ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டு உள்ளார். ஒன்றிய பா... அரசின் ஆணை என்ன என்பதைக்கூட அறியாத சிறுபிள்ளையா இவர் என்று எல்லோரும் ஏளனமாகப் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதனுடைய விளைவு - நாகர்கோயிலில் விபரீதத்தில் முடிந்திருக்கிறது. நாகர்கோயில் நாகராஜாகோயிலில் இருவர் (ஆட்டோ டிரைவர்கள் ஜெயராஜ், பாபு) கோயில் பூட்டை உடைத்து உள்ளே சென்று சாமி கும்பிட்டுள்ளனர்.

நாகர்கோயில் பா... மகளிர் அணி தலைவரின் சகோதரர் தானாம் அந்த ஜெயராஜ்.

பக்தி என்றால் பகுத்தறிவைப் பயன்படுத்தக் கூடாது என்பது எழுதப்படாத சட்டமா? கோயில் பூட்டை உடைத்து உள்ளே சென்று கும்பிடுவதுதான் பக்தியா? பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தமில்லை என்று நாம் கூறுவது எத்தகைய உண்மை என்பது இப்பொழுது புலப்படவில்லையா?

மற்ற மற்ற நேரத்திலும் கோயில் பூட்டை உடைக்கலாம் என்ற எண்ணம் ஏற்படாதா? களவுகள் நடைபெறாதா?

மக்களுக்கு நல்வழிகாட்ட வேண்டிய ஊடகங்களுக்குப் பொறுப்பு இல்லையா? 'தினமலர்' (13.10.2021 பக்கம் 6) என்ன தலைப்பிடுகிறது? வேண்டுதலை நிறைவேற்ற முடியாத விரக்தி - பூட்டை உடைத்து கோவிலில் தரிசனம் என்றும்,

கோயிலை மூடியதால் அரசுக்கு எதிராக பெரும் கொந்தளிப்பு எழுந்துள்ளது என்றும் எழுதுவது அசல் போக்கிரித்தனம் அல்லவா!

பூட்டை உடைப்பது எல்லாம் பக்தியில் சர்வசாதாரணம் என்று கூறப் போகிறார்களா? இதற்குப் பரிகாரம் கோயிலில் இருக்கிறது என்று சொல்லப் போகிறார்களா? வெட்கக்கேடு!


No comments:

Post a Comment