சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 4 நீதிபதிகள் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 13, 2021

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 4 நீதிபதிகள் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

சென்னை,அக்.13- சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 பேரை புதிய நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் சேர்த்து மொத்தம் உள்ள நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 75. சமீபத் தில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யா சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து மொத்தம் 56 நீதிபதிகள் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களாக பணியாற்றி வரும் சிறீமதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபி ஆகிய 4 பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

அதன்படி ஒன்றிய அரசின் பரிந்துரையை ஏற்று இந்த 4 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (12.10.2021) உத்தரவிட்டுள்ளார். இவர்கள் 4 பேருக்கும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இவர்களுடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே கடந்தாண்டு டிசம் பரில் நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், ..நக்கீரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சத்திகுமார் சுகுமார குரூப், கே.முரளி சங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச் செல்வி ஆகிய 10 பேர் ஒரே நேரத் தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. சிறீமதி சுந்தரம் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், உயர் நீதி மன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment