மூணாறு, அக்.17 இடுக்கி மாவட் டத்தில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர். தகவல் அறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர்.
அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியாக, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நேற்றும் (16.10.2021) விண்ணை ஆக்கிரமித்த கார்மேக கூட்டம் கனமழையை கொட்டித்தீர்த்தது.
இதனால் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சி அளித்தன.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி தொடுபுழா அருகே உள்ள மலங் கரை அணைக்கட்டின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது. இதனால் அணையின் 6 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இடை விடாமல் பெய்து வரும் அடைமழையினால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது. இதேபோல் மாவட்டத் தின் பல்வேறு இடங்களில் மலைப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப் பட்டது. பீர்மேடு தாலுகா கொக் கையார் பகுதியில் பூவந்தி என்ற மலைக் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கிற மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். ஏலக்காய், கமுகு, மிளகு, தென்னை, பாக்கு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பூவந்தி மலையடிவாரத்தில் ஆங்காங்கே விவசாயிகள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். பசுமை போர்த்திய பூமியாக திகழும் இங்கு, நேற்று அதிகாலையில் இருந்தே பலத்த மழை பெய்தது.
இந்தநிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் கொக்கையார் பகுதியில் கனமழை கொட்டியது. அப்போது, பூவந்தி மலையடி வாரத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. 500 அடி உயரத்தில் மலையில் இருந்து மண்ணும், பாறைகளும் உருண்டன. இதில் அடிவாரத்தில் இருந்த 5 வீடுகள் புதையுண்டன. மேலும் அந்த வீடு களில் வசித்த 7 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர். இவர்கள், அனைவரும் விவசாயிகள் ஆவர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் இடுக்கியில் இருந்து பூவந்தி கிராமத்துக்கு விரைந்தனர்.
பின்னர் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் ஆகியதால், அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப் பட்டது. இதனால் மீட்பு பணி முடங்கியது.
இன்று (17.10.2021) மீட்பு பணியில் ஈடுபட பேரிடர் மீட்பு குழுவினர் முடிவு செய்தனர். இதனால் மண்ணுக்குள் மூழ்கிய 7 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை.
No comments:
Post a Comment