இராவண காவிய நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, அக்.17 கலையை, கலையின் வாயிலாகவே மக்களுக்குப் புரிய வைக்கவேண்டும் என்பதற்காக இந்த இயக்கம் அறிவார்ந்த கருத்துகளை மக்களிடையே பரப்பி இருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 11.10.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில் “புதுமை இலக்கியத் தென்றல்” சார்பில் நடைபெற்ற “வெல்லும் தூய தமிழ்” (மாத இதழ்) ஆசிரியரும், 43 நூல்களை யாத்தவரும், புதுச்சேரி மாநில அரசால் ‘தமிழ் மாமணி’ விருது பெற்றவரும், தனித் தமிழ் ஆர்வலரும், பகுத்தறிவாளருமான முனைவர் மானமிகு க. தமிழ மல்லன் அவர்களின் “இராவண காவிய ஆய்வுரை” நூலை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
விபீடணனை இராமாயணத்தில் சொல்வார்கள் - ‘என்றும் சிரஞ்சீவி' என்று. சிரம் சீவி - தலையை வெட்டுகிறவன்.
விபீடணர்கள் என்றைக்கும் இருப்பார்கள் என்றார் தந்தை பெரியார் - அது சரியானதுதான். எப்படி என்றால்,
அன்றைக்கு விபீடணர் ஒரு ரூபத்தில் இருந்தான். இன்றைக்கு பல ரூபத்தில் வருகிறார்கள்.
தமிழையே பயன்படுத்துகிறார்கள்; தமிழரையே பலிகடா ஆக்குகிறார்கள் விபீடணக் கூட்டத்தினர்.
‘கோதைத் தீவில்' - வ.ரா.
இதை நான் சொல்லவில்லை, வ.ரா. இன்னும் அதிகமாகச் சொல்லியிருக்கிறார், கோதைத் தீவில்.
பெரிய அளவிற்கு நம்முடைய நாடு கெட்டுப் போனதற்குக் காரணம் என்ன? விபீடணர்களைப் போற்றிப் புகழ்வது என்று என்றைக்குத் தொடங்கி னார்கள்? காட்டிக் கொடுக்கின்றவனைப் போற்றுவது என்பதைவிட, மிகப்பெரிய ஒழுக்கக்கேடு நாட்டில் வேறு கிடையவே கிடையாது என்று சொல்லியிருக் கிறார்.
ஆகவே நண்பர்களே, மேலும் புரட்சிக்கவிஞர் அவர்கள்,
வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை, நல்யாழின் நரம்புதனைத் தடவி
நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன், மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்!
இன்றைக்கு சழக்கர்கள்தான் தமிழர்கள் என்ற பெயரில் பல பேர் உலாவுகிறார்கள்.
அப்படிப்பட்ட காலகட்டத்தில் இன்றைக்கு இந்த நூல் வெளியிடப்பட்டு இருக்கின்றது.
ஏ.கே.இராமானுஜம் எழுதிய முந்நூறு இராமாயணங்கள்!
மிகப்பெரிய ஓர் ஆய்வாளரான ஒரு நண்பர் சிகாகோ பல்கலைக் கழகத்தில் இருந்து மறைந்த வர் ஏ.கே.இராமானுஜம் அவர்கள், ‘‘Three Hundred Ramayanas'' என்று ஆய்வுக் கட்டுரை எழுதியிருக் கிறார். நிறைய செய்திகள் இருக்கின்றன அதில். அதை டில்லி பல்கலைக் கழகத்தில் பாடமாக வைத்திருந் ததை, இப்போதைய ஒன்றிய அரசு எடுத்துவிட்டது.
இன்றைக்கும் ஆய்வாளர்கள் சிந்திக்கிறார்கள். பத்து தலை, பத்து தலை என்றால் இராவணன், அரக்கன், அவனுக்குப் பத்து தலை இருந்தது என்று சொல்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து, அண்ணா முதலமைச்சராகி ஆறு மாதம் ஆகியி ருக்கிறது. தருமபுரியில் உள்ள பெரியார் இராமசாமி கல்வி நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யா பெயரில் ஒரு புதிய கட்டடத்தைக் கட்டிக் கொடுக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு தந்தை பெரியார் அவர்களுக்கு அருகில் முதலமைச்சர் அண்ணா அவர்களும், ‘விடுதலை' ஆசிரியர் என்ற முறையில் நானும் இருந்தேன்.
அந்த நிகழ்வில் அண்ணா உரையாற்றும்பொழுது, பாடத் திட்டங்களைப்பற்றி சொல்லும்பொழுது, நம்மு டைய பாடத் திட்டங்கள் பகுத்தறிவுக்கு உகந்ததாக இல்லை. பழைய கருத்துகளைத்தான் பாடத் திட்ட மாக வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
‘‘உங்கப்பனையே போய் கேள்!’’
அண்ணா உரையாற்றும்பொழுது சொன் னார், ‘‘காஞ்சிபுரத்தில், தமிழ் வகுப்பில் என் மகன் படித்துக் கொண்டிருந்தபொழுது, இராவ ணனுக்குப் பத்து தலை என்று பாடப் புத்தகத்தில் இருப்பதைப் பார்த்து, வகுப்பாசிரியரிடம் கேள்வி கேட்டார், ‘‘பத்து தலை என்று சொல் கிறீர்களே அய்யா, குறுக்கு வாட்டத்திலா, நெடுக்கு வாட்டத்திலா?'' என்று.
உடனே அந்தத் தமிழாசிரியருக்குக் கோபம் வந்து, ஓங்கி ஒரு அறை அறைந்து, ‘‘உங்கப்ப னையே போய் கேள்'' என்று சொல்லியிருக்கிறார்.
இந்த நிகழ்வை நகைச்சுவையாக சொல்லிய அண்ணா அவர்கள், அந்தக் கேள்விக்கு என்ன பதில் என்பதைப்பற்றி அவருக்குச் சிந்தனை இல்லை - யாருடைய மகன் இந்தக் கேள்வியைக் கேட்கிறான் என்பதற்காகத்தான் அவர் அப்படிச் சொன்னார் என்றார்.
சயாங் தேசத்து ராமாயணம்
ஏன் இந்த நிகழ்வைச் சொல்கிறேன் என்றால், காரணம் இருக்கிறது - நான் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுக்குச் சென்றேன். அங்கே சில ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தது - அதில், இராமாயணக் கதை - இராவண உருவம் இருக்கிறது - அங்கே வித்தியாசமான சயாங் தேசத்து ராமாயணம் - அங்கே இராவணன் உருவம் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், சட்டிப்பானை அடுக்குவதுபோன்று, ஒரு தலைக்கு மேலே மேலே என்று பத்து தலைகள் வரையப்பட்டு இருந்தன.
அப்படி என்றால், பையன் கேள்வி கேட்டதில் தவறில்லை; தெருக்கூத்து - நாடகத்தில்கூட இராவ ணன் வேடம் போடுபவர் பத்துத் தலைகளை மாட்டிக் கொண்டு, அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் திரும்பி வசனம் பேசுவார்.
பையனுக்கு என்ன சந்தேகம் என்றால், படுக்கும் பொழுது எப்படி படுப்பார் அவர்? ஏனென்றால், ஸ்பிரிங் போன்று பத்து தலை அப்படியே நிற்கும். அதற்காகத்தான் அந்தக் கேள்வியை கேட்டான்.
இயற்கையாக மனிதனுக்கு சிந்திக்கின்ற பண்பாடு இருந்தால் கேட்பார்கள்.
ஆசிரியர் பையனை அடித்தவுடன், அந்த ஞாபகம்தான் வந்தது என்றார் அண்ணா.
ஆக, இராவணனுக்கு எத்தனைத் தலை? எத்தனை திசை? எல்லாம் ஒரு பக்கத்தில் விளக் கங்கள், வியாக்கியானங்கள் இருக்கலாம். அடிப்படை யில், நடந்திருந்தால், இதுபோன்ற பல சிந்தனைகள் இருக்காது - முந்நூறு இராமாயணத்தில், இராவண னுக்கும், சீதைக்கும் என்ன நிலை? மற்றவை என்ன? என்பதைப்பற்றியெல்லாம் இருக்கும்.
இராவண காவியத்திற்கு அடிப்படை என்ன?
அந்த வகையில், ஓர் இலக்கியத்தில், ஒரு பண் பாட்டுப் படையெடுப்பை அடிப்படையாக வைத்து, வரலாற்று ரீதியாக ஆரியம் எப்படி பண்பாட்டு அடிப்படையில் வந்தது? என்பதற்கு மிகப்பெரிய அளவிற்கு ஆதாரங்களை வைத்து, அதை அடிப் படையாகக் கொண்டு இராவண காவியம் உருவாக் கப்பட்டது.
இராவண காவியத்திற்கு அடிப்படை என்ன?
ஆய்வு!
இன்றைய (11.10.2021) விடுதலையில் இரண்டாம் பக்கத்தில் வெளிவந்த ஒரு ஆய்வுக் கட்டுரையில்,
‘‘1800 ஆண்டுகளுக்கு முன்னர் வார்க்கப்பட்ட குஷான் வம்சத்தினரின் ஆட்சிக் காலத்து நாண யங்களில், நிறைய கொம்புகளைக் கையில் வைத் திருக்கும் ஒரு பெண்ணின் உருவத்தை நம்மால் காண இயலும். ரோமாயர்களின் பெண்தெய்வம் ஃபார்சுனாவுடனும், கிரேக்கர்களின் பெண் தெய்வம் டைச்சுடனும், மத்திய ஆசியாவைச் சேர்ந்த அர்டாச்ஷோவுடனும், புத்த மதத்தைச் சார்ந்த ஹரிதியுடனும் இந்து மத பெண் கடவுள் லட்சுமி என்ற இந்த பெண் உருவம் அடையாளம் காணப்படுவதை நாம் பார்க்கலாம். தொடக்க கால புத்த ஸ்தூபங்களிலும், பதக்கங்களிலும் லட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இன்றைய இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் காணப்படும் உருவத்தைப் போலவே, தாமரை மலர்கள் நிரம்பியிருக்கும் ஒரு குளத்தில், யானைகளால் சூழப்பட்டு, ஏராளமான நகைகளால் அலங்கரிக்கப்பட்ட லட்சுமி நின்று கொண்டு இருப் பது சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றுக் கிடையே மிகமிக முக்கியமானதொரு வேறுபாடு உள்ளது. லட்சுமியின் பழைய சித்திரத்தில் இரண்டு கைகளைக் கொண்டவராகத்தான் அவர் காட்டப் பட்டுள்ளாரேயன்றி, இன்றைய உருவங்களில் இருப்பதுபோல நான்கு கைகளைக் கொண்டவராகக் காட்டப்படவில்லை.''
இதெல்லாம் எப்பொழுது வந்தது என்றால், கிரேக்கத்தைப் பார்த்து, பிறகு அதிலேயிருந்து ஒரு கடவுளை உருவாக்கி, அவர்கள் கைவிட்ட பிறகு, புதிதாக வந்தது என்று ஒடிசாவில் இருக்கக்கூடிய ஆய்வாளர் தேவதத் பட்நாயக் என்பவர் எழுதிய கட்டுரை, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு ‘விடு தலை'யில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
பெரியார் ஒரே வார்த்தையில் சொன்னார், இத்தனை தலை, இத்தனை கைகளையெல்லாம் வைத்திருக்கிறான். ஆனால், கால்கள் இரண்டைத் தான் வைத்திருக்கிறார்கள். ஏனென்றால், நிறைய கால்கள் வைத்தால், அவனால் நிற்க முடியாது என்ப தற்காகத்தான்.
இராமன் தெய்வமாக்கப்பட்டான்; அதனால், இராவணன் அசுரனாக்கப்பட்டான்
ஆக, பகுத்தறிவு அடிப்படையில், எந்தக் கற்பனை யாக இருந்தாலும், அதை மறுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
அண்ணா சொன்னதுபோன்று, இராமன் தெய்வமாக்கப்பட்டான்; அதனால், இராவணன் அசுரனாக்கப்பட்டான் என்று இரண்டே வரிகளில் சொன்னார்.
அது காவியமாக வருகின்றபொழுது, அதனுடைய தத்துவம் என்ன? இலக்கியம் என்ன?
இலக்கியம் என்பது, சிறந்த எண்ணங்களுடைய உயர்ந்த தொகுப்புதான்.
இதுதான் இலக்கியத்திற்கான வரையறை என்றார் எமர்சன் என்கிற அறிஞர்.
அப்படி இருக்கும்பொழுது, அது ஓர் இலக்கியம் என்றால், அதை நீங்கள் நம்பும்பொழுது, அதைவிட அற்புதமான இலக்கியம் என்றால், இரண்டு கருத்து இருக்கவேண்டுமா? இல்லையா?
அதையும் படிக்கட்டும்; இதையும் படிக்கட்டும். ஆனால், அப்படி விடுவதற்கு எதிரிகளுக்கு மனம் வரவில்லை.
அண்ணா அவர்கள் முதலமைச்சரான பிறகுதான், தடை நீக்கப்பட்டது
உடனே அதைத் தடை செய் என்றார்கள். பல ஆண்டுகாலம் தடை செய்யப்பட்டது.
திராவிட இயக்க ஆட்சி வந்த பிறகுதான், அண்ணா அவர்கள் முதலமைச்சரான பிறகுதான், அந்தத் தடை நீக்கப்பட்டது.
ஆகவே, ஒரு பெரிய வரலாறு இதற்குப் பின் இருக்கிறது. ஒரு பெரிய பண்பாட்டு வரலாறு இருக் கிறது. அந்தப் பண்பாட்டு வரலாற்றை ஆழமாகச் சிந்திக்கவேண்டும்.
ஒரு செய்தியை உங்களுக்கு அறிமுகத்திற்காக சொல்கிறேன்.
பெரியாருடைய அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் முன்னுரை
முன்னீர்பள்ளம் பேராசிரியர் மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளையின், Ravana Degenerate என்ற ஆங்கில நூலினுடைய மொழி பெயர்ப்பை - தந்தை பெரியார் அவர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு, குடியரசுப் பதிப்பகத்தின் மூலமாக 1936 இல் வெளியிட்டார்.
இந்த நூலின் முதற்பதிப்பிற்கு முன்னுரையை யார் எழுதியது என்றால்,
1936, மே 20 ஆம் தேதியன்று, பதிப்பாளர் ஈ.வெ.கிருஷ்ண சாமி அவர்கள் எழுதியிருக்கிறார். பெரியார் அவர் களுடைய அண்ணன் - ஈ.வெ.கி. சம்பத் அவர் களுடைய தந்தையார்.
அந்தக் காலகட்டத்திலேயே அய்யா அவர்கள் ஆரம்பித்து இருக்கிறார் என்பதைப் பாருங்கள். புலவர் குழந்தை அவர்கள் எழுதுவதற்கு எது முன்னோட்டமாக இருந்தது? எது செயலூக்கியாக இருந்தது? ஏன் இருந்தது? அதற்கான விளக்கங்களை சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். இந்தப் புத்தகத்தை வாங்கியிருப்பவர்கள் அதைப் படிக்கத்தான் போகிறீர்கள்.
இந்தப் புத்தகத்தின் இறுதியில், ஒரு கட்டுரை வெளியிடப்பட்டு இருக்கிறது. பூர்ணலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதியிருக்கிறார்.
அய்யா, தந்தை பெரியார் அவர்கள் எழுதியது -
இராமனின் தெய்வீகத்தன்மையும்,
இராவணனின் இராட்சதத் தன்மையும் என்று ஒன்றன் கீழ் ஒன்றாக நான்கு பக்கங்கள் எழுதியி ருக்கிறார்.
அந்த நான்கு பக்கங்களில் அவர் கேட்கின்ற கேள்விகள் மிகப்பெரிய அளவிற்கு முக்கியமானதாக இருக்கிறது.
கலையை, கலையின் வாயிலாகவே மக்களுக்குப் புரிய வைக்கவேண்டும்
இதையெல்லாம் ஒன்று திரட்டித்தான் அண்ணா அவர்கள் ‘‘நீதிதேவன் மயக்கம்'' என்று எழுதினார். இராவணன் - கம்பர் எல்லோ ரையும் கூண்டில் வைத்து விசாரிக்கக்கூடிய அளவிற்கு, மக்களுக்கு விளங்கக் கூடிய அளவிற்கு செய்தார்.
கலையை, கலையின் வாயிலாகவே மக்க ளுக்குப் புரிய வைக்கவேண்டும் என்பதற்காக இந்த இயக்கம் அறிவார்ந்த கருத்துகளை மக்களிடையே பரப்பி இருக்கிறது.
புத்தகமா? இலக்கியமா? நாடகமா? கலையா? எல்லாத் துறைகளிலும் - அந்தப் பண்பாட்டுப் படை யெடுப்பு எது எதில் நுழைந்ததோ, அதையெல்லாம் நாமும் அதை செய்து, பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அதனுடைய அடிப்படை.
இராமனின் குணநலன் - இராவணன் செய்த குற்றங்கள்
இராமனின் குணநலன்
1. இராமன் தாடகையைக் கொன்று யாகம் நடத்திக் கொடுத்தான்.
2. சூர்ப்பனகையின் மூக்கையும், முலையையும், காதையும் அறுக்கும்படி தம்பிக்கு உத்தரவு கொடுத்தான்.
3. வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்குப் பட்டம் கட்டினான்,
4. அய்ந்து மாத கர்ப்பத்தோடு தன் பெண்ஜாதியான சீதையை விபச்சாரப் பட்டம் கட்டித் தனியே காட்டில் கொண்டு போய் விட்டு வந்தான்.
இந்த அரும்பெரும் காரியங்களைச் செய்திருக்கிறான் இராமன்.
இந்தக் காரியங்களிலிருந்து இராமனிடத்தில் தெய்வத் தன்மையோ, நீதியோ, அறிவுடைமையோ, உண்மைத் தன்மையோ ஏதாவது இருக்கிறதாகச் சொல்ல முடியுமா?
இராவணன் செய்த குற்றங்கள்
1. தேவர்களைக் கொடுமைப்படுத்தியது.
2. முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் அவரவர்கள் காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுத்துத் தொல்லைக் கொடுத்தது.
3. சீதையை சிறை பிடித்தது.
இராவணன் எப்படிப்பட்டவனென்பதை அறிந்தால் இக்குற்றங்களை அவன் செய்திருப்பானா என்பது யாவருக்கும் விளங்கும்.
இராவணனின் பத்து குணங்கள்!
1. இராவணன் மகா கல்விமான். 2. வேத சாஸ்திரங்களில் விற்பனன். 3. குடிகளையும், சுற்றத் தார்களையும், இரக்கமுடன் ஆதரித்தவன். 4. புத்திசாலி. 5. வீரன். 6. ஆச்சரியப்படத்தக்க அதிபலசாலி. 7. மிகவும் பக்திமான். 8. தவசிரேஷ்டன். 9. கடவுளுடைய ப்ரீத்திக்குப் பாத்திரமானவன். 10. பல வரங்களைப் பெற்ற வரப்பிரசாதி.
இராவணனுக்கு இந்தப் பத்துக் குணங்களை வால்மீகியே கற்பித்திருக்கிறார்.
இப்படிப்பட்டவன் தேவர்களைக் கொடுமைப்படுத் தினானென்றால் நம்ப முடியுமா?
அப்படிப்பட்ட தேவர்களை இப்படிப்பட்ட 10 குணங்களுள்ள இராவணன் கொடுமைப்படுத்தினான் என்று சொன்னால் ஏற்க முடியுமா? என்று கேட்டுவிட்டு,
இராவணன் தேவர்களுக்கு இடுக்கண் விளை வித்ததாகக் கட்டுக் கதை கட்டி மக்களை ஏமாற்றி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு,
இராவணனுடைய மற்ற யோக்கியதைகள் வால்மீகி கூறியபடி உண்மையாக இருக்குமேயானால்,
இராவணன், சீதையை பலாத்காரம் செய்ததாகவோ,
சீதையை கொடுமைப்படுத்தியதாகவோ,
சீதையை குரூரமாக நடத்தியதாகவோ,
இராவணனை இழித்துக் கூறுவதையே கொள்கையாகக் கொண்ட இராமாயணத்திலே கூட, ஒரு வரி காணக்கிடைக்கவில்லை.
சீதையை இராவணன் எப்படி நடத்தினான்?
பெரியார் கண்ட புரட்சிப் பெண்!
தாய்மார்கள், சகோதரிகள் இங்கே இருக்கின்றார்கள். எவ்வளவு பெரிய இராமாயண பக்தையாக இருந்தாலும், உன்னைப்பற்றி ஊரில் தவறாகப் பேசுகிறார்கள்; ஆகவே, தீக்குண்டம் வளர்த்து, நீ அதில் இறங்கி, கற்புக்கரசி என்பதை நிரூபியுங்கள் என்று சொன்னால், அதற்கு என்னங்க, நான் உடனே செய்கிறேன். தினமும் சீதாபிராட்டியைத்தான் நான் கும்பிடுகின்றேன். ஆகவே அதை செய்கிறேன் என்று சொல்வார்களா?
‘‘யோவ், என்னைப்பற்றி பேசுவதைவிட, உன்னைப் பற்றித்தான் அதிகமாகப் பேசுகிறார்கள். நீ முதலில் தீயில் இறங்கு -பிறகு நான் இறங்குகிறேன்'' என்றுதான் இந்தக் காலத்தில் சொல்வார்கள்.
அதுதான் பெரியார் கண்ட புரட்சிப் பெண்!
சாதாரணமாக இன்றைக்கு அதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அசோக வனத்தில், அவர்கள் கதைப்படியே ஒரு சிறு தவறுகூட நடைபெறவில்லையே! அப்படி என்றால், இராவணன் யோக்கியனாக இருந்திருக்க வேண்டும் அல்லவா!
அறிவுக்குப் பொருத்தமா? பெண்ணுரிமைக்கு ஏற்றதா?
அதேநேரத்தில், இராமன் சீதையை நடத்திய விதத்திற்கும், இராவணன் சீதையை நடத்திய விதத்திற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு என்பதைப் பாருங்கள்.
இராமன், ஆணையிட்டபடி நெருப்பில் குதித்து அந்த அம்மா நிரூபித்துவிட்டு வந்திருக்கிறாள். (எப்படி வருவார்கள் என்பது வேறு விஷயம்) அதற்குப் பிறகும் அவனுக்கு சந்தேகம் வந்து, லவகுசாவை காட்டில் கொண்டு போய்விட்டான் என்று கதை முடிகிறது.
இந்தக் கதை அறிவுக்குப் பொருத்தமா?
பெண்ணுரிமைக்கு ஏற்றதா?
மனித உரிமைக்கு உகந்ததா? ஏற்கக்கூடியதா?
ஆகவே,
இராவணன், சீதையை பலாத்காரம் செய்ததாகவோ,
சீதையை கொடுமைப்படுத்தியதாகவோ,
குரூரமாக நடத்தியதாகவோ,
இராவணனை இழித்துக் கூறுவதையே கொள்கையாகக் கொண்ட இராமாயணத்திலேயே ஒரு வரி காணக்கிடைக்கவில்லை. ஆகையால், இவ்விஷயத்தில் இராவணன் பெருங்குற்றவாளி என்று சொல்ல முடியாது.
வால்மீகி கூறியபடி உண்மையாக இருக்குமேயானால், மற்ற யோக்கியதைகள் எப்படி இருக்கும் என்று கேட்கிறார்.
இராமனுடைய சூதும், சூழ்ச்சியும்!
இன்னொன்றையும் கேட்கிறார்,
பரதன், இராமனிடத்தில் நடந்துகொண்டதைப்போல, விபீஷணன் இராவணனிடம் நடந்து கொண்டிருப்பானேயானால், விபீஷணனை ஆழ்வாராக்கி இருப்பார்களா?
அவனுக்குப் பட்டம் கட்டி இருப்பார்களா? என்று யோசித்துப் பார்த்தால்,
இராமனுடைய சூதும், சூழ்ச்சியும் விளங்காமற் போகாது.
யாதொரு குற்றமும் அற்ற கைகேயி, தன் மகனுக்குப் பட்டம் கட்டவேண்டும் என்று கேட்டதற்காக, அதுவும் கைகேயியிடம், கைகேயியின் தகப்பனான கேகேயனிடம் கைகேயியின் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே பட்டம் சூட்டுகிறேன் என்று தசரதன் கொடுத்த வாக்குப்படி, மகனுக்குப் பட்டம் கட்ட கேட்டதை, கைகேயி ஆன தாயாரைக்கூட இகழ்ந்து, இழிவுபடுத்தியல்லவா பரதன், தமையனுக்குத் தொண்டு செய்ய பக்தி காட்டியிருக்கிறான்.
நாவலர் சோமசுந்தர பாரதியார், ‘‘தசரசன் குறையும் - கைகேயியின் நிறையும்'' என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரையாக புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
எனவே, ஏராளமான பாத்திரங்களைப்பற்றிய ஆய்வுகளும், கேள்விகளும் - இன்றைக்கும் பதிலளிக்க முடியாத கேள்விகளாக இருக்கின்றன.
எனவே, இராவண காவியத்தில், நம்முடைய அருமை புலவர் அய்யா அவர்கள், தமிழ்மாமணி முனைவர் தமிழமல்லன் அவர்கள், பல பகுதிகளை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லியிருந்தாலும், இரண்டே இரண்டு பகுதிகளைச் சொல்கிறேன்.
இங்கு செய்யும் வேள்வியால் வானில் உள்ளார்க்கு எவ்வாறு உணவு கிடைக்கும்?
இந்நூலின் பக்கம் 108 இல் இருப்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்.
‘‘தமிழ்மக்கள் ஆரியவேள்விகளையும், அவற்றில் உயிர்கள் கொல்லப்படுதலையும் கண்டித்தனர். அதற்கு அவர்களை ஏமாற்றும் வகையில் பொய்கூறினர்.
வேள்வியில் இடும் உணவு நேராகத் தேவர்களுக்குச் செல்லும் என்று ஏமாற்றினர். -
ஆனால் தமிழ் மக்கள் விழிப்போடு வினாக்களைத் தொடுத்தனர். இங்குச் செய்யும் வேள்வியால் வானில் உள்ளார்க்கு எவ்வாறு உணவு கிடைக்கும் என்று வினா எழுப்பினர்.
ஈதென்ன புதுமையநா முண்பதுபோய்
வான்வாழ் வார்க்கு எவ்வாறு ஊணாம்
சூதிதுவே வானோரை எங்கு கண்டீர்
ஒல்லுவதோ சொல்லும், மேலும்
ஏதெனினுங் கொல்லுவது பொல்லாதாம்
புலையுண்டீங்கு இருப்பது ஏலாப்
போதுதிர்நுந் தாயகத்தே இலைப்புலையென்
றால்ஈங்குப் பொருந்தும் என்றார்.
ஆனாலும், அவர்கள் ஒப்பவில்லை. பூனை திரும்பத் திரும்ப உறியை நாடுவதுபோல அவர்கள் தங்கள் கொலை, புலைத் தொழில்களைச் செய்துவந்தனர்.
இராமலிங்க அடிகள் அச்செயல்களை வெறுத்தவர். உயிர்க் கொலையைக் கடிந்து பாடியவர். தம்மெய் அறச் (சத்திய தருமச்) சாலையில் அத்தகையவர் உள்வரக்கூடாதென உத்தரவிட்டார். இன்றும் அங்கே அறிவிப்புப் பலகை இருப்பதைக் காணலாம்.
ஒருமுறை தந்தை பெரியார் அங்குச் செல்ல விரும்பினார். அந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு உள்ளே செல்லாமல் திரும்பினார். மற்றவர்கள் வற்புறுத்தியும் ஏற்காமல் அறிவிப்புக்கு மதிப்புக் கொடுத்தார் அவர்.
ஆனால், ஆரியர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளாத காரணத்தால் அவர்கள் தங்கள் சொந்தத் தாயகத்திற்குத் திரும்ப வேண்டும் என்று தமிழர்கள் வற்புறுத்தினர். அதனால்,
இன்னாத செய்தறியாத் தமிழ்நாடர்
பெரும்பகைக்கோர் இலக்கா னார்கள்.
அதனால் ஆரியர்களைத் தமிழர் விரட்டினார்கள். விரட்டப்பட்ட ஆரியர், தங்கள் வடவரசர்கள் துணையோடு மீண்டும் வந்து சண்டையிட்டனர். அதில் தோல்வியடைந்து புறமுதுகு காட்டிச் சில சமயங்களில் ஓடிப்போயினர். மீண்டும் வந்து வாலாட்டினர்.
தமிழ்அரசர்களுக்குள் உட்பகை மூட்டினர், குற்றமற்ற பழந்தமிழ் மன்னர்களுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தனர்.
அதனால் அவர்களுக்கு உளவு சொல்லத் தமிழர்களிற் சிலர் கிடைத்தனர். அத்துணையோடு தமிழ் அரசர்களின் கோட்டைகளைத் தீயிட்டு எரித்தனர், தமிழ் அரசர்களை ஒழித்தனர்.
அய்ந்து வகையான தந்திரங்கள்
அதற்கு அவர்கள் அய்ந்து வகையான தந்திரங்களைக் கடைப்பிடித்தனர்.
1. நட்புப்பிரித்தல் 2. நட்புக்கூட்டல் 3. அடுத்துக் கெடுத்தல் 4. பொருள்கேடு 5.ஆராயாது செய்தல்
அவற்றைப் பயன்படுத்தி விந்தக அரசர்களை ஒழித்தார்கள். அதைப் பாடும்போது புலவர் குழந்தை உணர்ச்சிப் பெருக்கை ஒரு பாடலில் பொதிந்து வைத்துள்ளார்.
ஈங்குவட வாரியர்கள் செய்ந்நன்றி
கொன்றவருக் கியல்பாயுள்ள
ஓங்கும் இழி குணஞ்செயலால் வருகவெனக்
கொண்டு விருந்து உவக்க ஊட்டி
நீங்கரிய உறவினராய் நிலைத்திருக்கச்
செய்ததனை நினைத்துப் பாரா
தாங்குகொலை வேள்வியினால் தமிழர்குலப்
பகைவர்களா அமையுங்காலை
தாடகை
கொலைவேள்வியைத் தடைசெய்து தமிழகத்தைத் தூய் மையாக்க இடைவள நாட்டையாண்ட மூதாட்டி தாடகை என்னும் தமிழரசி முடிவு செய்தாள். அதைச் சொல்லும் ஒரு பாடல் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கொலைவளத்துக் குலகினிடை நடமாடும்
உயிர்கொல்லுங் கொடுமை வாய்ந்த
புலைவளத்துக் கமைவேள்வி யதைப்போக்கித்
தமிழகத்தைப் புனித மாக்க
மலைவளத்துக் கிடைபொலியும் இடைவளநாடு
அதைக்காத்து வரும் மூதாட்டி
கலைவளத்துக்கு அறிவுதரும் தாடகைப்பேர்த்
தமிழரசி கருத்துட் கொண்டாள்
இப்பாடல் எதுகைச் சிறப்புமிக்கது. இரண்டாம் - எழுத்து ஒன்றி வருதலே எதுகையாகும். இப்பாடலில் ஆறெழுத்துக்களும் ஒன்றிவருமாறு புலவர் அமைத்திருக்கிறார்.
கொலைவளம், புலைவளம், மலைவளம், கலைவளம் என அமைத்துள்ளது அவர் புலமைத் திறத்திற்கோர் எடுத்துக்காட்டு.
எண்டிசையும் ஒருகுடைக்கீழ் இனிது காக்கும் இராவணன் அப்பணிக்கு உதவி செய்ய வேண்டித் தூதுவரை அவனிடம் அனுப்பினாள்.
தூதுவர் விளக்கிச் சொன்னதைக் கேட்ட இராவணன், தன்னுறவுக்கு இடையூறு செய்யும் வடவர் பெருங் கொட்டத்தை அடக்கித் தமிழ்மக்களைக் காக்கப் படைமறவரொடு ‘சுவாகு’ என்னும் படைத்தலைவனை அனுப்பினான். அவன் இடைவள நாட்டில் தாடகையைக் கண்டு வணங்கினான்.
தாடகை, சுவாகு என்பவனிடம் சொன்னாள்: ‘என்மகன் மாரீசனுக்கு உதவியாய் இருந்து தமிழ் மக்கட்கு ஒரு குறையும் இல்லாமல் ஆரியர் உயிர்களைக் கொன்றுண்ணாமல் ஒழிப்பீர்’ என்றாள்.
இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். தமிழ் அரசர் களையெல்லாம் ஒழித்த ஆரியரை ஒழிக்கவேண்டும் என்று தாடகை கேட்கவில்லை. அவர்களின் கொலைவேள்வி, ஊன்உண்ணல் ஆகியவற்றை ஒழிக்கும்படித்தான் அவள் கூறினாள்.
மாரீசன் தலைமையில் அமைந்த படையினர், ஆங்காங்குக் காவல் அமைத்து ஆரியர் கொலைவேள்வி செய்யாமலும் சோம கள் அருந்தாமலும் காத்துவந்தனர். ஆனால், அப்போது வேண்டுமென்றே, கோசிகன் என்னும் முனிவன் வேள்வி செய்வதில் ஈடுபட்டான்.
அதைப் படையினர் தடுக்கமுயன்றனர். தாடகை நேரில் வந்து வேள்வி செய்ய முடியாது வெளியே சென்றுவிடு என்று கோசிகனை எச்சரித்தாள். அவனும் அங்கிருந்து அகன்றான்.
கொதிக்கின்ற நெய்யினிலே இட்டுவறுத்து
உணவுயிரைக் கொல்லும் வேளை
பதைக்கின்ற அவ்வுயிரைக் காப்பாற்றத்
தாடகையும் படையோ டேகிச்
சிதைக்கின்ற உயிரிகளை அவிழ்த்துவிட்டு
நெய்காயுந் தீயவித்துப்
புதைக்கின்ற வயிறெரிய வேள்விசெய
முடியாது புறம்போம் என்றாள்
கொலைவேள்விக்கு ஓட்டிச்சென்ற ஆட்டு மந்தையைப் புத்தர் அவிழ்த்துவிட்டது போலத் தாடகை செய்தாள் என்பதை உணரலாம்.''
பல செய்திகளை இப்படி ஏராளம் எடுத்துச் சொல்லி, கடைசியில் ஒன்றை எடுத்துச் சொல்கிறார்.
விபீடணன் முடி சூட்டுப் படலம்
‘‘போர்க்காண்டம் - விபீடணன் முடி சூட்டுப் படலம்'' என்று முடிக்கிறார்.
எளிமையாக எல்லோரும் உணரும்படியாகச் சொல்லியிருக்கிறார்.
விபீடணனுக்குப் பட்டம் சூட்டும்பொழுது யாரும் மகிழ்ச்சியடையவில்லை. அந்த எதிர்ப்பைக் காட்டுவதில், ஆண்களைவிட, பெண்களுக்கு எப்போதுமே துணிச்சல் அதிகம் உண்டு. ஆண்களாவது கொஞ்சம் தயங்குவார்கள்; பெண்கள் தயங்கவே மாட்டார்கள். பல கூட்டங்களில் இதை நான் சொல்லியிருக்கிறேன்.
அரசின்மேல் இருக்கின்ற வெறுப்பைக் காட்டக் கருப்புக் கொடியை வீடுகளில் கட்டி வைப்பதுபோல அவர்கள் கரிக்கோலம் போட்டு வைத்தனர்.
திரண்டுள எதுகை மோனை செந்தொடை இயைபி னோடு
முரண்தொடை என்ப போல முன்னுக்குப் பின்னா மூத்தார்
மருண்டிட முறைமை கொன்றே வடமகன் காலில் வீழ்ந்த
இரண்டகச் செயலைக் கோலமிட்டனர் கரியால்எங்கும்
அந்த எதிர்ப்புகளையெல்லாம் பார்த்த, விபீடணன் எனக்கு இந்த அரசு வேண்டா, நான்முடிசூட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னான்.
இது ஒரு புதுமையான போராட்ட வழிமுறை அந்தக் காலத்தில். இதுவரையில் கருப்புக் கொடிதான் காட்டினோம்.
தமிழமல்லன் அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!
இப்படி ஏராளமான செய்திகளை அருமையான அழகு தமிழில், சிறப்பாக, இலக்கிய சுவை குன்றாமல், கருத்தாழம்மிக்க கொள்கை வயப்பட்டு, மிக அருமையான இலக்கியமாக - ஒரு சிறந்த நூலாகத் தொகுத்திருக்கின்ற நம்முடைய அறிஞர் தமிழமல்லன் அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
இப்படிப்பட்ட ஓர் அருமையான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி!
இந்த நூல் வெளியீட்டு விழா - புதுவையிலும் நடைபெறவேண்டும்.
அங்கே கம்பர் விழா ஒவ்வொரு முறையும் நடக்கும்பொழுதும், நடராசன் அவர்களை நான் அழைத்து, இராவண காவியத்தை அங்கே நடத்தவேண்டும் என்று சொன்னோம். அதன் பிறகுதான் இராவண காவியம் அங்கே தொடர்ந்து நடைபெற்றது.
ஆகவே, நாடெங்கும் இதுபோன்ற விழாக்கள் - இந்தப் புத்தக வெளியீட்டு விழா என்ற பெயரால் - ஓர் அறிவுத் திருவிழா - அறிவைப் பரப்பக்கூடியது.
புத்தாக்கம் தரக்கூடியது-
புத்துணர்ச்சியை உருவாக்கக் கூடியது
இது வெறும் புத்தக வெளியீட்டு விழா மட்டுமல்ல - இது ஒரு புத்தாக்கம் தரக்கூடியது- புத்துணர்ச்சியை உருவாக்கக் கூடியது. ஒரு புது முறுக்கை நம்முடைய இனத்திற்குக் கொடுக்கக் கூடியது. வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சி வேண்டும் என்று சொன்னாரே - அந்த எழுச்சியைத் தூண்டுவது.
பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம் - எழுதியவர்கள் - வெளியிட்டவர்கள் - வாங்கியவர்கள் அத்துணை பேருக்குக்கும் நன்றி, நன்றி என்று கூறி,
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment