சென்னை, அக்.10 10 அரசு கலை கல்லூரிகளில் புதிய ஆராய்ச்சி படிப்புகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் நலன் கருதி, ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வதற்கு செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், கோவில்பட்டி, சென்னை (நந்தனம்), திருப்பூர் ஆகிய 10 இடங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, மேற்சொன்ன 10 இடங்களில் புதிதாக ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-
கல்லூரி கல்வி இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் ஆய்வுசெய்த அரசு, அதனை ஏற்று, 2021-22ஆம் கல்வியாண்டு (நடப்பு கல்வியாண்டு) முதல் செங்கல்பட்டில் உள்ள இரா.வே.அரசு கலைக்கல்லூரியில் வணிகவியல், சேலம் அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல், கோவை அரசு கலைக்கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் விலங்கியல், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் உயிர்வேதியியல், திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் ஆங்கிலம், கும்பகோணம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இயற்பியல், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ், சென்னை நந்தனம் அரசினர் ஆண்கள் கலைக்கல்லூரியில் ஆங்கிலம், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் பன்னாட்டு வணிகம் ஆகிய ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் தொடங்கப்படஉள்ளன. இந்த கல்லூரிகளில் ஏற்கெனவே முதுகலை மற்றும் முது அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள உதவி பேராசிரியர் களை கொண்டு கையாள்வதற்கும் அனுமதி அளித்து ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment