முல்லைப்பெரியாறு அணை வழக்கு நான்கு வாரத்துக்குள் ஒன்றிய அரசு அறிக்கை அளிக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

முல்லைப்பெரியாறு அணை வழக்கு நான்கு வாரத்துக்குள் ஒன்றிய அரசு அறிக்கை அளிக்க வேண்டும்

உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை,அக்.10- முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்புப் பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக்கோரிய ஜோ ஜோசப் மனு, கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான முல்லைப் பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி கொச்சியை சேர்ந்த சுரக்ஷா அறக்கட்டளை தாக்கல் செய்த மேல்முறையீடு மனு ஆகியவற்றை இணைத்து உச்சநீதிமன்ற நீதிபதி .எம்.கான்வில்கர் தலை மையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய அணையின் நீர்மட்டத்தை மாதந்தோறும் வைத்துக்கொள்வது குறித்த அட்டவணை, அணையின் மதகுகளை திறப்பது குறித்த அட்டவணை ஆகியவற்றை ஒன்றிய நீர்வள ஆணையத்தின்கீழ் செயல்படும் அணை கண்காணிப்புக் குழு 4 வாரங்களுக்குள் உருவாக்கி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த மார்ச் 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில்,  8.10.2021 அன்று மீண்டும் நடைபெற்ற விசாரணையின் போது, கடந்த உத்தரவின்படி, அறிக்கை சமர்ப்பிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம் தேவை என ஒன்றிய நீர்வள ஆணையத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அய்ஸ்வர்யா பாட்டி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற நீதிபதிகள், அக்டோபர் 21ஆம் தேதி அல்லது அதற்கு முன் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


No comments:

Post a Comment