அக்டோபர் 2 - காமராசர் நினைவுநாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 2, 2021

அக்டோபர் 2 - காமராசர் நினைவுநாள்

கல்வி வள்ளல் காமராசர் - இரா. இரத்தினகிரி

1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் பிறந்த காமராஜர் தம் 60 ஆவது வயதில் 1963 இல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகுதான் 1964இல் பிரதமர் நேரு மறைந்த போது அவரை அடுத்து இரண்டாவது பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை பொறுப்பேற்க வைத்தார். அவர் மறைவுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியின் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்க, அவர்களில் அதிகம்பேர் காமராசரைத்தான் இந்தியாவின் பிரதமராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், நேரு குடும்பத்தின் மீது காமராசர் வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக இந்திராகாந்தியை இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுத்தார். அதனால்தான் உலக அளவில் காமராசருக்குகிங் மேக்கர்என்று பெயராயிற்று. கல்வி அளவில் ஆறாவது தான் படித்தவர்; ஆனாலும், அவர் சிறையில் இருந்த காலத்தில், ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார். அதிக அளவு வடநாட்டுப் பழக்கத்தில், இந்தி பேசவும், எழுதவும் கூடக்கற்றுக்கொண்டார்.

தந்தை பெரியார், காமராசரை, கல்வி வள்ளல்என்றும், தமிழ்நாட்டின் ரட்சகர் என்றும் பச்சைத் தமிழன் என்றும் அழைத்தார். மக்கள் கர்மவீரர், காலா காந்தி, கருப்புக்காந்தி, படிக்காத மேதை என்றெல்லாம் அழைத்தார்கள். அவருக்கு 1961இல் பண்டித நேரு அவர்களால் சென்னை அண்ணா சாலையில் ஒரு முழுஉருவ வெண்கல சிலை திறந்து வைக்கப்பட்டது.

அந்தப் பெருந்தலைவர் காமராசர் பெயரால் புதுடில்லியில் ஓர் அறக்கட்டளையை (KAMARAJ FOUNDATION) கேரளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உருவாக்கினார். அவர் பெயர் நீலலோகிதாச நாடார். நான் அவரைச் சந்தித்து, ‘என்ன, நீங்கள் அவருக்கு உறவினரா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டேஅப்படியெல்லாம் இல்லை; நான் கேரளத்துக்காரன். காமராசர் சிறப்பு என்னவென்றால் இந்தியாவில் ஒருவர் தலைவராக வரவேண்டும் என்றால் பெரும்பணக்காரராக அல்லது ஒரு அரசகுடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். வடநாட்டுக்காரராக இருக்க வேண்டும். அதுவும் இந்திக்காரராக இருக்க வேண்டும். மிக முக்கியமாக அவர் சிவப்பாக இருக்க வேண்டும். இந்த அய்ந்து குணாதிசயமும் இல்லாமல் அகில இந்தியத் தலைவர் ஆனார். அதனால் தான் இந்த அறக்கட்டளையை அமைக்கின்றோம்என்றார்.

டில்லியில் ஆர்.எஸ்.எஸ். கொலை முயற்சி

1966 ஆம் ஆண்டு நவம்பர் 7இல் காமராசர் வீட்டில் அவர் மட்டுமே தனியாக இருந்தார். அப்போது ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஊர்வலம் என்ற பெயரில் வந்த கும்பல், வீடு பூட்டியிருந்ததால் சன்னல் வழியாக தீப்பந்தங்களை வீசினார்கள். தீ எரிந்தது. புத்திசாலித்தனமாக பின்பக்க வாசலைத் திறந்து வெளியேறினார், காமராசர். தகவலறிந்து பிறகு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவரைப் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

1967இல் தேர்தலில் காமராசர் தோல்வியுற்ற போது தந்தை பெரியாரிடமும், கவலைப்பட்டு வந்த காங்கிரஸ்காரர்களிடமும் இந்த செய்தியைத்தான் ஆறுதலாகச் சொன்னார். பெரியார், காமராசர் அவர்களைப் பல வகைகளில் பாராட்டினார். அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியபோது பெரியார் ஒரு தந்தி கொடுத்தார்.

Resignation of chief ministership, would be the 

suicidal of yourself

- Tamilnadu and Tamilians

அதன்பலனை தமிழ்நாடு கொஞ்சக் காலம் அனுபவித்தது.

தலைவர் காமராசரை திரும்பத்திரும்ப நினைப்பதன் மூலம் அவருடைய பண்புகள் நமது தாய்த் திருநாட்டில் விதைகளாக விழுந்து, முளைத்து, பயிராகும் என்றார். அவர் பிறந்த நாளை தமிழ்நாடு அரசு கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட தலைவர் கலைஞர் உத்தரவிட்டு இன்றும் நடைபெற்று வருகிறது.

அவர் சென்னை வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்போது சோறு கொஞ்சம் நாற்றம் அடித்தது. உடனே, அவருக்குச் சோறு படைத்துக் கொண்டிருந்தவரிடம் ஏன் சோறு இப்படி இருக்கிறது?’ என்று கேட்டார். நமக்கு கிடைத்த ரேஷன் அரிசிதான் இப்படி இருக்கிறது. வேண்டுமானால் வேறு கடையில் அரிசி வாங்கி சமைக்கட்டுமா? என்று கேட்டார். அதற்கு காமராசர் மக்கள் சாப்பிடும் அதே அரிசிதான் சமைக்க வேண்டும். ரேஷனில் நல்ல அரிசி கிடைக்கும் வரை அதையே சாப்பிடலாம் என்றார். எளிய வாழ்வு வாழ்ந்தார். அவர் முதலமைச்சர் பொறுப்பு வகித்த போது அரசு விருந்தினர் இல்லங்களில் 3 1/2 அடி அகலம் 7 அடி நீளமான மரப்பெஞ்சுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவர் மதிய உணவு முடிந்ததும் கைகளை மடக்கி தலைக்கு வைத்துக் கொண்டு சிறிது நேரம் தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுவார். மெத்தை வைத்த படுக்கைகளைத் தவிர்த்தார்.

1961 ஜூலை 7ஆம் நாள் தந்தை பெரியார், ‘நமது மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்திலாகட்டும் அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் எல்லாம் கூட நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை. ஆனால் காமராசர் ஆட்சிக் காலத்தில் தான் எல்லா ஊர்களிலும் பள்ளிக்கூடங்கள் வந்தனஎன்று சொன்னார்.

மேனாள் குடியரசுத்தலைவர் இராசேந்திர பிரசாத் அவர்கள் பெருந்தலைவர் காமராசர் அவர்களைப் பற்றிச் சொல்கிற போது, காமராசர் பள்ளிகளின் அபிவிருத்திக்காக மக்களின் ஆதரவைத் திரட்டியது என்னை மிகவும் கவர்ந்து விட்டது. இந்த முறையை இதர எல்லா ராஜ்யங்களிலும் பின்பற்ற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்என்றார்.

தகுதி திறமை மோசடி

பரம்பரையாக உத்தியோக ஆதிக்கம் படைத்திருப்பவர்கள் தகுதி திறமை என்று பேசுகிறார்கள். இந்த தகுதி திறமை என்பதெல்லாம் ஒரு பெரிய மோசடி. உன் தகுதியும், திறமையும் எனக்குத் தெரியாதா என்ன? நாலைந்து தலைமுறையாக உனக்கு படிப்பு இருந்ததால் இந்த தகுதி வந்துவிட்டது. என் மகன் இன்றைக்குத்தானே பள்ளிக்கு செல்கிறான் இன்னும் நாலைந்து தலைமுறையில் என் பிள்ளைக்குத் தானாக அந்தத் தகுதி வரும்என்று சொன்னார் காமராசர்.

இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு காமராசரைப் பற்றிக் குறிப்பிட்ட போது, ‘இடைவிடாத சேவையின் மூலம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மேன்மை அடைந்திருக்கிறார் காமராசர், மக்கள் தொண்டில் காமராசரை மிஞ்சியவர்கள் வெகு அபூர்வம், அவரை அறியும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அவருடன் பழகப்பழக, அவரிடத்தில் இருந்த மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறதுஎன்றார்.

ஒருமுறை குன்றக்குடி அடிகளார், ‘நான், ஆன்மீக பொறுப்பேற்ற போது காமராசரை அதிகமாக விமர்சனம் செய்தேன். ஆனால், காமராசர் விமர்சனங்களுக்கு பதில் கூறாது அமைதியாக இருந்தார். சிறிது காலத்திற்குப் பின் காமராசர் பற்றி நன்கு அறிந்து கொண்ட பின் வருந்தினேன். நான் ஆன்மிகத்தில் இருந்துகொண்டு அரசியல் பேசினேன். ஆனால் காமராசர் அரசியலில் இருந்துகொண்டு ஆன்மிகவாதியாக நடந்துகொண்டார்என்று குறிப்பிட்டார்.

அவரது எளிமை, உழைப்பு, இளைஞர் உள்ளங்களில் இடம்பெற வேண்டும். அது தான் காமராசர் நினைவு நாளில் நாம் உளம் கொள்ள வேண்டிய உறுதி.

No comments:

Post a Comment