நாகரிகமும் நமது கடமையும் (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

நாகரிகமும் நமது கடமையும் (2)

10.01.1948 - குடிஅரசிலிருந்து...

நாமே நாகரிகமென்றோம்

நாமே பரிகசிக்கின்றோம்

ஒரு காலத்தில் நாகரிமாகக் கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வருகிறோம். ஒரு மனிதன் தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை போராடிக் கொண்டு, ஒவ்வொருவனும் தான் அதிக மேல் சாதிக்காரனாவதற்கு சைவ, வைணவப் போக்கைப் பற்றிக் கொண்டு, பூணூலையும் நாமத்தையும் போட்டுத் தனது மதத்தையும் சிலாகித்துப் பிதற்றிக் கொண்டும் வந்தான். ஆனால் இன்றைய தினம் இவைகளையெல்லாம் புத்தி கெட்டதனமென்றும், முற்போக்குக்கு முரணானதென்றும் கூறி, வெகுவாகக் கண்டனம் செய்து வருகிறோம். ஒரு காலத்தில் தனித் தனி தத்துவம் நாகரிகமாகக் கருதப்பட்டது. உதாரணமாக, ஒரு தனித்தனி ஜாதி நன்மையும் - தேச நன்மையும் சிலாக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால் ஒரு ஜாதியின் அனுகூலம் பிற ஜாதியானுக்குப் பாதகம் என்பதையும், ஒரு தேச நன்மை மற்றொரு தேசத்திற்குப் பொல்லாங்கு என்பதையும், நாம் இன்று நன்கு உணர ஆரம்பித்துவிட்டோம்.

அனுபவம், அறிவு,ஆராய்ச்சியால் முற்போக்கு

தோழர்களே! நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப்பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது நாம் அனுபவ முதிர்ச்சியால், அறிவு ஆராய்ச்சியால், நாம் முற்போக்காகிக் கொண்டு வருகிறோம் என்பதேயாம். நாம் எல்லா மனிதர்களையும் அறிவின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக்கிறோம். உதாரணமாக, வியாபாரிகளை-மக்கள் சமுகத்தின் நலனைக் கெடுத்து லாபமடையும் கோஷ்டியைச் சேர்ந்தவர்களென்றும், லேவாதேவிக்காரர்களை - மனித சமுக நாச கர்த்தாக்களென்றும், மத ஆதிக்கங்கொண்ட வர்க்கத்தினர்களை-மனித சமூக விரோதிகளென்றும் கண்டிக்கின்றோம்.

நாகரிகம் என்பது பிடிபடாத ஒரு விஷயமென்று முன்பே கூறினேன். நம் நாட்டுப் பெண்கள் எப்படி பெல்ட் கட்டாமல் சேலை கட்டுகிறார்களென்றும் அது இடுப்பில் எவ்வாறு தங்கி இருக்கிறதென்றும், தலைக்கு ஊசி இல்லாமல் பெண்கள் எவ்வாறு மயிர்களைச் சேர்த்து முடிந்துகொள்ளுகிறார்களென்றும், நாம் சாப்பாட்டுக்கு தினம் ஒரு இலை எப்படிச் செலவு செய்கின்றோம், என்ன மகத்தான நஷ்டமென்றும், மேனாட்டார் ஆச்சரியப்பட்டு நம்மவர்களைக் கேட்பதையும் கேட்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் அவர்களின் செய்கையைச் சரியாக உணராததினால் சிலவற்றை ஆச்சரியமாகக் கருத நேரிடுகிறது.

நம்மிடையேயுள்ள சாதி அபிமானம், சொந்தக்கார அபிமானம், பாஷா அபிமானம், தேசாபிமானம் எல்லாம் தொலைய வேண்டும். இல்லாவிட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் முடிவு காணுவது சரியாக ஆகிவிடாது.

காந்தியார் மேனாட்டில் முழுங்கால் துண்டோடு-போதிய ஆடையின்றிப் போன பெருமையைப்பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்டார். இது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானதாகும். சவுகரியத்திற்காகவும்-நன்மைக்காகவும் அங்கு அதிக ஆடைகளைப் பந்தோபதுக்காக அணிந்து கொள்ளாமல், பிடிவாதத்தோடு-கேவலம் இந்திய தர்மம் என்ற வெறும் எண்ணத்திற்காக, குளிரில் விரைத்துப் போக இங்கிலாந்து வாசம் செய்தது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்?

பகுத்தறிவுகொண்டு பாடுபட வாரீர்!

புதிய எண்ணங்களும், புதிய எழுச்சிகளும்-புதிய காரியங்களும் நிகழுகின்றன. நீங்களும் காலப்போக்கின் உயரியபலனை வீணாக்காது பகுத்தறிவை மேற்போட்டுக் கொண்டு ஜனசமுதாய நன்மையைத் தேடி பாடுபட முன் வாருங்கள். உங்களுடைய முயற்சிக்கு எல்லாம் வெற்றியே உண்டு. வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்களும் கூட, தங்களுடைய போக்கை மாற்றிக் கொண்டு முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்று சொல்லி வருகிறார்கள். ஆகவே தோழர்களே! நீங்கள் தன்னம்பிக்கை கொண்டு-மக்களின் விடுதலைக்குச் சரியான வழிகளில் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு போராட வாருங்கள்.

No comments:

Post a Comment