சென்னை, அக்.17 சென்னை அய்.அய்.டி.யில் 45 நாய்கள் உயிரிழந்த விவகாரத்தில் பதிவாளர் மற்றும் ஊழியர்கள் மீது மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகார் அளித்தபின் பெங்களூரைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ஹரீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னை அய்.அய்.டி வளாகத்திற்குள் இருந்த 186 நாய்கள் உரிய பராமரிப்பின்றி இருட்டறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. சமீபத்தில் அதில் 45 நாய்கள் உயிரிழந்துள்ளன. மேலும் நாய்களின் உயிரிழப்புக்கு அவைகள் முறையாக பராமரிக்கப்படாமல், தகுந்த உணவளிக்காமல் இருந்ததே காரணம். அடைக்கப்படும்போது முழு ஆரோக்கியத்துடன் இருந்த நாய்களில் 45 நாய்கள் திடீரென உயிரிழக்க வேறெந்த காரணமும் இருக்க முடியாது. இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டதால், சுதந்திரம் இல்லாமலும், பயத்தாலும் அவற்றிற்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் 45 நாய்கள் உயிரிழந்துள்ளதை சென்னை அய்.அய்.டி-யின் பதிவாளர் ஜேன் பிரசாத் ஏற்கெனவே குறிப்பிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். 45 நாய்களின் உயிரிழப்பிற்கு சென்னை அய்.அய்.டி-யின் பதிவாளரான ஜேம் பிரசாத் மற்றும் அவருடன் இருக்கும் சில ஊழியர்களே பொறுப்பு. அவர்கள் மீது மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்“ என்று விலங்குகள் நல ஆர்வலர் ஹரிஷ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment