கையும் களவுமாக சிக்கின "கடவுளர்" சிலைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

கையும் களவுமாக சிக்கின "கடவுளர்" சிலைகள்

சென்னை, அக்.16 சென்னை யில் இருந்து வெளி நாட்டுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 10 சிலைகள், 4 ஓவியங்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டனர்.

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வெளிநாடுகளுக்குஓ கடத்துவதற்காக சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் பொன்னி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் நடராஜன் ஆகியோருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர், அந்த வணிக வளாகத்தில் திடீர் சோதனை செய்தனர். அங்கு அய்ம்பொன்னில் செய்யப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா, அனுமன், கிருஷ்ணர் என 5 கடவுளர் சிலைகள், மரத்தினால் செய்யப்பட்ட நாரதர், துவாரபாலகர், நந்தி, கிருஷ்ணர், நடனமாடும் பெண் என 5 சிலைகள், பழைமையான 4 தஞ்சாவூர் ஓவியங்கள் ஆகியவை அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர், அவை அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த சிலைகள் தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் திருடப்பட்டவை என்பதும், அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக ஒரு கும்பல் அங்கு வைத்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

பொறியியல் கலந்தாய்வு: 55,378 இடங்கள் நிரம்பின

சென்னை, அக்.16 பொறியியல் சேர்க்கைக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 55,378 இடங்கள் நிரம்பியுள்ளன. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் இணையவழியில் தொடங்கியது. இதில் சிறப்புப் பிரிவினர் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்த நிலையில் தற்போது பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சுற்றிலும் மாணவ, மாணவிகள் கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து விருப்ப கல்லூரிகளை இறுதியாக தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றில் 11,224 பேர், இரண்டாவது சுற்றில் 20,438 பேர் சேர்க்கை பெற்ற நிலையில் மூன்றாவது சுற்றில் 23,716 பேர் சேர்க்கைக்கான ஆணை பெற்றுள்ளனர். மூன்று சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் இதுவரை 55,378 பேர் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இதையடுத்து நான்காவது சுற்று கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியுள்ளது. இந்த சுற்றில் 49,115 இடங்கள் உள்ளன.

தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 9 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. அதேபோன்று 41 கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், 52 பொறியியல் கல்லூரிகளில் 80 சதவீத இடங்களும், 113 கல்லூரியில் 50 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளன. மேலும் 152 கல்லூரியில் 10 சதவீத இடங்களும், 93 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாக ஒற்றை இலக்கத்திலும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 21 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment