கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம்
தந்தை பெரியார் அவர்களின் 143ஆம் ஆண்டு பிறந்த நாளில் (17.9.2021) வெளியிடப்பட்ட நூல் “கற்போம் பெரியாரியம்!” என்பதாகும். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் ஆக்கம் 14 தலைப்புகளில் இந்நூல் பேசுகிறது - இந்நூலைப் படித்தவர்கள் ஒரு மனதாகச் சொல்லுவது பள்ளிப் பாடத் திட்டத்தில் வைக்கப்பட வேண்டியது என்பதாகும். 31 வகையான நூல்களை ஆதாரமாகக் கொண்டு நுட்பமாக எழுதப்பட்ட அரிய கருவூலம் என்று சொல்லலாம்.
எடுத்துக்காட்டாக 11ஆம் அத்தியாயத்தில் “தந்தை பெரியாரின் மனிதநேயம்“ எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:
பெரியார் என்றாலே வெறும் அழிவு வேலைக்காரர்- எதையும் ஒழிக, ஒழிக என உரத்த முறையில் குரல் கொடுப்பவர் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளார்.
ஆனால் கொந்தளிக்கும் எரிமலையான தந்தை பெரியார் உள்ளத்தில் இழையோடும் மனிதநேயத்தின் எல்லையை அறிந்து கொண்டால் ‘அடடே! எட்டுணை மகத்தான மனிதநேயர் - மானுடத்தின் மாண்பமைத் தலைவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டுக்கு இந்நூலிலிருந்து ஒன்று
‘முத்தமிழ்க் கலாவித்வரத்னங்கள்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட டி.கே.சங்கரன், டி.கே. முத்துச்சாமி, டி.கே.சண்முகம், டி.கே.பகவதி ஆகிய நால்வரும் சகோதரர்கள் தமிழ் நாடக உலகின் முன்னோடிகள். டி.கே.எஸ்.பிரதர்ஸ் என்றால் அந்நாளில் பிரபலம். டி.கே.சண்முகம், அவ்வையார் நாடகத்தில், அவ்வையாராக வேடமேற்று நடித்து பெரும் புகழ் பெற்றவர். அவர் எழுதிய ‘எளது. நாடக வாழ்க்கை (தன் வரலாறு)’ எனும் நூலில் தந்தை பெரியாரின் மனித நேயத்தை வியந்துரைப்பதைக் காண்போம்.
“காசநோயின் கொடுமையைப் பற்றி அறிய அதற்குமுன் எனக்கு வாய்ப்பு ஏற்படவில்லை! மனைவியை சானிட்டோரியத்தில் சேர்த்த பிறகுதான் அதைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டேன். கரூர் பண்டித இராமசர்மாவுக்கு மனைவியின் நிலையைப் பற்றி விவரமாக எழுதினேன். உடனே பதில் கிடைத்தது. “தங்கள் மனைவிக்கு காசநோய் என்பது எனக்கு முன்பே தெரியும், அதனால்தான் அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கூறினேன். இதனால் தங்கள் உடல் பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால் தங்களுக்குச் சில மருந்துகள் கொடுத்தேன். இப்போது தங்களைப் பொறுத்தவரை எதுவுமே இல்லை. தங்கள் மனைவிக்குக் குணம் உண்டாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன், என்று எழுதியிருந்தார். சர்மா இதை முன்பே என்னிடம் கூறியிருந்தால் சில மாதங்களுக்கு முன்பே நோயின் ஆரம்ப நிலையிலேயே தக்கபடி சிகிச்சை செய்திருக்கலாமே என்று தோன்றியது. இப்போது மனைவியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அவள் தொடர்ந்து இருமுவதைக் கேட்கும் போது என் உள்ளமெல்லாம் உருகும். அவளுடைய தாங்க முடியாத வேதனையை எண்ணி நான் துன்பப்படுவேன். அருகிலிருந்து ஆறுதல் கூறுவேன். ஒவ்வொரு நாளும் மாலை 6:00 மணி வரை மனைவியோடிருப்பேன். அதற்கு மேல் ஈரோட்டுக்கு வருவேன். நாடகத்தில் எனது கடமையை நிறைவேற்றுவேன். நாடகம் முடிந்ததும் உடனே காரில் பெருந்துறை சென்று மனைவிக்கு துணையாக அவள் அறைக்கு வெளியேயுள்ள தாழ்வாரத்தில் படுத்துக் கொள்வேன். இப்படியே பகல் முழுவதும் பெருந்துறையிலும், இரவு பாதிநேரம் ஈரோட்டிலுமாக ஏறத்தாழ மூன்று மாத காலம் அலைந்தேன், இந்த நிலையிலுங்கூட நான் ஈரோட்டிலிருந்து நாடகம் முடிந்து திரும்பும் வரை மனைவி உறங்குவதில்லையென்று அவள் தமக்கையார் கூறினார். அவள் உள்ளத்தில் என்னென்ன எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருந்தனவோ, இறைவனே அறிவான்!
1943 அக்டோபர் 30 ஆம் நாள் குடும்ப விளக்கு சிறிது சிறிதாக மங்கத் தொடங்கியது. டாக்டர் வந்து பார்த்தார். கண் கலக்கத்தோடு நின்ற எனக்கு ஆறுதல் கூறினார். “அதிகமாகப் போனால் இன்னும் ஒரு வார காலந்தான். நீங்கள் விரும்பினால் இப்பொழுதே ஈரோட்டுக்குக் கொண்டு போகலாம். இனி நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றார். இது நான் முன்னரே எதிர்பார்த்ததுதான். எனவே புதிதாக அதிர்ச்சி எதுவும் ஏற்படவில்லை. குடும்பத்தார் அனைவரும் வந்து பார்த்தார்கள். பெரியண்ணாவிடம் கலந்து பேசினேன். மனைவியை ஈரோட்டுக்கே கொண்டு வந்துவிடலாம் என முடிவு செய்தோம். ஆனால் புதிய சிக்கல் ஏற்பட்டது. காசநோயால் பீடிக்கப்பட்டுக் காலனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் என் காதல் மனைவியாளை ஈரோட்டில் எங்கே படுக்க வைப்பது? இன்னும் இரண்டு நாளில் இறந்து விடுவாள் என்ற நிலையில் பட்டக்காரர் பங்களாவில் படுக்க வைப்பது எனக்கே சரியாகத் தோன்றவில்லை. தனி வீடு தேடி அலைந்தேன். நிலையை அறிந்த எவரும் எங்களுக்கு வீடு கொடுக்க முன்வரவில்லை. பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி என்பது எல்லோருக்கும் தெரியும். என்றாலும் வீடு கொடுக்க அஞ்சினார்கள். அப்போது அவ்வையார் நாடக நூல் பெரியாரின் தமிழன் அச்சகத்தில் அச்சாகி முடிந்திருந்தது. அதற்குப் பதிப்புரை எழுத வேண்டியது தான் பாக்கி. சிந்தனையைச் சிறிது இலக்கியத் துறையில் செலுத்த எண்ணித் தமிழன் அச்சகத்திற்குள் நுழைந்தேன். துணையாசிரியர் புலவர் பு. செல்வராஜ் அவர்களிடம் நிலைமையைச் சொல்லிக் கொண்டிருந்தேன். உள்ளிருந்து ஈ.வெ.ரா பெரியார் வந்தார்.
“என்ன மிகவும் சோர்ந்திருக்கிறீர்களே; மனைவி எப்படியிருக்கிறார்? என்று அன்போடு விசாரித்தார். டாக்டர்கள் கைவிட்டதையும், மனைவியை ஈரோட்டுக்கு கொண்டு வர இருப்பதையும் கூறினேன். பெரியார் மிகவும் கவலையோடு ஆறுதல் கூறினார். ‘மனைவியை இங்கு கொண்டு வந்து படுக்க வைக்க வீடு கிடைக்காமல் திண்டாடுகிறேன்’ என்றேன். உடனே பெரியார் அவசர அவசரமாக ஒரு சாவியை என்னிடம் கொடுத்தார். ‘பக்கத்தில் நம்முடைய புதிய வீடு இருக்கிறது. சுயமரியாதை சங்கத்திற்காக வாங்கியது. சுண்ணாம்பு அடித்துச் சுத்தமாக வைத்திருக்கிறது. உடனே அங்கு கொண்டு வந்து படுக்க வைக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்றார். நான் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை பெரியாருக்கு நன்றி கூறிவிட்டுப் பெருந்துறைக்கு விரைந்தேன். அன்று மாலையே என் மனைவி ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டாள்.
சேலத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர் வந்தனர். இளமைக் கனவுகள் நிறைவேறாமல் ஏக்கத்தோடு என்னைவிட்டுப் போகும் இல்லாள் மீனாட்சிக்காக எல்லோரும் கண்ணீர் விட்டனர்” டி.கே.சண்முகத்தின் நெகிழ்ச்சி எழுத்து பெரியாரின் மனிதநேயத்திற்கு ஒரு சான்று!”
இதைப் போன்ற அரிய தகவல்கள் இந்நூல் முழுவதும் கற்கண்டுக் கொத்தாக உள்ளது.
இந்நூலைப் பற்றி சென்னையைச் சேர்ந்த தோழர் பொ. நாகராசன் வாட்ஸ் அப்பில் தெரிவித்த திறனாய்வு இதோ:
இது என்னுரை 76 கற்போம் பெரியாரியம் -கி.வீரமணி - திராவிடர் கழக வெளியீடு - பக்கங்கள் 352 - விலை ரூ.300/
* பெரியாரை அறிந்து கொள்ளும் ஆர்வம் இந்த நூற்றாண்டின் துவக்கதிலிருந்தே அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் ஹிந்துத்துவ சக்திகள் பெரியார் கொள்கைகளுக்கு எதிராக பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறார்கள். இதன் எதிர்வினையாகவே இளைஞர்களும், மாணவர்களும் பெரியாரை அறிந்து கொள்ள மிக, மிக ஆவலாக இருக்கின்றார்கள். இளைஞர்கள் ஹிந்துத்துவாவுக்கு எதிராக பெரியாரை முன் நிறுத்துகிறார்கள். இதை அவர்களின் சமூக வலைதள பக்கங்கள் மூலம் நம்மால் அறிய முடிகின்றது.
* அவர்களுக்கு தோன்றும் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிப்பது, பெரியாரை அறிந்த ஒவ்வொருவரின் கடமையாகும். இதை உணர்ந்த திராவிடர் கழகம் ஒரு அருமையான முயற்சியாக இந்த நூலை, ஒரு பாட நூல் போல, ஒரு வழிகாட்டி நூல் போல - “கற்போம் பெரியாரியம்“ என்ற பெயரில் சிறப்பாக, தற்போது நடந்து முடிந்த பெரியாரின் 143ஆவது பிறந்த நாளன்று (17.09.2021 ) வெளியிட்டுள்ளார்கள்.
அதற்காக, பகுத்தறிவாளர்கள் இந்த நூலின் ஆசிரியர் அய்யா கி. வீரமணியை வெகுவாக பாராட்டுகிறார்கள்.
* பெரியாரின் பேச்சுக்களும், எழுத்துக் களும் தொகுக்கப்பட்டு ஆவண நூல்களாக வெளியாகி உள்ளன. அந்த தொகுதிகளின் விவரங்கள் சொல்லும் - பெரியார் எப்படி பெரியார் என்று! பெரியாரின் சிந்தனை ஓட்டத்தை அறிய வேண்டியவர்களுக்கு இந்த பட்டியல் பயன் தரும்.
* கடவுள் பற்றி 5 தொகுதிகள் - 1292 பக்கங்கள், மதம் பற்றி 7 தொகுதிகள் - 2030, பக்கங்கள் பெண்ணுரிமை பற்றி 5 தொகுதிகள் - 1338 பக்கங்கள், பகுத்தறிவு பற்றி 3 தொகுதிகள் - 1000 பக்கங்கள், திருக்குறள் பற்றி 1 தொகுதி - 368 பக்கங்கள், ஜாதி தீண்டாமை பற்றி 17 தொகுதிகள் - 5384 பக்கங்கள்.
இந்த புள்ளிவிவரங்களின் படி ஒரு விஷயம் தெளிவாகிறது. பெரியார், ஜாதி ஒழிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்புக்காகவே அதிகம் பேசியும் எழுதியும் உள்ளார். பெரியார் என்ன செய்து கிழித்தார் என கேட்கும் மடையர்களின் மண்டையை தட்டி உரக்க சொல்ல வேண்டிய செய்தி இது!
* பெரியார் - சுயமரியாதை, சமூகநீதி, பெண்ணடிமை, ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவற்றிற்காக வாழ்நாளும் முழுவதும் பாடுபட்டார். சுயமரியாதை பற்றி அவர் குறிப்பிடும் போது - மனிதர்க்கு உயிர் நாடியான தத்துவம் சுயமரியாதை. உலகத்திலுள்ள அத்தனை அகராதிகளிலும் தேடினாலும், சுயமரியாதை என்ற சொல்லுக்கு இணையான சொல்லே கிடையாது என்றார். இப்படிப்பட்ட தெளிவான சிந்தனைக்கு சொந்தக்காரர் தான் பெரியார்.
* பெரியாரின் கொள்கைகளையும், சிந்தனைகளையும் முழுமையாக படித்து, அதிலிருந்து பெரியாரியத்தை உள்வாங்கி, ஒரு பாடநூலாக கொண்டு வர ஏறத்தாழ 25 நூல்களை ஆதாரமாக கொண்டு, ஆசிரியர் அய்யா அவர்கள் இந்த நூலை படைத்துள்ளார். நூலில் 14 தொகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியாக ஒரு நூலாக வருவதற்கு தேவையான தகவல்களை கொண்ட களஞ்சியங்களாக உள்ளன. தொகுதிகளை பட்டியிலிடுகிறேன்:
1. வாழும் போதே வெற்றியை கண்டவர்.
2. தந்தை பெரியாரும் சுயமரியாதைத் தத்துவமும்.
3. தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணி.
4. தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள்.
5. தந்தை பெரியாரும் சமூகநீதியும்.
6. தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள்.
7. தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள்.
8. தந்தை பெரியாரின் தமிழ்த் தொண்டு.
9. தந்தை பெரியாரின் தொலை நோக்குப் பார்வை.
10. தந்தை பெரியாரின் அணுகுமுறை.
11. தந்தை பெரியாரின் மனித நேயம்.
12. தந்தை பெரியாரும் சமதர்மமும்.
13. தந்தை பெரியாரின் பண்பாட்டு புரட்சி.
14. தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்.
* பெரியார் வாழ்ந்த நாட்கள் - 34,433 நடத்திய போராட்டங்கள் - 15, சிறை சென்ற எண்ணிக்கை - 19, சிறையில் இருந்த நாள்கள் - 900
* இந்த விவரங்கள் பெரியாரை ஒரு கொள்கை குன்றாக காட்டுகிறது!
* பெரியார் தம் வாழ்நாளில் ‘குடி அரசு’, ‘ரிவோல்ட் புரட்சி’ ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’, ‘உண்மை,’ ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ என பல இதழ்களை துவக்கியும், எழுதியும் நடத்தியும் வந்தார்.
* இந்த விவரங்கள் பெரியாரை ஒரு கொள்கை ஊற்றாக காட்டுகிறது !
* தந்தை பெரியாரின் மனித நேயம் என்ற தொகுதியில், அவரது சீரிய கொள்கைகளை அறிய முடிகிறது. “ எனக்கு மதம், கடவுள், புராணப் பற்றோ ; நாட்டுப் பற்றோ; மொழிப் பற்றோ, இலக்கிய, இலக்கணப் பற்றோ கிடையாது. மனிதப் பற்றோ; சமுதாயப் பற்றோ ; அறிவுப் பற்றுதான் எனக்குண்டு! என தெளிவு படுத்தியுள்ளார்.
* பெரியார் பெண்ணடிமையைப் பற்றி பேசும் போது - பதிபக்தி போல சதிபக்தி உண்டா ? என்றும், ஆணாதிக்கத்தின் காரணமாக சதிபக்தி என்ற கேள்விக்கே இடமில்லை ! என்றும் ஆணித்தரமாக அறிவித்தார்.
• “ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளைக் காரன் என்னோடு கை குலுக்குகிறான். தொட்டுப் பேசுகிறான். ஆனால் அடுத்த தெருவில் - வீட்டில் உள்ள பார்ப்பான் என்னைப் பார்த்தால், தொட்டால் ‘ தீட்டு’ என்கிறானே! என்னைத் தொட்டுப் பேசுகிற - கை குலுக்குகிற வெள்ளைக் காரன் - எனக்கு அந்நியனா ? பார்த்தால் தீட்டு என்கிற பார்ப்பான் அந்நியனா?
* இந்த கேள்விக்கு யாராவது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நியாயமாக பதிலளிக்கட்டும்... அப்போது புரியும் பெரியாரியமென்றால் என்னவென்று !
* பெரியாரின் மாண்புக்கு உதாரணமாக ஒரு அருமையான நிகழ்வை தருகின்றது இந்த நூல். ராஜாஜி இறந்த பின்பு, தகனம் செய்ய உடலை சென்னை கிருஷ்ணாம் பேட்டைக்கு கொண்டு சென்றார்கள். பெரியார் தனது சக்கர வண்டியில் உட்கார்ந்து சென்றார். அங்கே குடியரசு தலைவர் வி.வி.கிரியும் வந்து காத்திருந்தார்.
* வி. வி. கிரி நின்று கொண்டிருப்பதை பார்த்து, பெரியார் தனது சக்கர வண்டியை அங்கே தள்ளிக்கொண்டு போகச் செய்தார். வண்டியில் குடியரசு தலைவர் வி. வி. கிரியை அமரச் செய்து, தான் கீழே அமர்ந்து கொண்டாராம். இந்த மாண்பு யாருக்கு வரும் ? இதில் மற்றொரு செய்தியும் உள்ளது. பெரியார் பார்ப்பனீயத்திற்கு எதிரியேயன்றி பார்ப்பனருக்கு எதிரி அல்ல!
* கற்போம் பெரியாரியம் - ஒவ்வொரு சிந்தனையாளரும், சீர்திருத்த கொள்கையாளரும், இடதுசாரி வழியில் செல்வோரும், மனித நேயமுள்ளோரும், பகுத்தறிவாளரும், பெரியார் பாதையை தேர்ந்தெடுத்தோரும், மாணவர்களும், இளைஞர்களும் படித்து அறிய வேண்டிய நூல்.
படித்துப் பாருங்கள்.
அப்போது புரியும்!
அவர் தான் பெரியார்! ஆம்...
அவர் தான் பெரியார் என்று!
பொ.நாகராஜன், சென்னை - 29.09.2021.
- இதற்கு மேல் என்ன சொல்ல வேண்டும் - இந்த நூலை உடனே வாங்கிப் பயன்பெறுவீர்!
No comments:
Post a Comment