சென்னை, அக்.31 வாகன தணிக்கையில் 9 ஆயிரத்து 37 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:-
ஒன்றிய மோட்டார் வாகன விதிகள் 1989 பிரிவு 50 மற்றும் 51-இன் படி வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் உள்ள எழுத்துக்கள் மற்றும் எண்களின் பின்னணி நிறம், அளவு மற்றும் குறிப்பிட்ட இடைவெளிகள் இருக்க வேண்டும் எனவும், பிற வாசகங்கள், சின்னங்கள், படங்கள் நம்பர் பிளேட்டுகளில் ஒட்டவும், எழுதவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வாகன தணிக்கை நடத்தி விதிகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, அரசு நிர்ணயித்த அளவுகளில் இல்லாமல், நம்பர் பிளேட்டுகள் பொருத்தி வந்த 1,878 வாகன ஓட்டிகள் மீது நேற்று (29.10.2021) வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்கள் நடத்தப்பட்ட இந்த வாகன தணிக்கையில் 9 ஆயிரத்து 37 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தடுப்பூசி செலுத்துவதில் புதிய உச்சம்: 105 கோடியை தாண்டியது
புதுடில்லி, அக்.31 இந்தியாவில் செலுத்தப் பட்ட தடுப்பூசியின் எண் ணிக்கை 105 கோடியை தாண்டியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16ஆம்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் 18 வயது கடந்த அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து கரோனா தடுப்பூசி செலுத்தம் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டன. மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் ஆரம்ப கட்டத்தில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டினாலும், பின்னர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசி போடும் பணிகள் விறூவிறுப்பாக நடைபெற்று வருவதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் மக்களுக்கு செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 100 கோடியை கடந்தது. தற்போது அந்த எண்ணிக்கை நேற்று (29.10.2021) 105 கோடியை தாண்டியது.
இத்தகவலை ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 51.59 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ள தாகவும் கூறி உள்ளது. நாட்டில் தடுப்பூசி போடுவதில் அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாக தற்போது இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், “வெற்றிகரமாக 105 கோடி தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளன. கரோனா தடுப்பூசி இயக்கம் புதிய சாதனையை எட்டியிருப்பதால் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் பதவிக்காலம் நீட்டிப்பு
புதுடில்லி, அக்.31 ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிரிவு அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர், சக்திகாந்த தாஸ் (வயது 64). ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் சிறந்த நிர்வாக திறமை மிக்கவர். தமிழ்நாடு அரசிலும், ஒன்றிய அரசிலும் பல்வேறு பதவிகளை வகித்து, ஓய்வு பெற்ற நிலையில் இவர் ரிசர்வ் வங்கியின் 25ஆவது ஆளுநராக கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
இவரது 3 ஆண்டு பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் 10ஆம் தேதி முடிய இருந்தது.
இந்த நிலையில் இவரது பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சர வையின் நியமனங்களுக்கான குழு எடுத்துள்ளது.
இதையொட்டி பிறப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில் கூறி இருப்பதாவது:-
1980ஆம் ஆண்டின் தமிழ்நாடு பிரிவு அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சக்தி காந்ததாசை 2021 டிசம்பர் மாதம் 10ஆம் தேதிக்கு அப்பால் பாரத ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மேலும் 3 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கிறவரையில், எது முன்கூட்டி அமைகிறதோ அதுவரையில் மறுநியமனம் செய்வதற்கு ஒன்றிய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் கவர்னராக 2024ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி வரை பதவி வகிப்பார்.
2014ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு அமைந்தபிறகு, பதவி நீட்டிப்பு பெற்றுள்ள ரிசர்வ் வங்கியின் ஒரே ஆளுநர் என்ற பெயரை சக்தி காந்ததாஸ் பெறுகிறார்.
2016ஆம் ஆண்டு ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படாததும், உர்ஜித் படேல் 3 ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே பதவி விலகியதும் நினைவு கூரத்தக்கது.
No comments:
Post a Comment