மும்பை உட்பட 4 உயர் நீதிமன்றங்களில் 16 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 1, 2021

மும்பை உட்பட 4 உயர் நீதிமன்றங்களில் 16 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

புதுடில்லி,அக்.1- மும்பை உட்பட 4 உயர் நீதிமன்றங் களில் 16 பேரை நீதிபதி களாக நியமிக்க, ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்ககொலீஜியம் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, யு.யு.லலித் மற்றும் .எம்.கன்வில்கர் ஆகியோர் உள்ளனர். மூன்று உறுப்பினர்கள் கொண்ட இந்த கொலீஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க பெயர்களை பரிந்துரை செய்யும்.

இந்நிலையில், தலைமை நீதிபதி ரமணா தலைமையில் கொலீஜியம் கூட்டம் கடந்த புதன்கிழமை (29.9.2021) நடை பெற்றது. அப்போது, மும்பை, ஒடிசா, குஜராத் மற்றும் பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றங்களில் 16 பேரை நீதிபதிகளாக நிய மிக்க பரிந்துரை செய்ய முடிவெடுக்கப் பட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் நேற்று (30.9.2021) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மும்பை உயர் நீதிமன்றத்துக்கு நீதித்துறை அதிகாரிகள் .எல்.பன்சாரே, எஸ்.சி.மோர், யு.எஸ்.ஜோஷி பால்கே, பி.பி.தேஷ் பாண்டே ஆகியோரை பதவி உயர்வு அளித்து நீதிபதிகளாக நியமிக்கவும்,

ஒடிசா உயர் நீதிமன்றத்துக்கு வழக்குரைஞர்கள் ஆதித்ய குமார் மகோபத்ரா, முருகங்கா சேகர் சாகு மற்றும் நீதித்துறை அதிகாரிகள் ராதாகிருஷ்ண பட்நாயக், சசிகாந்த மிஸ்ரா ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கவும்,

குஜராத் உயர் நீதிமன்றத்துக்கு மவுனா மனீஷ்பட், சமீர் ஜே தேவ், ஹேமந்த் எம்.பிரச்சாக், சந்தீப் என். பட், அனி ருத்த பிரத்யும்னா மயி, நீரல் ரஷ்மிகாந்த் மேத்தா, நிஷா மெகந்தராபாய் தாக்குர் ஆகிய 7 வழக்குரைஞர்களை நீதிபதிகளாக நியமிக்கவும்,

பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்துக்கு வழக்குரை ஞர் சந்தீப் முத்கில்லை நீதிபதியாக நியமிக்கவும் ஒன்றிய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் சுமார் 100 நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்துள்ளார். அத்துடன் முதல் முறையாக உச்ச நீதிமன்றத்துக்கு ஒரே நேரத்தில் 9 நீதிபதிகளை நியமிக்கவும் பரிந்துரைத்துள்ளார். அதை ஒன்றிய அரசும் ஏற்றுக் கொண்டு 9 பேரும் நீதிபதிகளாகப் பதவியேற்றனர்.

நாட்டில் மொத்தம் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை கடந்த மே 1-ஆம் தேதி நிலவரப்படி 1,080 ஆக உள்ளது. ஆனால், தற்போது 420 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment