தமிழ்நாடு பல துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது சென்னை உயர்நீதிமன்றம் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

தமிழ்நாடு பல துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை,அக்.30-  தமிழ்நாடு பல துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில், கருமலை என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘சேலம் மாவட்டம் காடையம்பட்டி வட்டத்தி லுள்ள தாத்தையாம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம் போக்கு நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி, வீடில்லா ஏழை, எளிய மக்களுக்கு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் குறிப்பிட்டுள்ள அந்த நிலத்தை பள்ளி கட்டடம் கட்ட ஒதுக்கக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு, வட்டாட்சியர் கருத்துரு அனுப்பியுள்ளார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘தமிழ்நாடு பல துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. மக்கள் நல அரசாக விளங்கும் தமிழ்நாடு அரசு வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீடுகளை வழங்க வேண்டும். அதேசமயம் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்ற எண்ணத்தையும் மக்களிடையே ஏற்படுத்தி விடக்கூடாது’’ என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர், வீட்டு மனை ஒதுக்கக்கோரி மாவட்ட ஆட்சி யரிடம் மனுதாரர் மீண்டும் மனு கொடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் வீடற்ற ஏழை, எளியோருக்கு நிலம் அல்லது வீடு வழங்குவது தொடர்பாக விரிவான செயல் திட்டத்தை தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும். இதற்காக மாவட்ட வாரியாக நிலங்களை அடையாளம் காண வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

காவிரி நீர்ப்பிடிப்பில் கனமழை

கிருஷ்ண ராஜ சாகர் அணை நிரம்பியது; தமிழ்நாட்டுக்கு  நீர் திறப்பு அதிகரிப்பு

பெங்களூரு,அக்.30- கருநாடகாவில் கடந்த இரு வாரங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மண்டியா மாவட்டம் சிறீரங்கப்பட்டணாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. 27.10.2021 அன்று அணை முழு கொள்ளளவை எட்டியது.

 28.10.2021 அன்று நிலவரப்படி, 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.52 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 18,650 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 10,330 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கருநாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை  கலந்து கொள்வதக இருந்த நிகழ்ச்சி நவம்பர் 2ஆம் தேதி நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பியுள்ளதால் மண்டியா, ராம்நகர் மாவட்டங்களில் காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்படும் நீரின் அளவு (10 ஆயிரம் கன அடி) அடுத்த சில நாள்களில் இன்னும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment