திருச்சி, அக்.2 திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக மருந்தாளுநர் தின விழா 25.09.2021 அன்று காலை 11 மணியளவில் மெய்நிகர் காணொலி வாயிலாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வரவேற்புரையாற்றினார்.
அவர் தமது உரையில் மருந்தாளுநர் தினத்தை கொண்டாடுவதன் முக்கியத்துவத்தையும் மருந்துகள் பராமரிப்பு மற்றும் நோய்களை நிர்வகிப்பதில் மருந்தாளுநரின் பங்கையும் வலியுறுத்தினார்.
மேலும் கரோனா பேரிடர் காலமான இத்தருணத்தில் மருத்துவ சேவையாற்றிவரும் அனைவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என எடுத்துரைத்தார்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் முனைவர். எம். தமிழ்மொழி, பதிவாளர், தமிழ்நாடு மாநில மருந்தக கவுன்சில், சென்னை அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில்,
பெரியார் மருந்தியல் கல்லூரியின் உலக மருந்தாளுநர் தின விழாவில் பங்கேற்பதில் தாம் பெருமகிழ்ச்சியடைவதாகவும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதில் தாம் பெருமிதம் கொள்வதாகவும் கூறினார். மேலும் சுகாதாரக் குழுவில் மருந்தாளுநரின் முக்கியத்துவத்தை விளக்கினார். நலவாழ்வில் மருந்தாளுநரின் பங்கு அளப்பரியது என்றும் எடுத்துரைத்தார். மருந்தாளுநரின் முக்கியத்துவத்தை இச்சமூகம் உணர்ந்து கொள்ளும் வகையில், இந்திய மருந்தியல் குழுமம் பல்வேறு விதிமுறை மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து மருந்தாளுநர்களுக்கான உறுதி மொழியினை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக மருந்தியல் பயிற்சித் துறையின் தலைவர் பேராசிரியர் கே. சக்திவேல் அவர்கள் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment