ராஜபாளையம் ‘நீட்' ஒழிப்பு கருத்தரங்கில் தமிழர் தலைவர் கருத்துரை
இராஜபாளையம், அக்.31 திராவிடர் இயக்கம் வளர்ந்ததே புத்தகங்களாலும் படிப்பகங்களாலும்தான் - படிக்கும் பழக்கத்தை கைகொள்வீர்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
‘‘நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? - கருத்தரங்கம்
கடந்த 18.10.2021 அன்று விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையத்தில் நடைபெற்ற ‘‘நீட் தேர்வு ஒழிக்கப்படவேண் டும் ஏன்? எதற்காக?” தலைப்பில் கருத்தரங்கம், ‘கற்போம் பெரியாரியம்', ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' ஆகிய நூல்கள் அறிமுக விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
‘கற்போம் பெரியாரியம்‘,
‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’
இராஜபாளையம் பெருநகரில் மிகச் சிறப்பான வகை யில், நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? என்ற அருமையான ஒரு கருத்தரங்கமும், அதேபோல, அண்மையில் வெளிவந்து, ஒரு மாதத்திற்குள்ளாக நான்கு பதிப்புகள் வெளியாகியிருக்கக் கூடியது என்ற சிறப்புக்குரிய ‘கற்போம் பெரியாரியம்', ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை' என்ற இரண்டு நூல்களை இங்கே பரப்பக்கூடிய ஓர் அருமையான வாய்ப்பை, வெகு குறுகிய காலத்தில் மிகச் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியில், உங்கள் அனைவரையும், அனைத்துக் கட்சி நண்பர்களையும், இராஜபாளையம் வாழ் பெருமக்களையும் நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
இந்தக் கூட்டத்தினுடைய தலைவர் மாவட்டத் தலைவர் துடிப்புமிகுந்த செயல்வீரர் மானமிகு அருமைத் தோழர் இல.திருப்பதி அவர்களே,
முத்தான செய்திகளை, சத்தான குரலிலே தெளிவாகச் சொன்னார்கள்
இந்நிகழ்வில், நமக்கெல்லாம் ஊக்கமும், உற்சாகமும் கொடுக்கக்கூடிய அளவிற்கு, நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர் அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய அரு மைச் சகோதரர் எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் இங்கே சுருக்கமாகச் சொன்னாலும், சுருக்கென்று தைக்கக்கூடிய கருத்துகளை மிக அழகாக, சட்டப்பேரவையில் எப்படி சபாநாயகரிடம் அவர்கள் நேரத்தை ஒதுக்கிக் கொள்வார் களோ, அதேபோல, செய்திகளை, முத்தான செய்திகளை, சத்தான குரலிலே தெளிவாகச் சொன்னார்கள்.
நீங்கள் ஏன் அவரை இவ்வளவு அபரிமிதமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதை இதன்மூலமாகத்தான் நான் தெரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பைப் பெற்றேன். அடுத்து நிறைய புத்தகங்களைப் பரப்பும் வகையில், அனைவரையும் அழைத்து அழைத்து புத்தகங்களைப் பரப்பினார்.
திராவிடர் இயக்கம் வளர்ந்ததே புத்தகங்களால்தான் - படிப்பகங்களால்தான்
இந்தப் புத்தகங்கள் என்பது நாம் விற்பனை செய்வதல்ல - பரப்புவது. விற்பனைக்கு இருப்பது என்பது வேறு. பரப்புவது என்பது, கொள்கையைப் பரப்புவதுதான். திராவிடர் இயக்கம் வளர்ந்ததே புத்தகங்களால்தான் - படிப்பகங்களால்தான். அந்தப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தைக் கைகொள்ள வேண்டும். அதற்கு நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டி யன் அவர்கள் ஒரு நல்ல மார்க்கெட்டிங் - சிறப்பான வகையில் செய்தார்.
அடுத்து இங்கு நான் எங்கே வந்தாலும், அவரை அழைத்துக்கொண்டு போவேன். இங்கே நிறைய பேர் அறிமுகமான நண்பர்கள்தான். சில பேர்தான் அறிமுகம் இல்லாத நண்பர்கள்.
எல்லோரையும் தெரிந்தவர்கள்தான்
திராவிட இயக்கத்தவர்கள்
ஒவ்வொருவரையும் பார்த்தவுடன் அடையாளம் தெரிகிறது. பல கட்சிகளில், சட்டப்பேரவை உறுப்பினரை, வாக்காளர்களுக்குத் தெரியாது. வாக்காளர்களை சட்டப் பேரவை உறுப்பினருக்குத் தெரியாது. எல்லோரையும் தெரிந்தவர்கள்தான் திராவிட இயக்கத்தவர்கள் என்பதற்கு அவர் ஓர் அடையாளம்.
அப்படிப்பட்ட அருமை சகேதாரர் மானமிகு மாண்பு மிகு சட்டப்பேரவை உறுப்பினர் சகோதரர் தங்கபாண்டியன் அவர்களே,
அதேபோல, எப்பொழுது இராஜபாளையத்திற்கு வந்தாலும், திருப்பதி அவர்கள் எப்படி எங்களிடத்தில் அன்பு செலுத்துகிறார்களோ, அதே அளவிற்கு எப் பொழுதும் அன்பு செலுத்தி, நாங்கள் கிளம்புகின்றவரையில் இருக்கக்கூடியவர் நம்முடைய நகர செயலாளர் செயல்வீரர் இராமமூர்த்தி அவர்களாவார்கள்.
அருமைச் சகோதரர் இராமமூர்த்தி அவர்களே,
நடமாடும் நூலகம் தோழர் நாராயண ராஜா
இந்த நிகழ்ச்சியில், சிறப்பான வகையில், இங்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தி உரையாற்றிய, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறந்த செயல்வீரர், நல்ல கல்வியாளர், அருமையான கல்விப் பணியைச் செய்யக் கூடிய, எப்பொழுதும் ஒரு புத்தகத் தேனீ போன்று இருக் கக்கூடியவர் - ஒரு நடமாடும் நூலகம் என்று சொல்லலாம்.
‘குடிஅரசு' நூல்களை நாங்கள் வெளியிட்ட நேரத்தில், சில அச்சுப் பிழைகள் இருந்ததைக்கூட அவர் படித்துவிட்டு எங்களுக்குச் சொல்லி, அடுத்த பதிப்பில் பிழையினைத் திருத்தக் கூடிய அளவில் காரணமாக இருக்கக்கூடியவர் தோழர் நாராயண ராஜா அவர்கள். அவர் நல்ல உடல் நலத்தோடு இருக்கவேண்டும். அதுதான் எங்களைப் போன்றவர்களின் விழைவு - வேண்டுகோள் - மகிழ்ச்சி!
அப்படிப்பட்ட அருமைச் சகோதரர் நாராயண ராஜா அவர்களே,
மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் பொறியாளர் முனைவர் மதுரை வா.நேரு அவர்கள், ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' புத்தகத்தை அறி முகம் செய்தார்.
அதேபோல, எளிமையும், உழைப்பும் பிரிக்கப்பட முடியாத அளவிற்கு, கடுமையான உழைப்பைக் கொடுக் கக்கூடியவர் நம்முடைய மாவட்டச் செயலாளர் தோழர் ஆதவன் அவர்களாவார். அப்படிப்பட்ட செயல்வீரர் அவர்.
அதுபோலவே, மண்டல திராவிடர் கழகத் தலைவர் சிவகாசி வானவில் மணி அவர்களே,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் கொள்கை வீரர் தோழர் இரவி அவர்கள்ளே,
மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் தோழர் மாரியப்பன் அவர்களே,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பகுதிச் செயலாளர் தோழர் சரவணன் அவர்களே,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நகர செயலாளர் தோழர் மதியழகன் அவர்களே,
எப்பொழுதும் எங்களிடத்தில் அன்போடும், பண் போடும் பழகக்கூடியவரும், உற்ற நண்பருமாக இருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட துணை செயலாளர் அருள்மொழி அவர்களே,
வடக்கு மாவட்ட நகர செயலாளர் தோழர் மணிகண்டன் ராஜா அவர்களே,
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற தென் மாவட்ட திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் தோழர் மதுரை வே.செல்வம் அவர்களே,
தென்மாவட்ட திராவிடர் கழகப் பிரச்சாரக் குழு தலை வர் எடிசன் ராசா அவர்களே,
தென்மாவட்ட திராவிடர் கழகப் பிரச்சாரக் குழு செயலாளர் அய்யா டேவிட் செல்லதுரை அவர்களே,
மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கே.டி.சி.குருசாமி அவர்களே,
நகர தலைவர் செயல்வீரர் சிவக்குமார் அவர்களே,
தென்காசி மாவட்டத் தலைவர் துடிப்புமிகுந்த வழக் குரைஞர் தோழர் வீரன் அவர்களே,
நன்றியுரை கூறவிருக்கக்கூடிய நகர செயலாளர் தோழர் பாண்டி முருகன் அவர்களே,
முதுபெரும் சுயமரியாதை வீரர் அருப்புக்கோட்டை அய்யா தங்கசாமி அவர்களே,
மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்ற மகளி ரணியைச் சார்ந்த அருமைத் தோழியர்களே, சகோதரிகளே, தாய்மார்களே, நண்பர்களே, பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தினம் இந்த அரங்கம் நிறைந்திருப்பதைப் போல, எங்கள் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியாலே நிரம்பியிருக்கிறது.
அதற்கு என்ன காரணம் என்றால், இங்கே நான் சொன்னதைப்போல, இராஜபாளையத்திற்கு நான் வருவது - எங்களைப் போன்ற இளைஞர்களை இராஜபாளையம் பெருமக்கள் புரிந்துகொள்வது என்பது, அறிந்துகொள்வது என்பது இது முதல் முறையல்ல.
நான் கல்லூரி மாணவனாக, அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபொழுது, 1953 ஆம் ஆண்டு - அந்தக் காலகட்டத்தில், இங்கே நம்முடைய துரைராஜூ அவர்கள், அதுபோலவே, நம்முடைய மாணவ நண்பர்கள் அவர்கள் எல்லாம் ஏற்பாடு செய்து இங்கே வந்திருக்கிறேன்.
இன்றைக்கு நான் அவ்வளவு மனநிறைவு, மகிழ்ச்சியடைகிறேன்
அதே காலகட்டத்தில் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அண்ணா அவர்கள் - சொன்ன அந்த நிலையிலும்கூட, பல ஊர்களில், கொஞ்சம் தள்ளி இருந்த சூழல் இருந்தது. ஆனால், இராஜபாளையத்தைப் பொறுத்தவரையில், அன்றைக்கும் சரி - இன்றைக்கும் சரி - திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப் பாக்கிகளாகத்தான் இருந்திருக்கின்றன. பல பேருக்கு இந்த வரலாறு தெரியாது. எனக்குத் தெரிந்ததினால்தான், இன் றைக்கு நான் அவ்வளவு மனநிறைவு, மகிழ்ச்சியடைகிறேன்.
காரணம், அன்றைக்கு நம்முடைய அய்யா இயக்க பழைய செயல்வீரர்களான துரைராஜூ போன்றவர்கள், ஏ.எஸ்.ஆர்.தங்கராசா போன்றவர்கள் - தங்கராசா அவர்க ளைப் பார்த்து, நான் அடிக்கடி நகைச்சுவையோடு பேசுவேன்.
மாவட்ட நூலகத் தலைவர் ஆதிநாராயணன்
தந்தை பெரியாருடைய சுயமரியாதைக் காலத்திலிருந்து, பச்சை அட்டை ‘குடிஅரசு' காலத்திலிருந்து கொள்கை வாதியாக இருந்தவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நம்முடைய ஆதி நாராயணன் அவர்களாவார்கள்.
ஆதிநாராயணன் அவர்கள், அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், மாவட்ட நூலகத் தலைவராகவும் இருந்தவர். மிகத் தீவிரமான சுயமரியாதை வீரர். இப்படிப் பட்ட இளைஞர்கள், தோழர்கள் எல்லாம் தயாராக வேண் டும் என்பதற்காக உழைத்தவர்.
திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில், இன்றைக் குப் பல தோழர்களுக்குத் தெரியாது. இளைய தலைமுறையினருக்குத் தெரியாது. வயதானவர்களுக்கு ஓரளவிற்கு இந்த வரலாறு தெரியும்.
இரவு நேரத்தில் கூட்டம் போட
அனுமதி கிடையாது
இரவு நேரத்தில் இராஜபாளையத்தில் திராவிடர் கழகமானாலும், திராவிட முன்னேற்றக் கழகமானாலும் கூட்டம் போட அனுமதி கிடையாது. ஏனென்றால், அங்கே கலவரம் நடக்கும். கல்வீச்சு நடக்கும். தகராறு நடக்கும் என்று சொல்லி, நீங்கள் 4 மணியிலிருந்து 6 மணிக்குள் கூட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள்.
இரவு 7 மணிக்கு ஒரு ரயில் வரும் - பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காக காவல்துறையினரே அழைத்து வந்து அந்த ரயிலில் ஏற்றிவிடுவார்கள்.
நான் பேசவிருந்த திராவிடர் கழகக் கூட்டத்தில் 1953இல் கேள்விகள் என்ற பெயரால் கலவரம் நடந்தது.
அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, நம்முடைய அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன் அவர்கள் வந்தபொழுதும் அதே சூழ்நிலை.
சட்டமன்ற உறுப்பினராக தங்கபாண்டியன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்
இன்றைக்கு பெரிய அளவிற்கு மக்கள் என்ன மாறுதல் அடைந்திருக்கிறார்கள் என்று சொன்னால், இந்தத் தொகுதியில் நம்முடைய சட்டமன்ற உறுப்பினராக தங்க பாண்டியன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்றால், இத்தனை லட்சம் மக்கள் திராவிட இயக்கத்தால் பயன்பட்டிருப்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். இன்றைக்கு அதுதான் மிகப்பெரிய கொள்கை வெற்றி.
பெரியாரியம் என்றால் என்ன?
திராவிடர் இயக்கம் என்றால் என்ன?
யாருக்காக?
எங்களுக்காக அல்ல - உங்களுக்காக - இந்த மக்களுக்காக!
ஒருமுறை பெரியார் அய்யா இங்கே வந்து உரை யாற்றுகிறார். ஆதிநாராயணன் போன்றவர்கள், ரங்கராஜன் போன்ற தோழர்கள், எஸ்.ஆர்.சாமி, சிவகங்கை சண்முக நாதன் ஆகியோர் இருந்த நேரத்தில், பெரியார் அய்யா அவர்களைத் தாக்குவதற்கு - திருக்கை வால் கொண்டு அடிப்பதற்கு - அவரை மிகப்பெரிய அளவிற்குத் தாக்குவ தற்கு, எந்த வழியிலே செல்லுகிறார் என்று விசாரித்து, அந்த வழியில் நின்றிருந்தார்கள்.
கருப்புச் சட்டைக்காரர்களை திருக்கைவால் கொண்டு தாக்கினர் எதிரிகள்!
ஆனால், எதிர்பாராமல் அய்யா அவர்கள் வேறொரு பாதையில் சென்றார். எப்பொழுதும் அய்யா அவர்கள், இரண்டு மூன்று பாதை இருக்கிறதா என்று கேட்பார். எந்தப் பாதையில் சென்றால் பெட்ரோல் சிக்கனமாகும் என்று நினைப்பார். இரண்டு மைல் அதிகமிருக்கும் என்பதால், அதைவிட குறைவாக செல்லும் பாதை எது என்று கேட்பார்.
ஆகவே, அந்த சுருக்கமான வழியினைக் கேட்டு, கூட்டம் முடிந்ததும் அந்த வழியில் செல்வார்.
வேறொரு இடத்தில் காத்திருந்த எதிரிகள், அந்த வழியாக வந்த கருப்புச் சட்டைக்காரர்களை திருக்கை வால் கொண்டு தாக்கினார்கள்.
அந்த தாக்குதல் சம்பவம் குறித்து ‘விடுதலை'யில் பெட்டிச் செய்தி வந்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. அதைக் கண்டித்து அய்யா அவர்கள் அறிக்கை எழுதினார்.
அப்படிப்பட்ட இராஜபாளையம் - அதற்கடுத்து பழைய காலத்திற்குப் போகவேண்டாம் - இங்கே நான் படிப்ப கத்தைப் பார்த்தேன்.
அதற்கு எல்லோரும் உதவி செய்திருக்கிறார்கள். நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர், எல்லா கட்சித் தோழர்களும் உதவி செய்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் வேறு எங்கும் இவ்வளவு அழகான திராவிடர் கழகப் படிப்பகம் இல்லை
இராஜபாளையத்தில், இப்பொழுது பார்க்கின்ற படிப் பகம் - தமிழ்நாட்டில் வேறு எங்கும் இவ்வளவு அழகான திராவிடர் கழகப் படிப்பகம் இல்லை. செயல்வீரர் திருப்பதி உரிய பணிகளைச் செய்தாலும், கழகத் தோழர்கள் செய்தாலும், இந்தப் பெருமை முழுவதும் அனைத்துக் கட்சியினரையும் சார்ந்ததாகும். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி செலுத்துகிறேன்.
படிப்பகம் என்பது, நான் பார்மல் எஜூகேசன் சென்டர். சம்பிரதாயப்படி, பள்ளிக்கூடத்தில் படிக்கலாம்; கல்லூரியில் படிக்கலாம். அங்கே கிடைக்காத செய்தி, படிப்பகத்தில்தான் கிடைக்கும். எனவே, படிப்பகம், நூலகம் என்பது இருக் கிறதே, அதுதான் நம்முடைய உண்மையான அறிவகம். பகுத்தறிவைப் பரப்புவது - மனிதனை உயர்த்துவது.
அதை மிக அழகாக செய்திருக்கிறது இந்தப் படிப்பகம். இந்தப் படிப்பகத்தைத் திறந்து வைக்கக்கூடிய வாய்ப்பு 1982 ஆம் ஆண்டு அமைந்தது. கிட்டத்தட்ட 39 ஆண்டுகளுக்கு முன்பு. வயதானவர்களுக்கு இது தெரியும்.
மம்சாபுரத்தில் நான் தாக்கப்பட்டேன்
மம்சாபுரத்தில், தோழர் பாபு அவர்களுடைய மருத்து வச் சாலையை (கிளினிக்) திறந்து வைக்கவேண்டும் என்று கேட்டார்கள்; அதற்காக இராஜபாளையம் வழியாக வரும் பொழுது, அங்கே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொடி - இன்னொரு பக்கத்தில் கலைஞர் வாழ்க, கலைஞர் வாழ்க என்கிற கோஷம்.
காரின் முன் சீட்டில் நான் அமர்ந்திருக்கிறேன். பின்னால், தேவசகாயம் அமர்ந்திருந்தார். திடீரென்று அந்தக் கும்பல் கிட்டே வந்தார்கள். தி.மு.க. தோழர்கள் என்ற போர்வையில் கையில் மாலையுடன் அதைப் போடுவதற்காக கிட்டே வந்தார்கள். காரிலேயே அமர்ந் திருந்தால், மரியாதை இல்லை அல்லவா - காரின் கதவைத் திறந்து கொண்டு இறங்கினேன் - ஒரு பெரிய பாறை போன்ற கல் காரின் முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு விழுந்தது.
நல்ல வாய்ப்பாக, வந்திருந்தவர்கள் எல்லாம் போதை யில் இருந்தார்கள்; ஆடிக்கொண்டே இருந்தார்கள் - உடனே நாங்கள் சுதாரித்துக்கொண்டு, கார் ஓட்டுநர் காரை விரை வாக ஓட்டிக்கொண்டுச் சென்றார். அந்தக் கண்ணா டித் துண்டுகள் என்னுடைய மூக்கின் மேல் பட்டு காயமேற் பட்டு, அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.
சிறீவில்லிபுத்தூரில் பொதுக்கூட்டம் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் தாக்குதலே!
இதைக் கேள்விப்பட்ட கலைஞர் துடிதுடித்துப் போனார். அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சர்! சிறீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப் பினர்தான் இதற்குப் பின்னணி என்பது எல்லோருக்கும் தெரியும் - அதைப்பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.
நான் மருத்துவமனையைத் திறப்பதற்காகத்தான் சென் றேன். திறந்தவுடன், முதல் பேஷண்டே நான்தான்.
சில பேர் திறந்து வைத்தால் நல்ல ராசியுள்ளவர் என்று சொல்வார்கள் மூடநம்பிக்கை உள்ளவர்கள். அதுபோன்று, பகுத்தறிவு ராசி.
அந்த மருத்துவமனையைத் திறந்து வைத்து, உரையாற்றிவிட்டு, அதற்கடுத்து, இங்கே இருக்கின்ற படிப்பகத் திறப்பு விழா. அதற்கடுத்து, சிறீவில்லிபுத்தூரில் பொதுக்கூட்டம். அந்தக் கூட்டம் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் அந்தத் தாக்குதல்.
இறந்தாலும், இந்த மண்ணிலே இறப்பேனே தவிர, நான் திரும்பிப் போவதற்குத் தயாராக இல்லை என்கின்ற உறுதியோடு, சிறீவில்லிபுத்தூரில் இரவு 11.30 மணிவரையில் உரையாற்றிவிட்டு, திருச்சிக்குச் சென்று படுத்தோம்.
காலை 7.30 மணிக்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார்.
‘‘என்னங்க, இப்படி நடந்தது என்று நான் கேள்விப் பட்டேன்'' என்று கேட்டார்.
ஆமாங்க, என்றேன்.
நகரமே இந்தக் கொள்கையை வரவேற்கின்றது என்பதற்கு அடையாளம்!
அப்படிப்பட்ட ஓர் ஊரில், இன்றைக்கு, இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் - நகரமே இந்தக் கொள்கையை வரவேற்கின்றது என்பதற்கு அடையாளம், நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர் - நம்முடைய நகர செயலாளர்.
ஏனென்றால், எத்தனை லட்சம் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டவர். அவரை நான் தனி மனிதராகப் பார்க்கவில்லை. இராஜபாளையத்தினுடைய முழு பிரதிநிதியாக இங்கே இருக்கிறார்.
எங்களுக்கு எதிர்க்கட்சியா? ஆளுங்கட்சியா? என்பது முக்கியமல்ல. இந்தக் கொள்கை வென்றிருக்கிறது. பெரியாரியம் வென்றிருக்கிறது.
திராவிடத்தால்தான் இன்றைக்கு எழுச்சி!
தேர்தலுக்கு முன்பாக நான் தெளிவாகச் சொன்னேன், சில பைத்தியக்காரர்கள் புரியாமல், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொன்னார்கள்.
திராவிடம் இல்லை என்றால், நீ வேட்டியை முழங்காலுக்குக் கீழே கட்டியிருக்க முடியாது.
திராவிடம் இல்லை என்றால், நீ தோளிலே துண்டைப் போட முடியுமா?
திராவிடத்தால்தான் இன்றைக்கு எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.
இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு தந்தை பெரியார் பிறந்த நாளை - சமூகநீதி நாள் என்று பிரகடனப்படுத்தினார். யார்?
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் இந்தியாவினுடைய ஒப்பற்ற முதல் முதலமைச்சர்.
அப்பொழுதுகூட அவர், நான் சாதனை செய்துவிட்டேன் என்று சொல்லவில்லை. அதுதான் இந்த திராவிட இயக்கத்தினுடைய அடிநாதம்.
நான் முதல் முதலமைச்சராக இருக்கிறேன் என்று சொல்வது எனக்கு முக்கியமல்ல - தமிழ்நாடு முதல் மாநிலமாக இருக்கவேண்டும், அதுதான் எனக்கு மிக முக்கியம் என்று கூறினார்.
அப்படிப்பட்ட ஓர் இயக்கம் - அப்படிப்பட்ட ஓர் ஆட்சி.
எனவே, நான் இங்கே மனநிறைவுடன் பேசுகிறேன் என்று சொன்னேன் என்றால், இதுதான் அதற்குக் காரணம்.
நேற்று எனக்கு உடல்நிலை சரியில்லை. வேலூரில், நானும், அமைச்சர் துரைமுருகன் அவர்களும் பேசவேண்டிய நிகழ்ச்சி. ஆனால், என்னால் அங்கு போக முடியவில்லை. தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்பட்ட காரணத்தினால்.
ஆனாலும், இந்த நிகழ்ச்சியை நான் ரத்து செய்ய விரும்பவில்லை. சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்து தங்கி, மாலையில் இந்த நிகழ்ச்சிக்கு இங்கே வந்திருக்கிறேன் என்றால், உங்களுடைய அபரிதமான கொள்கை உணர்வுதான் - இதுதான் எங்களுடைய நோய்க்கெல்லாம் மருந்து.
மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு தந்தை பெரியார் அவர்கள் உழைத்தாரே, யாருக்காக?
95 ஆண்டுகாலம் வரையில் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு தந்தை பெரியார் அவர்கள் உழைத்தாரே, யாருக்காக?
அவருடைய பிள்ளைகளுக்காகவா?
இன்றைக்கு நீட் தேர்வை ஒழிக்கவேண்டும் என்று நாங்கள் சொல்கிறோமே,
தி.மு.க.காரர்கள் டாக்டராவதற்கா?
திராவிடர் கழகக்காரர்கள் டாக்டராவதற்கா?
கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் டாக்டராவதற்கா?
அல்லது கூட்டணி கட்சிக்கார பிள்ளைகள் டாக்டராவதற்கா?
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் பிள்ளைகளையும் சேர்த்து டாக்டராவதற்காகத்தான் இந்த உழைப்பு.
நீட் தேர்வு இருந்தால், நம்முடைய பிள்ளைகளுடைய டாக்டர் கனவை நிறைவேற்ற முடியாது.
என்ன கொடுமை என்று பாருங்கள்,
கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும்
கோச்சிங் சென்டர்கள்
பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்கின்றார்கள். ஆனால், நீட் தேர்வில், மதிப்பெண்கள் பெற முடியவில்லை.
அதில் மதிப்பெண்கள் பெறவேண்டும் என்றால், 5 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய், 15 லட்சம் ரூபாய் செலவழித்து கோச்சிங் சென்டரில் பயிற்சி பெறவேண்டுமாம். எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் கோச்சிங் சென்டர். மிகப்பெரிய முதலாளிகளின் நிறுவனம் - அதற்கு அமெரிக்காவில்தான் தலைமை நிலையம் உள்ளது.
முத்தன் மகன் முனியன் அந்த கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயிற்சி பெற முடியுமா?
இந்த இயக்கம் எப்படிப்பட்ட இயக்கம்?
ஏன் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்? என்பதை மிக அழகாகச் சொன்னார்.
இவர்கள் எல்லாம் வரலாற்றில் இடம்பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
(தொடரும்)
No comments:
Post a Comment