சென்னை, அக்.31 கொசஸ்தலை ஆறு வடிநில பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட பாபா நகரில் மழை காலங்களில் தேங்கும் வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் கொசஸ்தலை ஆறு வடிநில பகுதியில் ஆசிய வங்கி நிதி உதவியுடன் ரூ.22 கோடியில் 4.5 கிலோ மீட்டர் நீளத்துக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள தாதங்குப்பம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும், திரு.வி.க நகர் மண்டலத்துக்கு உட்பட்ட 100 அடி சாலை, தில்லை நகர் முதல் பிரதான சாலை, செந்தில் நகர் 3ஆவது பிரதான சாலை மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் மதகு அமைக்கப்பட வேண்டிய இடங்களையும் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். பாபா நகர் பகுதியில் 99 சதவீத பணிகள் முடிவுற்று உள்ளன. இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மீதமுள்ள பணிகளையும் விரைவில் முடித்து சாலைகளை சமன்செய்து மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மத்திய வட்டார துணை ஆணையர் ஷரண்யா அரி, தலைமை பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment