மணமக்களே, தோற்றுப் போவதில் ஒருவருக்கொருவர் முந்துங்கள்!
டாக்டர் கனிமொழி - டாக்டர் சிறீஜித் மணவிழாவில் தமிழர் தலைவர் கருத்துரை
சென்னை, அக்.1 முத்தையன் - நாகவள்ளி திருமணத்தை நான்தான் நடத்தினேன்; பேத்திகளின் திருமணத்தையும் நானே நடத்தி வைப்பேன்! மணமக்களே, தோற்றுப் போவதில் ஒருவருக்கொருவர் முந்துங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 18.9.2021 அன்று காலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் முத்தையன் - நாகவள்ளி ஆகியோரின் மகள் டாக்டர் மு.கனிமொழி, சசி - சுனிதா ஆகியோரின் மகன் டாக்டர் ச.சிறீஜித் ஆகியோருக்கு நடைபெற்ற வாழ்க்கை இணை யேற்பு விழாவிற்குத் தலைமை தாங்கி மணவிழாவை நடத்தி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
மணமக்கள் டாக்டர் மு.கனிமொழி - டாக்டர் ச.சிறீஜித்
மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடை பெறக்கூடிய நம்முடைய அன்புச்செல்வர்கள் டாக்டர் கனிமொழி - டாக்டர் சிறீஜித் ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து, சிறப்பான வகையில் மணமக்களைப் பாராட்டி யும், மணமக்களது பெற்றோருடைய சிறப்பான கொள்கை உணர்வுகளையும், இசைவினையும் பாராட்டி யும், இங்கு வந்திருக்கின்ற அனைவரையும் வரவேற்றும் உரையாற்றி அமர்ந்துள்ள கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
பொருளாளர் தோழர் வீ.குமரேசன் அவர்களே, மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் அவர் களே, அமைப்புச் செயலாளர் தோழர் பன்னீர்செல்வம் அவர்களே,
மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற தலைமைக் கழகச் சொற்பொழிவாளர்கள் அதிரடி அன்பழகன் அவர்களே, இராம.அன்பழகன் அவர்களே, இரா.பெரியார்செல்வன் அவர்களே,
மற்றும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்கக் கூடிய சென்னை மண்டல தலைவர் மானமிகு தோழர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தி.இரா.இரத்தினசாமி அவர்களே, சென்னை மண்டல செயலாளர் தோழர் செயல்வீரர் கோபால் அவர்களே,
தாம்பரம் மாவட்டச் செயலாளர் தோழர் நாத்திகன் அவர்களே, வேலூர் மண்டலத் தலைவர் தோழர் சடகோபன் அவர்களே, வேலூர் மாவட்டத் தலைவர் தோழர் சிவக்குமார் அவர்களே, ஆவடி மாவட்டத் தலைவர் தோழர் தென்னரசு அவர்களே, மகளிரணி மாநில அமைப்பாளர் தோழர் தேன்மொழி அவர்களே, பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் சிதம்பரம் அவர்களே,
இந்நிகழ்வில் சிறப்பாகக் கலந்துகொண்டிருக்கக் கூடிய கொள்கையாளர், சீரிய பகுத்தறிவாளர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய அணியின் பொறுப்பாளர் அருமைத் தோழர் ஆதிமாறன் அவர் களே, திருவாரூர் அ.தி.மு.க. அம்மா பேரவையின் செயலாளர் பைங்காநாட்டின் பெருமகனார் திருவாளர் அன்புச்சகோதரர் இராதாகிருஷ்ணன் அவர்களே, சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் அவர்களே, செயலாளர் ஜெயராமன் அவர்களே, மாண வர் கழக மாநில அமைப்பாளர் செந்தூர் பாண்டியன் அவர்களே, வெள்ளம்போல் திரண்டிருக்கக் கூடிய அருமைத் தோழர்களே,
தாம்பரத்தில் நடந்திருக்குமேயானால், ஒரு பெரிய மாநாடுபோன்று நடைபெற்று இருக்கும்
இந்தக் கரோனா கால கட்டுப்பாட்டின் காரணமாக, அந்தக் கட்டுப்பாட்டினை பெருமளவிற்குக் கடைப் பிடித்த காரணத்தினால்தான், இங்கே எனக்கு முன்னால் உரையாற்றிய கழகத் தோழர்கள் சொன்னதைப்போல, தாம்பரத்தில் இந்த நிகழ்வு நடந்திருக்குமேயானால், ஒரு பெரிய மாநாடுபோன்று நடைபெற்று இருக்கும்.
ஆனாலும், கட்டுப்பாட்டிற்குள் வைத்தே, இந்த அளவிற்குத் தோழர்கள் திரண்டு வந்துள்ள நிலை. தாம்பரம் மாவட்டத் தலைவர் அருமைச் சகோதரர் தோழர் முத்தையன் அவர்களுடைய அன்பு, அவரு டைய பண்பு அனைவரையும் ஈர்க்கக் கூடியது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு. கொள்கையில் அவர் என்றைக்கும், அந்தக் குடும்பம் என்றைக்கும் சமரசம் செய்துகொண்டதில்லை.
முத்தையன் அவர்களானாலும், அருமை மகள் நாகவள்ளி அவர்களானாலும், அந்தக் குடும்பம் எங்கள் குடும்பம். நடைபெறுவது எங்களுடைய பேத்திக்குத் திருமணம் நடைபெறுகிறது என்கிற பெருமிதத்தோடு இந்த மணவிழாவினை நடத்தி வைக்கக்கூடிய உணர்வோடும், உறவோடும் நாங்கள் இருக்கிறோம்.
கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர்; நட்பில் சமரசம் செய்துகொள்ளக் கூடியவர்
அப்படிப்பட்டவர்களாகிய அவர்கள், கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர். ஆனால், நட்பில் சமரசம் செய்துகொள்ளக் கூடியவர். கட்சி வேறுபாடு, கருத்து மாறுபாடு -இவற்றிற்கு நட்பிலே இடமில்லை. காரணம், எல்லோரும் அவரை விரும்புவார்கள், அவர் எல்லோ ரையும் விரும்புகின்ற காரணத்தால்.
அந்த அடிப்படையில், இந்த மணவிழா, ஒரு சிறந்த மணவிழாவாக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது. இங்கே நடைபெறுவது ஒரு சிறு பகுதிதான். தாம்பரத்தில் நடந்திருந்தால், பெரிய அளவில் நடந்திருக்கும்.
இந்தக் கரோனா காலகட்டத்தில், கட்டுப்பாட்டை நாம் கடைப்பிடிக்கவேண்டும் என்பதற்காகத்தான், எல்லோரும் முகக்கவசத்தை அணிந்திருக்கிறார்கள்.
இந்தக் காலகட்டத்தில், மணவிழா அழைப்பிதழ் கொடுக்கும்பொழுது கூட நீங்கள் மணவிழாவிற்கு வராமலேயே வாழ்த்துங்கள் என்று சொல்லக்கூடிய அளவில், ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
எல்லோரும் ஒரு வாரத்திற்கு முன்பே வந்து வாழ்த்துங்கள் என்று சொன்ன காலம் மாறி, மூன்று நாளாகி, மூன்று நாள் ஒரு நாளாகி, ஒரு நாள் அரை நாளாகி, அதற்கும் பிறகு, இந்தக் கரோனா போன்ற கால கட்டத்தில், உங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்திருக் கிறோம், வராமலேயே அங்கே இருந்தே வாழ்த்துங்கள். அது மணமக்களுக்கும் சரி, உங்களுக்கும் சரி, எல்லோருக்கும் சரி உதவி செய்வதாக இருக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கால மாற்றங்களும், நெருக்கடிகளும் நமக்கு ஏற்பட்டிருக்கின்றன.
ரத்த உறவைவிட, கொள்கை உறவு மிகவும் பலமானது
அந்த வகையில், இந்த மணவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்துவது, நடத்துவது என்பவை ஒரு சம்பிரதாயமல்ல - சடங்கல்ல - நான் சொன்னபடி, இது கொள்கை உறவு சம்பந்தப்பட்டதாகும்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், பெரியார் தொண்டர்களைப் பொறுத்தவரையில், ரத்த உறவைவிட, கொள்கை உறவு மிகவும் பலமானது.
எங்களிடத்தில் இருக்கின்ற ரத்த உறவுகளைவிட, கொள்கை உறவுகளை நாங்கள் பலமாக ஆக்கிக் கொண்டிருப்பதன் விளைவுதான் - நேற்று தமிழ்நாடு என்ன? உலகம் முழுவதுமே தந்தை பெரியாருடைய பிறந்த நாள் விழாவினை - ஒரு பெரிய திருவிழா போன்று கொண்டாடி இருக்கிறார்கள்.
டோக்கியோவில் பிறந்த நாள் விழா -
அமெரிக்காவில் பிறந்த நாள் விழா -
நேற்று மலேசியாவில் நடைபெற்று இருக்கிறது - இன்றும் நடைபெறுகிறது.
பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது!
இப்படி பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழக் கூடிய அளவிற்கு, இந்தக் கொள்கை வென்றிருக்கிறது.
இந்தக் காலகட்டத்தில், கவிஞர் அவர்கள் சொன் னதைப்போல, எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டு இருக் கிறது. காரணம் என்னவென்றால், ஓர் உண்மையான சிறந்த, இதற்கு முன்பு தமிழ்நாடு இவ்வளவு ஒரு அருமையான சூழலை அரசியலில் கண்டதில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஒரு பண்பட்ட கொள்கையாளர் முதலமைச்சராக இன்றைக்குப் பொறுப் பேற்று, ஒரு 150 நாள்களுக்குள் இந்தியாவின் முதல் முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றிருக் கிறார்.
அன்றாடம் சாதனைகளுக்கு மேல் சாதனைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த சாதனைகள், சரித்திரம் படைத்த சாதனைகள் என்பதினால்தான், நாம் அவரை ‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' என்று அழைத்தோம். அதை மகிழ்ச்சியோடு, பெருமையோடு சொல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றோம்.
சமூகநீதி நாள் என்று நமக்கு விழி திறந்த வித்தகரான தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளைக் கொண் டாடுகின்ற நேரத்தில், அதனுடைய தொடர்ச்சிதான் இந்த மணவிழா.
உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும். அதனு டைய தொடர்ச்சிதான் என்று ஆசிரியர் சொல்கிறாரே என்று.
ஆம்! தொடர்ச்சிதான். காரணம் என்னவென்றால், இந்த மணவிழாவைப் பொறுத்தவரையில், நம்முடைய அருமை கவிஞர் அவர்கள் சொன்னார்கள், இந்த மணவிழாவின் சிறப்பு என்ன என்பதை மற்றவர்களும் இங்கே சுட்டிக்காட்டினார்கள்.
முத்தையன் - நாகவள்ளி மணவிழாவினை
1990 ஆம் ஆண்டு நடத்தி வைத்தேன்!
முத்தையன் அவர்களுடைய மணவிழாவினை 1990 ஆம் ஆண்டில் நான்தான் நடத்தி வைத்தேன். இன்றைக்கு அவருடைய பிள்ளைகளுடைய திருமண விழாவினையும் நான் நடத்தி வைக்கி றேன். நிச்சயமாக, அவருடைய பேரப் பிள்ளை களுடைய மணவிழாவினையும் நடத்தி வைப்போம்.
இவருக்கு என்ன இவ்வளவு பெரிய பேராசை என்று நீங்கள் எல்லாம் நினைக்கலாம். அறிவியல் அந்த அளவிற்கு வளரும் என்கிற நம்பிக்கைதான். அறிவியலுடைய சாதனைதான்.
சராசரியாக இருந்த 20 வயது - இப்பொழுது 80 வயதாகி இருக்கிறது என்றால், அது அறிவியலினுடைய சாதனைதான்.
கரோனா காலகட்டத்தில்கூட, நேரிடையாக சந்திக்க முடியாதவர்கள் - காணொலிமூலம் உலகம் முழுவதையும் ஒன்று திரட்டி, நாம் பேசிக் கொண்டிருக்கின்ற அளவிற்கு வந்திருக்கிறது என்றால், இது முப்பது முக்கோடி தேவர்களுக்குத் தெரியாத விஷயம். நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள் அறியாத செய்தியாகும். ஆனால், அறிவியல் நமக்கு அதைக் கொடுத்திருக்கிறது.
கொள்கையில் உறுதியாக இருக்கின்ற குடும்பம்!
மூன்று தலைமுறை என்று ஏதோ பெருமைக்காக சொல்லவில்லை. இதில் ஒரு கொள்கைப் பிரச்சினை இருக்கிறது - அதற்காகத்தான் நான் அதைச் சொன்னேன். மூன்று தலைமுறையாக இந்தக் குடும்பம் மாறாத குடும்பம் - அந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கின்ற குடும்பமாகும்.
தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இவரைவிட, அவருடைய மகளுக்கு இன்னும் துணிச்சல்.
கனிமொழி அவர்கள் சீனாவிற்குச் சென்று படிக்கப் போகிறேன் என்று சொன்னபொழுது, நானேகூட கொஞ்சம் யோசனை செய்தேன்.
சரி, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று சொன்னேன்.
அதெல்லாம் நான் கவலைப்படவில்லை. நான் தைரியமாக இருப்பேன் என்றார்.
இந்தத் துணிச்சல் நம்முடைய பிள்ளைகளுக்கு வந்திருக்கிறதே - அங்கேதான் பெரியார் வெற்றி பெற்றார் என்று பொருள்.
எனவே, பெரியாருடைய பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது - அதனுடைய தொடர்ச்சியே நம்முடைய கனிமொழி - சிறீஜித் ஆகியோருடைய மணவிழா.
இதில், முத்தையன் - நாகவள்ளியைப் பாராட்டுவது என்பது, இவர்கள் வீட்டு மணவிழாவினை இந்த முறையில் நடத்துவது என்பது ஒரு பெரிய அதிசயமல்ல.
இதில் மகிழ்ச்சிக்குரிய செய்தி, பெருமைக்குரிய செய்தி என்னவென்றால், மணமகன் டாக்டர் சிறீஜித், அவருடைய பெற்றோரையும் மிகவும் பாராட்ட வேண்டும்.
அவருடைய பெற்றோர் கேரள மாநிலம் கொல் லத்தைச் சேர்ந்தவர்கள். அவருடைய பெற்றோர் நிறைய படித்தவர்கள் என்று கவிஞர் சொன்னார்.
படித்தவர்கள் மட்டுமல்ல - ஒருவரை ஒருவர் புரிந்தவர்கள்
இந்த மணமக்களைப் பொறுத்தவரையில், அவர்கள் படித்தவர்கள் மட்டுமல்ல - ஒருவரை ஒருவர் புரிந்த வர்கள், அதுதான் மிகவும் முக்கியம்.
இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் - மாநிலம் தழு விய அளவிற்கு, மாநில மறுப்பையும் சேர்த்து நடத்தியி ருக்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போயிருக் கிறார்கள்.
ஏற்கெனவே நடைபெற்ற முத்தையன் இல்ல மணவிழா ஜாதி மறுப்பு திருமணம்தான். அதைவிட கூடுதலாக மதிப்பெண் பெற்றிருக்கிறார் கனிமொழி.
மணமக்கள் இருவரும் ஒருவரையொருவர் காத லித்து, புரிந்து திருமணம் செய்துகொள்ளக் கூடிய அளவிற்கு, ஒருமனதாயினர் தோழி, திருமண மக்கள் வாழி என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதைப் போல, இவர்கள் இருக்கிறார்கள்.
இதற்கு முழு சம்மதம் கொடுத்து, எந்தவிதமான மறுப்பும் இல்லாமல், மகிழ்ச்சியோடு வந்து அமர்ந் திருக்கிறார்களே மணமகனின் பெற்றோர் - இவர்கள்தான் புது வரவுகள் - இவர்களை நாங்கள் இயக்கத்தின் சார்பில் பாராட்டுகிறோம் - வரவேற்கிறோம். அந்த உணர்வை நாங்கள் மதிக்கிறோம்.
ஜாதிக்கு ஓர் அடையாளம்கூட கிடையாது
இன்னுங்கூட சில பைத்தியக்காரர்கள் ஜாதியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் ஆணவக் கொலைகளை செய்கிறார்கள். ஜாதிக்கு ஓர் அடையாளம் கூட கிடையாது. இங்கே அமர்ந்திருக்கின்றவர்களில் யார் என்ன ஜாதி என்று சொல்ல முடியுமா?
தேர்தல் நேரத்தில் வேண்டுமானாலும் ஜாதியை ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வார்களே தவிர, ஜாதியில் வேறொன்றும் கிடையாது.
எங்களைப் பொறுத்தவரையில், பெரியாருடைய கொள்கை ஜாதி மறுப்பு - ஜாதி ஒழியவேண்டும் - சமூகநீதி இருக்கவேண்டும் - அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்.
நேற்று எடுத்த உறுதிமொழி,
யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பதாகும்.
யாவரும் கேளிர் என்கிற உறுதிமொழியினுடைய தொடர்ச்சிதான் இந்த மணவிழா.
எங்களை மதம் பிரிக்காது - ஜாதி பிரிக்காது - இடம் பிரிக்காது என்று சொல்லக்கூடிய அளவில் இது ஒரு சிறப்பான மணவிழா.
இந்தியாவிற்கே வழிகாட்டிய மாநிலம் தமிழ்நாடு
சில பேருக்கு ஓர் ஆசை - இன்னும் ஜாதிப் பட்டத்தைப் போட்டுக்கொள்வதில். ஜாதிப் பட்டத்தை முதன்முதலாக ஒழித்து - இந்தியாவிற்கே வழிகாட்டிய மாநிலம் தமிழ்நாடு. செங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாடு.
எல்லா வகையிலும் தாம்பரம் மிகச் சிறப்பானது. முதன்முதலாக பெரியார் நகர் என்று உண்டானது தாம்பரத்தில்தான்.
அதேபோன்று, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், அய்யாவிற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டவர், நம்மு டைய ஆதிமாறன் அவர்களுடைய தந்தையார் முனுஆதி அவர்கள்.
உடனே முதலமைச்சர் அண்ணா சொன்னார், ‘‘இந்த அமைச்சரவையே தந்தை பெரியார் அவர் களுக்குக் காணிக்கை'' என்று சொன்னார்.
சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்ட வடிவம் கொண்டு வருவதற்கான வாய்ப்பை செய்தார்.
ஒரு கொள்கையினுடைய வெற்றிப் புன்னகை இம்மணமுறை!
ஆகவே, இந்த மணமுறை என்பது இது ஒரு கொள் கையினுடைய வெற்றிப் புன்னகை. அந்த வெற்றிப் புன்னகைதான் இந்த மணமுறை.
ஒவ்வொரு நாளும் இந்த மணமுறை சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எங்கோ சில இடங்களில் ஆணவக்கொலைகள் நடக் கின்றன; கூலிப் படையை வைத்துக் கொலை செய் கிறார்கள். சொந்தப் பெண்ணை கொலை செய்கிறார்கள்; சொந்தப் பிள்ளையை கொலை செய்கிறார்கள். ஜாதி வெறி இன்னமும் இருக்கிறது என்பதை நாங்கள் மறைக்கவில்லை; மறுக்கவில்லை. இன்னமும் பெரியார் தேவைப்படுகிறார்.
ஏனென்றால், என்னதான் கரோனா தொற்று முழு மையாக முடிவிற்கு வந்துவிட்டாலும், நாம் எச்சரிக் கையாக இருக்கிறோம் அல்லவா - மூன்றாவது அலை வருகிறதா? நான்காவது அலை வருகிறதா? என்று.
அதுபோன்று, ஜாதி வெறி, மதவெறி என்பதையும் எத்தனையாவது அலை வருகிறது என்று பார்க்கக் கூடிய அளவில் இருக்கிறோம்.
ஒரு குடும்பம் போன்று இங்கே கூடியிருக்கிறோம்
ஆனால், இந்த மணவிழாவில் பாருங்கள், அந்தப் பிரச்சினையே இல்லை. ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு, எல்லோரும் அண்ணன், தம்பிகளாக, உறவுகளாக - யாவரும் கேளிர் - இந்த அரங்கத்தைப் பார்த்தாலே தெரியும். எல்லா தரப்பு மக்களும் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு குடும்பம் போன்று இங்கே கூடியிருக்கிறோம்.
இதுதான் தந்தை பெரியாருடைய சாதனை - இதனால்தான், சமூகநீதி நாளாக நாம் பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடவேண்டும் என்று சொன்னதி னுடைய தத்துவம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
அருமை நண்பர்களே, உங்களுக்கு ஒரு தகவலுக்காக சொல்கிறேன்,
‘‘என்னங்க, முன்பு மாதிரி இல்லையே, இப்பொழுது எங்கே பார்த்தாலும் ஜாதிக்கலவரம் நடைபெறுகிறதே'' என்று கேட்கிறார்கள்.
அவர்களுக்கு நான் சொன்னேன், ஓராண்டில் எத் தனை ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன என்பது தெரியுமா? விளம்பரங்கள் இல்லாமல் நூற்றுக் கணக்கான ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறு கின்றன. ஆனால், அங்கொன்றும், இங்கொன்றும் ஜாதிக் கலவரங்கள் நடைபெறுகின்றன.
பாதுகாப்பாகப் போய் சேர்ந்தது செய்தி அல்ல; விபத்து ஏற்பட்டால்தான் செய்தியாகும்
சாலையில் ஆயிரக்கணக்கான கார்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் விபத்து நடக்கிறது; விபத்து நடக்காத நாளில்லை. சாலைகளில் கார்கள் எவ்வளவு போகின்றன என்பதைக் கணக்கெடுத்து, விபத்து எத்தனை சதவிகிதம் நடைபெறுகிறது என்று பார்த்தால், ஒரு சதவிகிதம் அல்லது ஒன்றரை சதவிகிதம்தான் இருக்கும்.
ஆனால், பாதுகாப்பாகப் போய் சேர்ந்தது செய்தி அல்ல; விபத்து ஏற்பட்டால்தான் செய்தியாகும். அது போன்றுதான் ஆணவக்கொலை, ஜாதிக்கலவரம் போன்றவை.
உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன், இங்கே பெரியார் திடலில், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் இருக்கிறது. இந்நிறுவனம் விளம்பரம் இல் லாமல், தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுப்ப தில்லை. அதை ஒரு தொழிலாகவும் செய்வதில்லை.
மணமக்களைப் பார்த்து ஏற்பாடு செய்வது எங் களுக்குத் தொழில் இல்லை. தொண்டு, கொள்கைப் பணியாகத்தான் செய்கின்றோம்.
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் தோழர் பசும்பொன் செந்தில்குமாரி அவர்களிடம் ஒரு புள்ளிவிவரம் கேட்டேன், அவர்களும் கொடுத்தார்கள்.
இந்த ஆண்டு கரோனா காலம் என்பது உங்களுக் கெல்லாம் தெரியும்.
2021 ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் 18 ஆம் தேதிவரை 293 மணவிழாக்கள்!
2021 ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் 18 ஆம் தேதி காலைவரை நடைபெற்ற இணையேற்பு நிகழ்ச்சி கள் 293 ஆகும்.
இதில், ஜாதி மறுப்பு திருமணங்கள் 256.
எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் நடைபெற்று இருக்கிறது. பெரிய ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல், பதிவு செய்கிறார்கள்; அய்யா சிலை முன் ஒளிப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். சிலர் என்னிடமும் வந்து ஒளிப்படம் எடுத்துக் கொள்வார்கள்.
வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் இணையேற்பு விழா - 18.
அதேபோல, பார்ப்பனர்கள் உள்பட இணையேற்பு விழா - 12.
இத்திருமண நிலையத்திற்கு வருகிறவர்களுக்கு வயது தகுதி இருக்கிறதா? பிறப்பு சான்றிதழ்களை யெல்லாம் பார்த்து, சட்டப்படி சரியாக இருந்தால்தான் மணவிழாவை நடத்தி வைப்பார்கள்.
அதேபோல, மணமுறிவு ஏற்பட்டு மறுபடியும் மறுமணம் நடந்தது - 7.
இப்படி அமைதியாக, அடக்கமாக பெரியார் வென்று கொண்டிருக்கிறார்.
‘‘ஒரு காலத்தில் வீட்டைக் கட்டிப் பார்; திருமணத்தை செய்து பார்'' என்று சொல்வார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அவையெல்லாம் எளிமையாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையிலே, இந்த மணமுறை அதனுடைய தொடர்ச்சியாகும்.
எனவேதான், பெரியாருடைய பிறந்த நாளான - சமூகநீதி நாளில், அவருடைய கொள்கை எப்படிப்பட்டது என்று சொன்னால், மணமக்கள் இருவரும் டாக்டர்கள்.
சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான், மருத்துவக் கல்லூரிகளுக்கு மனுவே போட முடியும்!
ஒருகாலத்தில் நாமெல்லாம் மருத்துவப் படிப்பு படிக்க முடியுமா? சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான், மருத்துவக் கல்லூரிகளுக்கு மனுவே போட முடியும். இந்த செய்தி, இன்றைக்கு இருக்கின்ற பல டாக்டர் களுக்குக் கூட தெரியாது.
நீதிக்கட்சி ஆட்சி வந்து அந்த முறையை நீக்கியதால்தான் நம்மவர்கள் எல்லாம் டாக்டர்களாக முடிந்தது.
பழைய முறையை வேறு முறையில் கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் நீட் தேர்வு என்ற வலையை விரித்திருக்கிறார்கள். அதனை எதிர்த்துப் போராடக் கூடிய அளவில் நாம் தீவிரமாக இருக்கிறோம்.
நம்முடைய மணமக்கள் டாக்டர் கனிமொழி - டாக்டர் சிறீஜத் ஆகியோர் சிறப்பான வகையில் இன் றைக்கு மணவிழாவினை நடத்திக் கொள்வதற்கு வந்திருக்கிறார்கள் என்றால், மிகவும் பாராட்டுக்குரியது. அதேபோன்று, அவருடைய பெற்றோர் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.
முத்தையனுக்கும் - நாகவள்ளிக்கும் எந்தவிதமான வேலையையும் பேத்தி கொடுக்கவில்லை
நம்முடைய முத்தையனுக்கும், நாகவள்ளிக்கும் எந்தவித வேலையையும் கொடுக்கவில்லை நம்முடைய டாக்டர் கனிமொழி அவர்கள்.
ஏனென்றால் நம் நாட்டில், பண் குழந்தையை வளர்த் தால் சரியான நேரத்தில், அந்தப் பெண்ணுக்கு எல்லாமே நடைபெறவேண்டுமே என்கிற கவலை எல்லா பெற் றோருக்கும் உண்டு. அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லுகிற அளவிற்கு, நம்முடைய பிள்ளைகள் பக்கு வமாகி, இன்றைக்கு அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி.
இந்தப் பேத்தி கனிமொழி மிகவும் புத்திசாலித்தனமான பேத்தி. ஒரு நல்ல பேரனையும் பிடித்து, மிகப்பெரிய அளவிற்கு சிறப்பான வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
ஆகவே, அந்த அளவிற்கு அருமையான மணவிழா வினை நடத்தி வைப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
சடங்கு - சம்பிரதாயம் இல்லாமல் மகிழ்ச்சியாக நடைபெறுகிற மணவிழா!
பொதுவாக வைதீக முறையில் நடைபெறும் மண விழாக்களில், மாங்குச்சி சுள்ளிகளைப் போட்டுக் கொளுத்தி, புகையைப் போட்டு, சடங்கு சம்பிரதா யங்களை செய்யும்பொழுது மணமக்கள் கண்களை கசக்கி, மிகவும் சங்கடமாக அமர்ந்து கொண்டிருப்பார்கள்.
ஆனால், இந்த மணவிழா முறையில், சடங்கு, சம்பிரதாயம் இல்லாமல் எளிமையாக நடைபெறுகிறது. மணமக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
முத்தையன் அவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பதினால், இவ்வளவு ஆடம்பரமாக நடைபெறு கிறது. இல்லையென்றால், இவ்வளவு பேர் தேவையே இல்லை என்பதுதான் இந்த மணவிழாவின் தத்துவம்.
ஆகவேதான், இந்த மணமக்களைப் பொறுத்த வரையில்,
அன்பான மணமக்களே,
அறிவுரை அல்ல - வேண்டுகோள்!
நான் எப்பொழுதும் மணமக்களுக்கு அறிவுரை கூறுவதில்லை. ஏனென்றால், இன்றைய இளைஞர்கள் அறிவுரையை விரும்புவதில்லை. அவர்களுக்கு அறிவுரை தேவையும் இல்லை.
வேண்டுகோளாகத்தான் அவர்களுக்குச் சொல் வேன்.
வாழ்க்கையில் நீங்கள் எந்த அளவிற்கு உயர்ந்தாலும், உங்கள் பெற்றோரை மறந்துவிடாதீர்கள்.
உங்கள் பெற்றோரிடம் அன்பு காட்டுங்கள், பாசம் காட்டுங்கள்.
எளிமையாக வாழுங்கள். எளிமை - இனிமை - அதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
தன்முனைப்பு இல்லாமல் வாழுங்கள். சிறப்பான வாழ்க்கை வாழுங்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள் மிகச் சிறப்பாக சொன் னார், ‘‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை-
கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை'' என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒருவருக்கொருவர் நீங்கள் விட்டுக் கொடுத்து வாழுங்கள்.
தோற்றுப் போவதில் முந்திக்கொள்ளுங்கள்!
விளையாட்டில்தான் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு கொடுப்பார்கள். தேர்தலிலும் வெற்றி பெற்றவர் களைத்தான் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
ஆனால், வாழ்க்கை என்பது அப்படியில்லை. ஒருவருக்கொருவர் நீங்கள் முந்திக்கொண்டு, யார், யாரிடம் தோற்பது என்பதில் போட்டி போடுங்கள். அதுதான் உங்களுடைய வாழ்க்கையை சிறப்பான வாழ்க்கையாக மாற்றும் என்பதை எடுத்துச் சொல்லி,
வாழ்க்கை இணையேற்பு விழா உறுதிமொழியை நான் கூற, மணமக்கள் செல்வர்கள் கனிமொழி - சிறீஜித் இருவரும் பின்பற்றிக் கூறி, மணவிழாவினை நடத்திக் கொள்வார்கள்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.
No comments:
Post a Comment