காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரை
சென்னை, செப்.3 காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத வகையில் சூழலை உருவாக்கும் துறையாக மாறவேண்டும் என்று காவல் உதவி ஆய்வா ளர்களுக்கான ஓராண்டு பயிற்சி தொடக்க விழாவில், முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
வண்டலூர் ஊனமாஞ்சேரி யில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில், உதவி ஆய்வாளர்களுக்கான ஓராண்டு பயிற்சியை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றுமுன்தினம் (1.9.2021) தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு,
தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு வாரி யத்தின் மூலம் காவல் உதவி ஆய்வாளர் பணி யிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூலை 26 ஆம் தேதி பணி நியமன ஆணைகளை வழங்கினார். பணி நியமனம் பெற்ற 941 பேரில், தாலுகா காவல் நிலையங்களுக்கு 645 பேரும், ஆயுதப்படைக்கு 265 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கு 31 பேரும் ஆணைகளை பெற்றுள்ளனர். இவர்களில் 280 பெண் காவல் ஆய்வாளர்களும் உள்ளனர். இவர்களுக்கு, தமிழ்நாடு உயர் பயிற்சியகத்தில் ஓராண்டு அடிப்படைப் பயிற்சி வழங்கப் பட உள்ளது. இப்பயிற்சி வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவு பெறும்.
இப்பயிற்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டா லின் பேசியதாவது:
அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால் மற்றொரு கை காவல்துறை. இரண்டும் முறை யாக, சரியாகச் செயல்பட்டால் அந்த அரசாங்கம் தலைசிறந்த அரசாங்கமாக போற்றப்படும். அந்தவகையில் காவல்துறை யின் செயல்பாடு மிகவும் முக் கியமானது. இத்துறையில் எத் தனையோ உயர் பதவிகள் இருந்தாலும், மக்களோடு நேர டியாக தொடர்பு கொள்ளக் கூடியவர்களாக உதவி ஆய் வாளர் களாகிய நீங்கள்தான் இருக்கப் போகிறீர்கள். அந்த வகையில் முக்கியமான கடமை யும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது. ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின் துறைவாரியாக உயர் அதிகாரிகளுடன் தனித்தனி யாக கலந்துரையாடினேன்.
அப்போது உயர் காவல் துறை அதிகாரிகளைச் சந்தித்து, ஓர் கருத்தை வலியுறுத்திச் சொன்னேன். ‘‘காவல்துறை என்றாலே குற்றங்களைத் தடுக்கும் துறையாக, தண்டனை வாங்கித் தரும்துறையாக மட் டுமே அனைவரும் நினைக்கின் றனர். காவல் துறை என்பது குற்றங்கள் நடக்காதவகையில் சூழலை உருவாக்கித் தரும் துறையாக மாற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதைவிட, குற்றமே நடை பெறாத சூழலைஉருவாக்கும் துறையாக மாற வேண்டும்’’ என்று குறிப்பிட்டேன். என்னு டைய இந்த ஆசை உங்கள் ஆசையாகவும் மாற வேண் டும். அரசிடம், மக்கள் எதிர் பார்ப்பது அமைதிதான். அந்த அமைதியை உருவாக்கித் தரும் கடமை காவல்துறைக்கு இருக் கிறது. உடல்வளம், மனத்திறம், அறிவு வளம் மூன்றும் உள்ள வர்களாக நீங்கள் மாற வேண் டும். தொழில்நுட்ப அறிவு காவல் துறையினருக்கு அவசியம் வேண்டும். பயிற்சி பெற்று காவல்துறையில் நீங்கள் செயல் பட தொடங்கும்போது அமை தியான தமிழ்நாட்டை உரு வாக்க சூளுரைக்க வேண்டும்.
அநியாயத்தை தடுக்க எப் போதும் தயங்கா தீர்கள். நியாயத்துக்காக எப்போதும் நில்லுங்கள். உங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியை குற்றம் நடக்காத பகுதியாக மாற்றுங் கள். உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டுங்கள். இவற்றை சட்டப்பூர்வமாக செய்யுங்கள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற் றினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் துறை இயக்குநர் செ.சைலேந் திரபாபு, காவல் உயர் பயிற்சிய கத்தின் இயக்குநர் அ.அமல் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
No comments:
Post a Comment