முழுநேர தலைவர் நான் தான் - சோனியா காந்தி திட்டவட்டமாக அறிவிப்பு
புதுடில்லி, அக்.17 ஊடகங்கள் மூலம் என்னிடம் பேச வேண்டாம் என்று கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் அதிருப்தியாளர்களுக்கு கண்டனம் தெரிவித்த சோனியா காந்தி, காங்கிரஸ் முழுநேர தலைவர் நான்தான் என பேசினார்.
காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத்தலைவர் வேண்டும், அமைப்பு ரீதியில் கட்சியை மாற்றியமைக்க வேண்டும் என அதிருப்தி தலைவர்கள் 23 பேர் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான காரிய கமிட்டியின் கூட்டம், டில்லியில் உள்ள கட்சித்தலைமை அலுவலகத்தில் நேற்று (16.10.2021) நடந்தது. கரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் முதன்முதலாக அனைவரும் நேரில் கலந்துகொள்ளும் கூட்டம் என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல், லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் படுகொலை, விண்ணைத்தொடும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த காரிய கமிட்டி கூட்டம் நடந்ததால் முக்கியத்துவம் பெற்றது.
இந்த கூட்டத்துக்கு கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார்.
கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முதல்-அமைச்சர்கள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), பூபேஷ் பாகல் (சட்டீஸ்கர்), சரண்ஜித் சன்னி (பஞ்சாப்), அதிருப்தி தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா என 57 பேர் கலந்துகொண்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளதால் கூட்டத்தில் பங்கேற்க வில்லை.
இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து சோனியா காந்தி பேசிய போது, தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அதிருப்தியாளர்களுக்கு கண்டனம் தெரிவித்ததார்.
அப்போது அவர், நான்தான் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர். நான் வெளிப்படையாக பேசுவதை எப்போதும் பாராட்டி வந்திருக்கிறேன். யாரும் ஊடகங்கள் வழியாக என்னுடன் பேசத் தேவையில்லை. இங்கே நாம் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் விவாதிக்கலாம். இந்த 4 சுவர்களுக்கு வெளியே பேசக் கூடியது, காரிய கமிட்டி கூட்டத்தில் எல்லோரும் சேர்ந்து எடுக்கக்கூடிய முடிவைபற்றித்தான் இருக்க வேண் டும். என திட்டவட்டமாகக் கூறினார்.
No comments:
Post a Comment