வரலாற்றின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் எந்த ஒரு புரட்சி இயக்கத்திற்கும் ‘சுயமரியாதை இயக்கம்' என்ற பெயரை காண முடியாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

வரலாற்றின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் எந்த ஒரு புரட்சி இயக்கத்திற்கும் ‘சுயமரியாதை இயக்கம்' என்ற பெயரை காண முடியாது!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக கருத்தரங்கில் தமிழர் தலைவர் காணொலிமூலம் உரை

தஞ்சை, அக்.9 உலகத்தின் எந்தப் பகுதியில் தேடினாலும், வரலாற்றின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும், எந்த ஒரு புரட்சி இயக்கத்திற்கும் சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்ததைக் காண முடியாது. சுயமரியாதை என்பது தனி மனிதருக்கு சொந்தமல்ல. அனைவருக்கும் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற் றினார்.

கடந்த 1.10.2021  அன்று  காலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் (திருநெல்வேலி) சமூக விலக்கல் மற்றும் உட்கொணர்வு ஆய்வு மய்யம் சார்பில், ‘‘பெரியாரும் - பெண்கள் உரிமைகளும்'' என்ற தலைப் பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.

அவரது கருத்துரை வருமாறு:

 ‘‘பெரியாரும் - பெண்கள் உரிமைகளும்‘’

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் சமூக விலக் கல் மற்றும் உட்கொணர்வு ஆய்வு மய்யத்தின் இயக்குநர் மதிப்பிற்குரிய பேராசிரியர் சாமுவேல் ஆசீர்ராஜ் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் எனக்கு அடுத்து முதல் உரைத் தொடரை நிகழ்த்தவிருக்கக்கூடிய பகுத்தறிவு பாவலர் கவிஞர் அருமை சகோதரர் அறிவுமதி அவர்களே,

சிறப்பாக இந்த அரங்கத்தில் குழுமியுள்ள அருமை மாணவச் செல்வங்களே, பேராசிரியப் பெருமக்களே, பணித் தோழர்களே ஏனைய சான்றோர் பெருமக்களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஓர் அருமையான வாய்ப்பு.

பகுத்தறிவுப் பகலவன் - நமக்கெல்லாம் விழி திறந்த பிற்பாடு, தன்னுடைய விழிகளை மூடிக்கொண்ட வித்தகர், அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டை, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியத் திருநாட்டிலேயே விதைப்பதற்குக் காரணமாக அமைந்த பேராசான்.

தந்தை பெரியார் அவர்களுடைய கருத்தை எடுத்து சொல்லக்கூடிய ஓர் அருமையான வாய்ப்பை இந்த அரங்கம் - இந்தத் துறை எனக்கு வழங்கியிருப்பதற்காக, பல்கலைக் கழகத் துணைவேந்தர், பொறுப்பாளர்கள், இத்துறையின் பேராசிரியப் பெருமகனார் மற்றும் இதில் பணியாற்றக்கூடிய கூட்டுப் பணித் தோழர்கள், அருமை மாணவச் செல்வங்கள் அத்துணை பேருக்கும் என்னு டைய கனிவான அன்பை, வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வாய்ப்பிலே நான் நீண்ட நேரம் பேசக்கூடிய அளவிற்கு மகிழ்ச்சிகரமான ஒரு தலைப்பு எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது அத்தலைப்பு ‘‘தந்தை பெரியாரும் - பெண்ணுரிமையும்'' என்பதாகும்.

நீங்கள் ஆய்ந்து பார்த்தால், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பெண்ணுரிமைப் போராளிகளை யெல்லாம் தேடித் துருவி கண்டுபிடித்து ஒற்றுமையோடு பார்க்கக்கூடிய அறிவுசால் மக்கள் அரங்கம் இது - ஆய்வாளர்கள் கூட்டம் இது. இங்கே பேசுவது மிகுந்த பலனளிக்கும்.

தந்தை பெரியார் அவர்கள் பேசாத பொருளில்லை;

பதில் சொல்லாத கேள்விகள் இல்லை

ஏனென்றால், நீங்கள் எல்லாம் எதிர்காலத்தில் பல் வேறு துறைகளில் பரிணமித்து, இந்த சமுதாயத்தை மாற்றக்கூடியவர்கள். மாற்றம் என்பது மட்டுமல்லாமல், புத்தாக்கமாக அந்த மாற்றம் அமையும் என்று சொல்லக் கூடிய அளவிற்கு, அறிவார்ந்த, வாய்ப்புள்ள ஆய்வா ளர்களான மாணவச் செல்வங்கள், ஆசிரியப் பெருமக்கள்.

இந்த வகையில், தந்தை பெரியார் அவர்கள் பேசாத பொருளில்லை. அவர்கள் பதில் சொல்லாத கேள்விகள் இல்லை. அவருடைய கால் தடம் பதியாத இடமில்லை. தெருவெல்லாம் அவர் நடந்த பாதை - ஊரெல்லாம் அவர் உழைப்பின் வேர்வை என்று அருமையாக டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் சிறப்பாகச் சொன்னார், குலோத்துங்கன் கவிதையில்.

அதுபோல, அப்படிப்பட்ட பரந்துபட்ட தந்தை பெரியார் அவர்களுடைய ஒரு 60 ஆண்டுகால தொண்டு - அந்தத் தொண்டிலே முதன்மையானது - மிக முக்கியமானது - எல்லாவற்றிலும் முக்கியமானது மனிதநேயம்.

மானுடப் பற்றுதான் எனக்கு முக்கியம்

அவர் தன்னைப்பற்றி அறிமுகத்தில் சொன்ன நேரத்தில், மிகத் தெளிவாகச் சொன்னார்கள்.

எனக்கு எந்தப் பற்றும் இல்லை -

மானுடப் பற்றுதான் எனக்கு முக்கியம்

அறிவுப் பற்றுதான் எனக்கு முக்கியம்

வளர்ச்சிப் பற்றுதான் எனக்கு முக்கியம்

என்று அய்யா அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு ஒரு தத்துவஞானியாக இருந்து, ஒரு வளர்ச்சி கர்த்தாவாக இருந்து, ஒரு சமூக விஞ்ஞானியாக இருந்து அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அவர்கள், அவர் தொடங்கிய இயக் கத்திற்கே மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு தான், சுயமரியாதை இயக்கம் என்று அவர்கள் உரு வாக்கினார்கள்.

வரலாற்றின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பார்க்க முடியாது

உலகத்தின் எந்தப் பகுதியில் தேடினாலும், வரலாற்றின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும், எந்த ஒரு புரட்சி இயக்கத்திற்கும் சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்ததாக நீங்கள் காண முடியாது.

சுயமரியாதை என்பது தனி மனிதருக்கு சொந்தமல்ல. அனைவருக்கும் தேவை.

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப்போல, அந்த மானமும், அறிவும் எப்படி இருக்கிறது என்ப தற்கு அளவுகோல், பிரதிபலிப்புதான் சுயமரியாதை என்பது.

அந்த சுயமரியாதை இயக்கத்தைத் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கியபொழுது, தன்னு டைய லட்சியம் என்று அவர்கள் குறிப்பிட்டது, அதிலே மிக முக்கியமானது அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்வதற்கு முன், சமத்துவம் வேண்டும்.

அப்படி வருகின்றபொழுது, பேதமற்ற ஒரு சமுதாயம் - எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கின்ற நேரத்தில், பேதமற்ற ஒரு சமுதாயம் தேவை.

நம்முடைய நாட்டில் வேறுபாடான - கொடுமையான ஒரு பேதம்

அந்தப் பேதம், மற்ற நாடுகளில் இருக்கின்ற பேதத் தைவிட, நம்முடைய நாட்டைப் பொறுத்தவரையில், இங்கே ஒரு வேறுபாடான - கொடுமையான ஒரு பேதம்.

மற்ற நாடுகளிலும் பேதங்கள் உண்டு. ஆனால், இங்கே இருக்கின்ற பேதம் என்பது ஒரு வித்தியாசமான, கொடுமையான, வேறுபாடான ஒரு பேதமாகும்.

உதாரணமாக, ஜாதி என்பது இங்கே மட்டும்தான் உண்டு. மற்ற நாடுகளில் பிறவியை அடிப்படையாகக் கொண்டு பேதப்படுத்துவது என்பது இருக்கிறதே - அது கருப்பர் - வெள்ளையர் என்ற நிற பேதம் போன்று இருந்தாலும்கூட,

இங்கே இருக்கின்ற, வருணதர்மம், வருணாசிரம தர்மம் என்று சொல்லக்கூடிய ஜாதிப் பிரிவு அடிப் படையில் ஒருவரைத் தொடக்கூடாது - பார்க்கக்கூடாது - நெருங்கக்கூடாது - அவனுக்குப் படிக்கின்ற உரி மையை கொடுக்கக் கூடாது - அவன் சொத்து வைத்துக் கொள்கின்ற உரிமை இருக்கக்கூடாது- அவனுக்குத் திருமணம் செய்துகொள்ளக் கூடிய உரிமை இருக்கக் கூடாது என்றாக்கி,

உயர்ஜாதி - தாழ்ந்த ஜாதி,

மேல்ஜாதி- கீழ்ஜாதி என்றெல்லாம் ஆக்கியதோடு மட்டுமல்லாமல், அதனை இத்தனை ஆண்டுகாலமாக மிகப்பெரிய அளவிற்கு ஒழிக்க முடியவில்லை என்றால், அதனுடைய வேர் எங்கே போய் இருக்கிறது என்றால், அந்த வேரை மதத்திற்குள் கொண்டு போய் வைத் தார்கள். அந்த வேரைப் பாதுகாக்கின்ற பிடிமானமாக கடவுள், மதம் என்று பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்து வைத்தார்கள்.

நேரமின்மை காரணத்தினால், சுருக்கமாக சொல் கிறேன். உங்களோடு பல மணிநேரம் விவாதிக்கவும், உரையாற்றவும் கரோனா காலகட்டம் முடிந்ததும், நேரிடையாக அங்கே  வந்து உங்களை சந்திக்கின்றேன். அப்பொழுது பல்வேறு செய்திகளை நாம் பரிமாறிக் கொள்ளலாம்.

அந்த வகையில், அருமை நண்பர்களே, மாணவச் செல்வங்களே, ஆய்வாளப் பெருமக்களே உங்களுக்குச் சொல்வதெல்லாம், ஜாதி என்ற கொடுமை இருக்கிறதே  - வருணதர்மம் என்ற கொடுமை - இது நிலைத்திருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போரிட்டவர்

இன்னுங்கேட்டால், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், தந்தை பெரியார் அவர்களைப்போலவே, மிகக் கடுமையாக வாழ்நாள் முழுவதும் அதை எதிர்த் துப் போரிட்டவர்.

அவர் சொன்னார், மற்ற நாடுகளில் இருக்கின்ற பேதத்திற்கும், நம்முடைய நாட்டில் ஜாதியால் உரு வாக்கப்பட்டு இருக்கிற, வருண தர்மத்தால் இருக்கின்ற பேதத்திற்கும், ஓர் அடிப்படை வேறுபாடு - படிக்கட்டு ஜாதி முறை - ஒருவருக்குக் கீழே இன்னொருவர், இன்னொருவருக்குக் கீழே இன்னொருவர். தனக்குக் கீழே யார் இருக்கிறார் என்பதுதான் முக்கியம் என்று கருதுகிறார்கள்; தனக்கு மேலே யார் இருக்கிறார் என்ப தைப்பற்றி அவன் மறந்துவிடுகிறான் என்பதைப்போல, ஒரு சூழல் இருக்கக்கூடிய நிலை உள்ளது.

பெரியார் தன்னுடைய இயக்கத்திற்கு, லட்சியத்திற்கு விளக்கம் கொடுத்தார்

பிறவி பேதம் கூடாது என்று சொல்லும்பொழுது, பெரியார் தன்னுடைய இயக்கத்திற்கு, லட்சியத்திற்கு விளக்கம் கொடுத்தார்.

பிறவி பேதம் என்று சொல்லும்பொழுது, உயர்ந்தவர் - தாழ்ந்தவர்; தொடக்கூடிய ஜாதி - தொடக்கூடாத ஜாதி என்று பிரிவினை செய்து இருக்கிறார்களே, அதுமட்டு மல்ல - ஆண் பிறவியினால் உயர்ந்தவர்; பெண் பிறவியினால் தாழ்ந்தவர். ஆணுக்கு உள்ள உரிமைகள் எல்லாம் பெண்ணுக்குக் கிடையாது என்பதுபோல, காலங்காலமாக ஆணை உயர்த்தி, பெண்ணைத் தாழ்த்தி, இன்னுங்கேட்டால், பெண்தான் தாய்க்குலம் என்றெல்லாம் ஒரு பக்கத்தில் பெருமையாகப் பேசிக் கொண்டு, அந்தப் பெண்ணை வாழ்நாள் முழுவதும் உரிமையற்றவராக, சுதந்திரமற்றவராக ஆக்கிக் கொண்டிருப்பதை எதிர்த்துத் தந்தை பெரியார் சிந்தித்த அளவிற்கு - உலகளாவிய நிலையில் நீங்கள் தேடிப் பாருங்கள், வேறு யாராவது பெண்கள் உரிமையைப்பற்றி, பெண்கள் விடுதலையைப்பற்றி அவர்கள் சிந்தித்திருக் கிறார்களா என்று பார்க்கவேண்டும்.

உங்களுடைய தகவலுக்காக சொல்கிறேன். ஏனென் றால், வேகவேகமாக சொல்லுகின்ற நேரத்தில், உங் களுக்கு சில நூல்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

‘‘பெண் விடுதலை’’

‘‘பெண் விடுதலை'' என்ற தலைப்பில், தந்தை பெரியார் அவர்கள் பேசிய அத்தனையும் நூலாக வெளிவந்திருக்கிறது. அதை நீங்கள் எடுத்து பல்கலைக் கழகங்களில் ஆய்வு செய்யலாம்.

அதுபோல, நீண்ட காலத்திற்கு முன்பாக தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றியது ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற தலைப்பில் வெளிவந்த  உரை நூல், இன்றைக்கும் பல பதிப்புகளாக லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்திருக்கிறது.

‘‘பெண் ஏன் அடிமையானாள்?''

இதுதான் பெண்களுடைய உரிமைச் சாசனம். பெண் ஏன் அடிமையானாள்? எப்பொழுது சொன்னார், எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலத்தில், சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பு, தந்தை பெரியார் அவர்கள் எழுதி, அது இன்றைக்குப் பிரெஞ்சு மொழியில், ஆங்கில மொழியில், இந்திய மொழிகளான பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது.

எனவே, இப்படிப்பட்ட நூல்களையெல்லாம் நீங்கள் பார்ப்பதன்மூலமாக, உங்களுக்கு ஒரு கருத்து தெளி வாகும்.

உலகத்தில் இருக்கக்கூடிய பெண்ணிய சிந்தனை யாளர்கள் அத்தனை பேரையும் ஒப்பிட்டு, பெரியாரு டைய பெண் விடுதலை கருத்துகள்பற்றிய, அந்தப் புரட்சிகரமான கருத்துகளை ஒப்பிட்டுப் பார்க்கின்ற நேரத்தில்,அவருக்கு  ஒப்பாரும் இலர் - மிக்காரும் இலர் இந்தத் துறையில், அவர்களுடைய சிந்தனை அவ்வளவு வேகமான ஓட்டமாக இருக்கிறது.

ஒவ்வொன்றும் காலத்தால் முந்தியது - கருத்தால் செழுமையானது.

எங்களுடைய பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில், வெளிநாட்டு ஆய்வாளர்களையெல்லாம் அழைத்து, ஓர் ஆய்வரங்கத்தை நடத்தினோம்.

அதில், பெரியாருடைய பெண்ணிய சிந்தனைகள்- அகில உலகத்தில் இருக்கக்கூடிய பல்கலைக் கழகங்கள், ஆய்வாளர்களுக்கெல்லாம் பயன்படக் கூடிய அள விற்கு இருக்கவேண்டும் என்று சொல்லி - பெமினிசம் என்ற வார்த்தையை இப்பொழுது பயன்படுத்துகிறார்கள், மேலைநாடுகளிலும் மற்ற இடங்களில் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பெரியாரிய பெண்ணியச் சிந்தனை!

உலகத்தில் ‘‘ஸ்கூல்ஸ் ஆஃப் தாட்ஸ்'' என்று சொல்லக்கூடிய அமைப்பின் பல்வேறு சிந்தனை யாளர்களின் சிந்தனைத் தத்துவங்களை முன்னி லைப்படுத்தி, பல பேர் சொன்ன கருத்துகளை முன்னிலைப்படுத்தி வந்திருக்கிறார்கள், பெமினி சத்தைப்பற்றி.

பெரியாருடைய சிந்தனை எதன்கீழ் அடங்கு கிறது என்பதைப்பற்றி ஆய்வு செய்த நேரத்தில், மூன்று, நான்கு ஆண்டுகள், இரண்டு முறை விவாதங்கள் செய்த பிறகு, அறிவார்ந்த பேராசிரியர்கள் ஒரு கருத்துக்கு வந்தார்கள்.

என்ன அந்த கருத்து என்றால், பெரியாரிய பெண்ணியச் சிந்தனை என்பது - ஏற்கெனவே இருந்த சிந்தனையாளர்களின் பெமினிசம் என்று சொல்லக்கூடியதில் உள்ளடக்கமாக இல்லை.

ஆகவேதான், அதுவே ஒரு தனியாக இருக்கக்கூடிய அளவிற்கு, பெரியார் பெமினிசம் என்று வந்தது என்று சொல்லி, அதையே ஓர் ஆங்கில நூலாக - பெரியார் பெமினிசம் என்ற தலைப்பிலே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

எடுத்துக்காட்டாக, அடிப்படையிலே பெரியார் ஒரு கேள்வி கேட்டார்.

முதலில் பெண்களுக்கு உரிமை இருக்கிறதா இந்த நாட்டில், மதம், சனாதனம் என்ற பெயராலே. மற்ற நாடு களில் இருக்கிற பெண்ணடிமைத்தனம், பெண்ணுரிமை களுக்காகப்  போராடி இருக்கிறார்கள்.

நீண்ட நாள்களுக்கு முன்பு, மற்ற நாடுகளில்கூட இரண்டாம் பாலினம் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் புத்தகம் எழுதி, பிரான்ஸ் நாடு போன்ற இடங்களில் வெளிவந்து, அது பிரபலமாகி இருக்கிறது.

பெட்ரண்ட் ரசல்

அதேபோல, மிகப்பெரிய அளவிற்கு பெட்ரண்ட் ரசல் அவர்கள் மிக ஆழமாக சிந்தித்துப் பார்த்திருக் கிறார்கள்.  Marriage and Morals என்ற அவருடைய புத்தகம் என்பது மிக ஆழமான பெண்ணிய சிந்தனை கொண்டது.

இவற்றையெல்லாம் தாண்டி, பெரியாருடைய சிந்தனை என்பது - பெரியார் ஒரு ஒப்பற்ற  சுய சிந்தனையாளர் என்பதைப் புலப்படுத்துவதாகும்.

பெரியார் அவர்கள், எந்தப் புத்தகத்தையும் படித்துவிட்டு தன்னுடைய கருத்தை ஆழமாக ஆக்கிக் கொள்ளவில்லை. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பார்த்த அவர் அனுபவங்கள்தான் அவை.

மற்றவர்கள் புத்தகங்களைப் படித்தவர்கள் - பெரியார் மனிதர்களைப் படித்தார்.

மற்றவர்கள் பாடங்களைப் படித்தார்கள் - முன்பு என்ன நடந்தது என்று பார்த்தார்கள்.

பெரியார் தன்னுடைய  அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதையே தன்னுடைய கொள்கைகளுக்கு அடிப்படையாக உருவாக்கிக் கொண்டார்.

அதனுடைய அடிப்படையில்தான் நண்பர்களே, உங்களுக்குத் தெளிவாக சொல்லவேண்டுமானால், மிக முக்கியமான ஒன்றை உங்களுக்குச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

இரண்டு, மூன்று கேள்விகளை நான் வைத்தி ருக்கிறேன். அதற்கு நீங்கள் விடை காண முயற்சி செய்யுங்கள். இந்தக் கேள்விகளுக்கு உங்களால் விடை காண முடியவில்லை என்றால், ஒரு சில மாதங்கள் கழித்து நான் அங்கே நேரிடையாக வரும்பொழுதோ, அல்லது இடையில் இதுபோல காணொலியில் ஒரு விரிவான நிகழ்விலோ நான் பதில் சொல்கிறேன்.

சனாதன ஹிந்து மதத்தில் பெண் குழந்தை பிறப்பதற்கே தடை

மற்ற நாடுகளில் பெண் பிறப்பதற்குத் தடையில்லை. ஆனால், நம்முடைய நாட்டில், பெண் குழந்தை பிறப்ப தற்கே தடை. இதுதான் சனாதனம் - இதுதான் மதம்.

இந்த உணர்வுகளுக்கு மூளையிலே போட்ட விலங்குகள் - ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு - அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு - சனாதனப் படையெடுப்பு என்ன ஆகியிருக்கிறது என்றால், மனுதர்மத்தில் மிகத் தெளிவாக - இவையெல்லாம் கூறப்பட்டுள்ளன - இங்கே மனுதர்மம் உருவானது.

இதுதான் சட்டமாக, சட்டத்திற்கு அடிப்படையாக காலங்காலமாக இருக்கக்கூடிய நிலை.

பெண்ணுக்கு எந்தக் காலகட்டத்திலாவது சுதந்திரம் உண்டா?

இதில், பெண்ணுக்கு எந்தக் காலகட்டத்திலாவது சுதந்திரம் உண்டா என்றால், கிடையவே கிடையாது.

ஒரு பெண் குழந்தை பிறந்தால், அவர்கள் வளரு கின்ற வரையில், தந்தையின் கட்டுப்பாட்டில்தான் - கண்காணிப்பில்தான் வளரவேண்டும் - சுதந்திரம் கிடையாது.

அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆனவுடன், கணவன்தான் எஜமானன்.

மகன் பிறந்த பிறகு, மகன் கண்காணிப்பில்தான்.

எந்தக் காலகட்டத்திலும் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்,

முதலில் பெண்கள் பிறப்பதற்கு உரிமை இருக்கிறதா? என்றால், இல்லை.

மற்ற நாடுகளில், தாய்ப்பாலை கொடுத்து குழந்தை களை வளருங்கள்; புட்டிப்பாலை கொடுத்து குழந்தை களை வளருங்கள் என்று சொல்வார்கள். தாய்ப்பாலோ, புட்டிப்பாலோ குழந்தைகளை வளர்க்கச் சொல்கிறார்கள்.

பாலுக்குப் பதிலாக, கள்ளிப்பால் கொடுக்கிறார்கள்

ஆனால், நம்முடைய நாட்டில் பரிதாபத்திற்குரிய நிலை - இன்னமும் சில இடங்களில் பாலுக்குப் பதிலாக, கள்ளிப்பாலை கொடுத்து பெண் குழந்தையை அழிக்கக் கூடிய நிலை இருக்கிறது.

கருவில் உருவானது பெண் குழந்தையா? கருவி லேயே அழிக்கிறார்கள். குழந்தையில் என்ன பெண் குழந்தை? ஆண் குழந்தை? காலங்காலமாக இதுதான் பேதம்.

எனவே, ஆண் என்று சொன்னால், புத்திரன் - புத்தென்ற நரகத்திலிருந்து காப்பாற்றுவதற்காகத்தான் புத்திரன். இப்படி ஒரு சிந்தனையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கு முதலில் பிறப்பதற்கு உரிமை உண்டா?

இந்த இயக்கம் இல்லாவிட்டால், இந்த நிலை எப்படி வந்திருக்கும் என்பதை நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.

பேராசிரியர் சத்தியநாத அய்யர்

இந்திய சரித்திரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சத்தியநாத அய்யர் எழுதியிருக்கின்ற புத்தகத்தில்,

1800-களில், 19 ஆம் நூற்றாண்டில் பயிர்கள் சரியாக வளரவேண்டும் என்று சொன்னால், அந்தப் பயிர்கள் செழுமையாக வளருவதற்குப் பெண் குழந்தைகளை நரபலி கொடுத்திருக்கிறார்கள். அதேபோல, பெண் குழந் தைகளைக் கெடுத்திருக்கிறார்கள் போன்ற தகவல்கள் உள்ளன.

வெள்ளைக்காரர்களான பிரிட்டிஷ்காரர்கள் வந்து அதைத் தடுக்க சட்டம் போட்டு இருக்கிறார்கள். இந்த சட்டம் வராவிட்டால், பெண் குழந்தை பிறந்த பிறகுகூட, வாழுகின்ற உரிமை அவர்களுக்கு இல்லாத சூழ்நிலை இருந்தது.

பேராசிரியர் .சுப்பிரமணியம்

பேராசிரியர் .சுப்பிரமணியம் மிகப் பிரபலமான வரலாற்று ஆசிரியர். இது ஒரு பல்கலைக் கழகம் ஆனதால், நான் ஒரு பல்கலைக் கழகத்தின் வேந்தர் என்ற முறையிலும்கூட ஆய்வுக் கண்ணோட்டத்தோடு உங்களுக்குச் சொல்கிறேன். இது பொதுக்கூட்ட மேடை யல்ல - அறிவார்ந்த மிக முக்கியமான ஆய்வாளர்கள் கூட்டத்தில் பேசுகின்றேன் என்ற உணர்வோடு உங்களுக்கு அதனைச் சுட்டிக்காட்டுகிறேன்.

ஆகவே, பெண்களுக்கு முதலில் பிறப்பதற்கு உரிமை உண்டா? இது எவ்வளவு பெரிய கொடுமையான சூழல். அதையும் தாண்டி இன்றைக்குப் பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள், வளர்ந்திருக்கிறார்கள்; ஆளுமைக்குத் தயாராகி இருக்கிறார்கள்; ஆண்களை விட சிறப்பாக இருக்கிறார்கள்; போட்டித் தேர்வுகளில் ஆண்களைவிட, பெண்கள்தான் வெற்றி பெறுகிறார்கள். அறிவும், ஆற்றலும் யாருக்கும் தனி உடைமையல்ல - அது வாய்ப்பைப் பொறுத்தது என்பதை நிரூபித்துக் காட்டக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது என்றால், தந்தை பெரியார், அவருடைய தொண்டு அதற்குக் காரணம்.

பாரதி சொல்லியிருக்கிறாரே என்று கேட்கலாம்!

பெரியார் என்ற ஒரு மாமனிதர் பிறந்திருக்காவிட்டால், தமிழ்நாட்டில் இந்த நிலை வந்திருக்குமா?

சிலர் கேட்கலாம், ஏன் பாரதி, சொல்லவில்லையா? பெரியாருக்கு முன்பே பாரதி சொல்லியிருக்கிறார் என்று பலரும் கூட இப்போது, மாணவர்களில்கூட பலர் ‘‘பாரதி கண்ட புதுமைப் பெண்'' என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள்.

பெண்ணுரிமையைப் பற்றி பாரதி எழுதியிருக்கிறார், பெரியார் பிறப்பதற்குமுன், அவருடைய காலகட்டம் முந்தையது. வரவேற்கத்தகுந்தது, பாராட்டத்தகுந்தது. அதை ஒன்றும் குறை சொல்வதற்கு இல்லை.

பாரதி கண்டது புதுமைப் பெண் என்றால், பெரியார் கண்டது புரட்சிப் பெண்.

புதுமைப் பெண்ணுக்கும் - புரட்சிப் பெண்ணுக்கும் மிகப்பெரிய அளவிற்கு வேறுபாடு உண்டு.

அந்தப் புரட்சிப் பெண், தனக்கு உரிமை உண்டு - என்னுடைய உடல்மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடி யாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு - உங்களுக்கு என்ன உரிமை என்று கேட்கக்கூடிய சிந்தனைக்கு ஆளாகியிருக்கிறார்களே, அவர்கள் புரட்சிப் பெண்.

இராணுவத்தில் எங்களால் முடியும் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இன்றைக்கும் போராடிக் கொண்டி ருக்கிறார்கள்.

நேற்றுதானே உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. தேசிய அகாடமியில், பெண்களுக்கு ஆண்களைப் போல - இராணுவத்தில் சம வாய்ப்பைக் கொடுக்காத சூழ்நிலையில், கொடுக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தலையில் கொட்டி சொல்லியபொழுது, இந்த ஆண்டு செய்ய முடியாது என்று சொன்னவுடன், ஏன் முடியாது? இந்த ஆண்டே செய்யவேண்டும் என்று சொல்லிற்று.

2021 ஆம் ஆண்டில்கூட இந்தப் போராட்டம் தொடர்கிறது.

1929 மாநாட்டில் தீர்மானம்!

பெண்களைப் படிக்க வைத்தார்கள் - தந்தை பெரியார் 1929 இல் - 92 ஆண்டுகளுக்கு முன்பு - செங்கற் பட்டு முதல் மாகாண மாநாட்டில் தீர்மானம் போடுகிறார்.

பெண்களுக்கு, காவல்துறை, இராணுவத்தில் எல்லாத் துறைகளிலும் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று.

இன்றைக்கு நாம் அதைப் பார்க்கிறோமே, பெண்கள் காவல்துறை அதிகாரிகளாக வரவில்லையா? இராணுவ அதிகாரிகளாக வரவில்லையா? விமானத் துறையில் பயிற்சி பெறவில்லையா?

அதனால் என்ன கெட்டுப் போய்விட்டது?

பெண்கள் எந்தத் துறையில் பின்தங்கிவிட்டார்கள்? எதிலே அவர்கள் தோற்றுவிட்டார்கள்? இல்லையே!

திறந்திருந்தால்தட்டவேண்டிய அவசியமே இருக்காது

வாய்ப்பு மறுக்கப்பட்டது - கதவு திறக்கப்படவில்லை. மூடப்பட்ட அந்தக் கதவை ‘‘தட்டுங்கள் திறக்கப்படும்'' என்று பைபிளில் ஒரு வாசகம் உண்டு. அங்கே கூட மூடித்தான் வைத்திருக்கிறார்கள். திறக்காத காரணத்தி னால்தான், தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன் னார்கள். திறந்திருந்தால், தட்டவேண்டிய அவசியமே இருக்காது.

அதேநேரத்தில், அப்படித் தட்டுங்கள் என்று சொல்வதற்கு முன்பு, பெரியாருடைய கைத்தடி இருக்கிறதே, திறக்காவிட்டால், இந்தக் கைத்தடி உடைக்கும் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகுதான், அந்த வாய்ப்புகள் கிட்டியது.

பெண்களுக்கு 50 சதவிகித

இட ஒதுக்கீடு வரவேண்டும்!

பெரியாருடைய சிந்தனை - மக்கள் தொகையில் பெண்கள் சரி பகுதியாக இருக்கிறார்கள். ஆகவே, பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வர வேண்டும் என்று சொன்னார் தந்தை பெரியார்.

உலக அளவிற்கு ஆய்வாளராக இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெரியாரைப் பேட்டி கண்டபொழுது கேட்டார், ‘‘ஆண்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்களா; வருத்தப்பட மாட்டார்களா?'' என்று கேட்டார்.

உடனே பெரியார் அவர்கள், கணினியிலிருந்து பதில் வருவதுபோன்று பளிச்சென்று சொன்னார், ‘‘ஏன் வருத்தப்படவேண்டும்? பெண்களுக்கு 50 விழுக்காடு என்றால், அவருடைய மகளுக்குக் கிடைக்கிறதே, அவருடைய சகோதரிக்குக் கிடைக் கிறதே, அவருடைய மனைவிக்குக் கிடைக்கிறதே, அதனால் ஆண்களுக்கு என்ன வருத்தம்?'' என்று கேட்டார்.

எனக்கெல்லாம் தோன்றவில்லையே, என்று அந்த அமைச்சர் வியப்படைந்தார்.

திராவிடர் இயக்க ஆட்சி மலர்ந்த காரணத்தி னால்தான் பெண்களுக்கு 30 சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீடு, இன்றைக்கு 40 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

பெண்களுடைய வாக்குரிமைதானே பல ஆட்சிகளை நிர்ணயிக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.

முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது திராவிட இயக்கம்!

பெண்களுக்கு வாக்குரிமையை கொடுத்தது, ஜஸ்டிஸ் கட்சி, தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் ஆட்சி, பனகல் அரசர் - 1922-1923 கால கட்டத்தில், இந்தியாவிலேயே ஏன், உலகத்தின் பல நாடுகளில் வராத காலகட்டத்தில் பெண்களுக்கு வாக்குரிமையை முதன் முதலில் கொடுத்தது திராவிட இயக்கம். அதனால்தான் ‘‘திரவிடியன் மாடல்.''

பெண்களுக்குப் படிப்புரிமை, வாழ்வுரிமையற்ற மக்களுக்கு,  பிறப்பதற்கே உரிமையற்ற மக்களுக்குப் படிப்புரிமை வேண்டும் என்று சொன்னார்கள்.

ஏன் அவர்களுக்குப் படிப்புரிமை இல்லை -  மறுபடியும் அம்பேத்கரைப் பார்த்தோம். படிக்கட்டு ஜாதி முறையில்,

‘‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்‘’

பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று நான்கு ஜாதி - மற்றவர்கள் எல்லாம் அவர்ணஸ்தர்கள் - பஞ்சமர்கள். தாழ்த்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் என்று என்னுடைய சகோதரன் பிரிக்கப்பட்டான். அதற்கும் கீழே நம்முடைய சகோதரிகள், எல்லா ஜாதிகளையும் சேர்ந்தவர்கள். முற்போக்கு முன்னேறிய ஜாதிப் பெண்களாக இருந்தாலும்கூட, அத்தனைப் பெண்களும் கீழானவர்களிலும் கீழானவர்கள் - இது தானே கிரேடெட் இன் இக்குவாலிட்டி - இதுதானே வருணாசிரம தர்மம் - இதைத்தானே இந்த நாட்டுக் கடவுள்கள் போதித்தன - பகவத் கீதையில், பகவான் கண்ணன் என்று எல்லோரும் பெருமையாக சொல் கிறார்களே, அதிலிருந்து ஒரு வரியைச் சொன்னால், தாங்கள் மிகப்பெரிய அறிவாளியாகக் கருதப்படுகிறோம் என்ற அளவிற்கு உருவாக்கி வைத்திருக்கிறார்களே, அந்தப் பகவத் கீதையில் என்ன எழுதி வைத்திருக் கிறார்கள்?

‘‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்'' - நான்கு ஜாதிகளை நானே உண்டாக்கினேன். சுதர்மா - நானே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பது ஒரு பகுதி.

இன்னொரு பகுதியில், சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தார்கள் என்று.

கொச்சைப்படுத்தப்பட்டு இருக்கிறதா? இல்லையா? இந்தக் கொடுமைகளை எதிர்த்துப் பேராடியவர் யார்? பெரியார் என்ற மாமனிதர்தான்.

யாருக்காக? இந்த சமுதாயத்திற்காக  - மானுடப் பற்று - வளர்ச்சிப் பற்று - அறிவுப் பற்று - அதுதான் அவர்களை மிகப்பெரிய அளவிற்கு உயர்த்திக் காட்டக்கூடிய அளவிற்கு, மிகச் சிறந்ததாக இருக்கக்கூடிய ஒரு வாய்ப்பைப் பெற்றார்கள்.

எனவே, நண்பர்களே! இன்னொரு தகவலையும் உங்களுக்குச் சொல்லவேண்டும்.

பெண்களுக்குச் சொத்துரிமை

பெண்களுக்குச் சொத்துரிமை - பெண்கள் அடிமை கள் - சூத்திரர்களுக்கு எப்படி சொத்துரிமை கிடையாதோ - திருமண உரிமை கிடையாதோ அதுபோல, பெண் களுக்குச் சொத்துரிமை கூடாது என்பதுதான் சனாதன மதம் - இதுதான் வேத மதம் - இது பிராமணிய மதம் - இதுதான் பார்ப்பன மதம்.

இதை எதிர்த்துப் பெரியார் மிகப்பெரிய அளவிற்கு 92 ஆண்டுகளுக்கு முன்பு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தீர்மானம் போட்டார்.

களத்தில் நின்று போராடி, அது வெற்றி அடைந்ததை, அவரே பார்த்து ரசித்த ஒரே தலைவர் தந்தை பெரியார்!

பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்று.

மற்றவர்கள், அதற்கு முன்பாகக் கூட சொல்லி யிருக்கலாம்; அவர்கள் எழுதியிருப்பார்கள், பாடியிருப்பார்கள், பேசியிருப்பார்கள். களத்திலே நின்று, அதனைச் செயல்படுத்துவதற்குக் கடைசி மூச்சுவரை போராடிய ஒரே ஒருவர், போராளியாக நின்ற ஒரு தலைவர் - அவரே சிந்தனையாளர் - அவரே லட்சியத்தை உருவாக்கியவர் - அவரே அமைப்புகளையும் உருவாக்கி, பிரச்சாரம் செய்தவர். அவரே களத்தில் நின்று போராடி, அது வெற்றி அடைந்ததை, அவரே பார்த்து ரசித்த ஒரே தலைவர் தந்தை பெரியார்.

பெண்களுக்குச் சொத்துரிமை என்ற தீர்மானத்தை 1929 இல்  போட்டார். எங்களைப் போன்றவர்கள் பிறக் காத காலம். நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 5 வயது குழந்தையாக இருந்தவர். பிறகு 1969 இல் ஆட்சிக்கு வருகிறார், முதலமைச்சராக - திராவிட ஆட்சி - திராவிட மாடல்.

இந்தியத் திருநாட்டில், பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டத்தை தமிழ்நாட்டில் முதன்முறையாக நிறைவேற்று கிறார். அதற்கு என்ன அடிப்படை? திராவிடர் இயக்கம். தத்துவ கர்த்தா யார்? தந்தை பெரியார்.

பதவி முக்கியமல்ல - கொள்கை முக்கியம்!

அதற்கு முன்பு 1952-1954 காலகட்டத்தில், மிகப்பெரிய அளவிற்கு, சுதந்திர இந்தியாவினுடைய அரசமைப்புச் சட்டத்தை எழுதியவர் என்ற அளவிற்குப் பெ:ருமை படைத்த பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், இண்டு கோட் பில் என்று சொல்லி, இந்து சட்டத் திருத்தத்தை செய்யவேண்டும் - எல்லோருக்கும் அந்த உரிமைகளைக் கொடுக்கவேண்டும் - பெண் களுடைய அடிமைத்தனத்தைப் போக்கவேண்டும் என்பதற்காக, பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தாரே - அதற்காக அவருக் குத் தொல்லைகள் கொடுக்கப்படவில்லையா? சனா தனம் அவரை விரட்டவில்லையா? நாடாளுமன்றத்தில், அவர் மிகப்பெரிய அளவிற்கு மனப்புழுக்கத்திற்கும், மன இறுக்கத்திற்கும் ஆளாகி, அந்த சட்டத்தை நிறை வேற்ற முடியாவிட்டால், எனக்குப் பதவி முக்கியமல்ல - கொள்கை முக்கியம் என்று சொல்லி வெளியேறியவர் அம்பேத்கர் அவர்கள்.

இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியது. திராவிட மாடல்

அன்றைக்கு அவரால் அந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், பெரியாரு டைய குருகுலத்தில்  படித்த கலைஞர் அவர்கள், முதலமைச்சராகி, அதை சட்டமாக ஆக்கி,  இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியது, திராவிட மாடல்.

திராவிட மாடல் என்றால் என்ன?

2006 ஆம் ஆண்டு தி.மு.. ஒன்றிய ஆட்சியில் இடம்பெற்றதினுடைய விளைவாக, பெண்களுக் குச் சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு வந்து - இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் அந்தச் சட்டத்தின் பயன் உள்ளது.

திராவிடம் நின்றது - வென்றது!’

எந்த இடத்தில் அந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல், அம்பேத்கர் அவர்களுக்குத் தொல்லை கொடுத்து வெளியேற்றினார்களோ, அந்த இடத்தில், ‘திராவிடம் நின்றது - வென்றது.'

பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருந்தபொழுது பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

நம்முடைய நாட்டில் ஒன்றைச் சொல்வார்கள், ஆசைக்கு ஒரு பெண் - ஆஸ்திக்கு ஒரு ஆண் என்று.

ஆஸ்தி ஆணுக்கு - ஆசை பெண்ணுக்கு என்று சொன்னால், அதற்கு என்ன அர்த்தம்? பிறகு அதைக்கூட விரும்பவில்லை. பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கக்கூடிய அளவிற்கு இருந்தது.

பெண்களுக்கு வாழ்வுரிமைபடிப்புரிமை - சொத்துரிமை!

எனவேதான் நண்பர்களே,

வாழ்வுரிமையைத் தந்தவர் தந்தை பெரியார் -

படிப்புரிமையை தந்தவர் தந்தை பெரியார் -

சொத்துரிமை தந்தவர் தந்தை பெரியார் -

உங்களை சுதந்திரமாக சிந்திக்கச் சொன்னவர் தந்தை பெரியார் -

எல்லாவற்றையும்விட, கடைசியாக அவர் ஒவ்வொரு கூட்டத்திலும், எழுதும்போதும் தந்தை பெரியார் சொல்வார்,

‘‘நான் சொல்லுகிறேன் என்பதற்காக நம்பாதீர்கள்; யார் சொல்வதையும் கேட்டு நம்பாதீர்கள். உங்கள் அறிவு என்ன சொல்கிறதோ அதன்படி நடவுங்கள்; நீங்கள் சுதந்திரமாக சிந்தியுங்கள்'' என்று சொன்னார்.

பெண் ஏன் அடிமையானாள் என்பதில், ‘‘உங்கள் சுதந்திரத்திற்காக ஆண்கள் போராடினால், அதை ஏற்காதீர்கள்; நீங்களே போராடுங்கள்'' என்று

சொன்னார்.

உரிமை என்பது கேட்டுப் பெறுவது அல்ல!

இங்கே உரையாற்றிய பேராசிரியர் அவர்கள், ‘‘உரிமை என்பது கேட்டுப் பெறுவது அல்ல; கேட்டுப் பெறுவது என்பது சலுகை. உரிமை என்பது, தானே எடுத்துக்கொள் வதுதான்'' என்று.

ஒருவர் கொடுத்தால், கொடுத்தவருக்குத் திரும்ப வாங்குவதற்கு உரிமை உண்டு. நாம் எடுத்தால், அது நமக்கே உரிமை உண்டு.

இதுதான் நண்பர்களே, பெரியாரின் தனித்த உண்மை!

இன்னும் ஏராளம் இருக்கிறது - இதுதான் இமயமலை என்று நான் உங்களுக்கு செல்போனில் படம் எடுத்துக் காட்டியிருக்கிறேன், அவ்வளவுதான். செல்போன் சிறிது - நேரம் சிறிது - எனவே மீண்டும் சந்திப்போம்!

என்னுடைய அருமைச் சகோதரர் பாவலர் அறிவுமதி அவர்களுடைய உரையை நேரில் கேட்க முடியா விட்டால், பிறகு கேட்டு தெரிந்துகொள்வேன்.

திராவிட நல் திருநாடும்

மனோன்மணியம் சுந்தரனார் அவர்களை, எல்லா மேடைகளிலும் எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடிய அளவிற்கு, நம்முடைய முத்தமிழிறிஞர் கலைஞர் செய்தார்.

திராவிட நல் திருநாடும்' என்று சொல்லும்பொழுது, எழுந்து நின்றுதான் எவராக இருந்தாலும் மரியாதை செலுத்துகிறார்கள். அந்தப் பெருமை உங்கள் பல்கலைக் கழகத்திற்கும், யாருடைய பெயரில் அந்தப் பல்கலைக் கழகம் அமைந்திருக்கிறதோ, அவருக்கே உரியது.

அந்தப் பெருமை உண்டாக்கிய, திராவிட மாடல் ஆட்சி நீடிக்கின்றபொழுது, அனைவருக்கும் வாழ்த்து கள்!

வாழ்க பெரியார்!

வருக பெண் விடுதலை!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment