பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்களில் தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.15 லட்சமாக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்களில் தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.15 லட்சமாக உயர்வு

சென்னை,அக்.30- தமிழ்நாட்டில் உள்ள பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்களில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் .சண்முகசுந்தரம், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்களால் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்சவரம்பு கடந்த 2017இல் ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தனிநபர் கடன் உச்சவரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்க கோரிக்கைகள் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து, தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.15 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

மேலும், கடனை திருப்பிச் செலுத்தும் தவணைக்காலம் 120 மாதங்களுக்குள் இருக்க வேண்டும். உறுப்பினர்களின் வயது வரம்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதிகபட்ச கடன் அளவு ரூ.15 லட்சம் அல்லது உறுப்பினர் பெறும் மொத்த சம்பளத்தில் 25 மடங்கு இதில் எது குறைவோ அத்தொகை கடனாக வழங்கப்பட வேண்டும்.

மேலும், வழங்கப்பட வேண்டிய கடன் தொகையில் 10இல் ஒரு பங்கு, பங்குத் தொகையாக கடன் பெறும் உறுப்பினர் களிடம் இருந்து பெறப்பட வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம் கடன் பெற்று வழங்கும் சங்கங்கள் 5 சதவீதம் பங்குத்தொகையை வசூலிக்க வேண்டும்.

பணியாளர்களின் மொத்த ஊதியத்தில் இருந்து அனைத்து பிடித்தங்களும் போக பணியாளர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம் அவருடைய மொத்த ஊதியத்தில் 25 சதவீதத்துக்குக் குறைவாக இருக்கக் கூடாது. பணியாளர்கள், பணிபுரியும் அலுவலக சம்பளம் வழங்கும் அலுவலர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட பின் கடன் தொகை அனுமதிக்கப்பட வேண்டும்.

பணியாளர்கள் கூட்டுறவு கடன். சிக்கன நாணயச் சங்கங்கள், சங்க நிதிநிலையைக் கருத்தில் கொண்டு விதிகளில் திருத்தம் செய்தபின் கடன் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment