அய்ந்தே மணி நேரத்தில் 5 ஆயிரம் பனை விதைகளை நட்ட காவல்துறை 8 கி.மீ. தொலைவுக்கு நட்டனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 17, 2021

அய்ந்தே மணி நேரத்தில் 5 ஆயிரம் பனை விதைகளை நட்ட காவல்துறை 8 கி.மீ. தொலைவுக்கு நட்டனர்

சென்னை, அக்.17 வேலூர் மாவட்டக் காவல்துறை சார்பில் இது என்னுடைய மரம் என்ற பெயரில் அய்ந்தே மணி நேரத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு 5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

வேலூர் அடுத்துள்ள சலமநத்தம் பகுதியில் மாவட்டக் காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சித் தளம் சுமார் 100 ஏக்கரில் அமைந்துள்ளது. பொட்டல் காடாக இருக்கும் இந்த மலையடிவாரப் பகுதியைப் பசுமையாக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏற்கெனவே இங்கு சுமார் 1,500 மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இது என்னுடைய மரம் என்ற பெயரில் நடைபெற்ற பனை விதை நடும் பணி குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் கூறும்போது, பனை மரம் நீர்வளத்தைச் சேமித்து மண் வளத்தைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது. சலமநத்தம் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் வீணாகிறது. இதனால் நீர்வளத்தைப் பாதுகாக்கவும், பயிற்சித் தளத்தைப் பசுமையாக்கவும் பனைமரத்தை வளர்க்க முடிவெடுத்தோம். இதற்காக 5 ஆயிரம் பனை விதைகள் எல்லைப் பகுதி முழுவதும் நட்டு, பராமரிக்கப்பட உள்ளது.

பனை விதை நடும் பணிக்காக துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தின் எல்லைப் பகுதியில் வளர்ந்திருந்த புதர்கள் அகற்றப்பட்டு நான்கு சக்கர வாகனம் செல்லும் அளவுக்கு வழி ஏற்படுத்தப்பட்டு பனை விதை நடப்பட்டுள்ளது. அதேபோல், மலை மீதும் மரங்கள் வளர்க்க வசதியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், காவலர்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள், காவலர்கள் என 700 பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பனை விதையை இது என்னுடைய மரம் என்ற பெயரில் நட வேண்டும் என்று கூறினேன். நாளை ஒரு நாள் இங்கு அவர்கள் மீண்டும் வரும்போது அவர்கள் நட்ட விதை மரமாக வளர்ந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள் என்று செல்வகுமார் தெரிவித்தார்.

 

3, 5, 8, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பரில் திறனறித் தேர்வு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை, அக்.17    3, 5, 8, 10ஆம் வகுப்பு மாணவர் களுக்கு   தேசிய திறனறித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கரோனா தொற்றால் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் குறைபாட்டைக் கண்டறியும் இந்தத் தேர்வு நவம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஏற்பட்ட கரோனா 2ஆவது அலையால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. அவர்களுக்குச் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுப் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பைக் கணக்கிட்டு, அதைக் குறைக்கும் வகையில் திறனறித் தேர்வை  நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்தது. நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி இந்தத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் நவம்பர் 1 முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 3, 5, 8, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தத் தேர்வு நவம்பர் 12ஆம் தேதி நடைபெறுகிறது. கற்றல் குறைபாட்டைப் போக்குவதற்காகத் தேர்வை நடத்தி, மாணவர்களின் திறனை மதிப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்குக் கற்றல் சார்ந்து பயிற்சி அளிக்க வேண்டும் என்று பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment