எல்லை பாதுகாப்புப் பணி : புத்த பிட்சுகளிடம் சீன ராணுவம் ஆசி கோரியதாக தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 1, 2021

எல்லை பாதுகாப்புப் பணி : புத்த பிட்சுகளிடம் சீன ராணுவம் ஆசி கோரியதாக தகவல்

புதுடில்லி, அக்.1-  இந்திய - திபெத் எல்லையில் பாதுகாப்பு பணி வீரர்களை நியமிக்கும் திட்டத்திற்கு, புத்த பிட்சுகளிடம் சீன ராணுவம் ஆசி கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு, கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை, இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதையடுத்து, இரு தரப்பும் படைகளைக் குவித்தன. அப்போது, 15 ஆயிரம் அடிக்கு மேல் அமைந்துள்ள லடாக் எல்லை பகுதியில் நிலவும் பனிப் பொழிவு, கடும் குளிர் ஆகியவை காரணமாக, ஏராளமான சீன வீரர்கள் காய்ச்சலில் அவதிப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மிக உயரமான மலைச் சிகரங்களில் லாவகமாக செல்லக் கூடிய, கடும் பனிப் பொழிவையும் தாங்கும் ஆற்றல் உள்ள திபெத்தி யர்களை, இந்திய - திபெத் எல்லையோர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த சீனா முடிவு செய்தது. அதன்படி, சிறப்பு திபெத் ராணுவ பிரிவுகளை சீன ராணுவம் உருவாக்கி உள்ளது. இப்பிரிவுகளுக்கு ஆசி வழங்குமாறு, புத்த பிட்சுக்களை சீன ராணுவத்தினர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, திபெத் அரசு மற்றும் மதத் தலைவர் தலாய் லாமாவை ஆதரிப்போர் தவிர்த்து, மற்றவர்களை பாதுகாப்பு பணியில் சீனா நியமித்து வருகிறது.

No comments:

Post a Comment