‘சமூகநீதிக்கான சரித்திர நாயகரிடம்' வழங்கப்பட்டது
சென்னை, அக்.9 தமிழ்நாட்டில், மருத்துவ மாணவர் சேர்க்கையில், ‘நீட்' தேர்வின் தாக்கம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கை, தமிழ், இந்தி உள்பட ஏழு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்' தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை, சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதித்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அதன்படி, சுமார் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிபதி ஏ«.க.ராஜன் குழு அளித்தது. இதற்கிடையே, தமிழ்நாடு சட்டப் பேரவையில் ‘நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றி, அதனை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ளது.
நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு நகல் ஆகியவற்றை இணைத்து, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் 12 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
தற்போது தமிழ்நாடு அரசு சார்பில், ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கை, தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இந்த மொழி பெயர்ப்பு அறிக்கையை, நேற்று (8.10.2021) தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதலமைச்சரிடம் வழங்கினார்.
அப்போது, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சிறப்புப் பணி அலுவலர் செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment