பாராட்டத்தக்க தலையங்கங்கள் - திராவிடமே உயிரூட்டும் அமுது; நோய் தீர்க்கும் மருந்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 8, 2021

பாராட்டத்தக்க தலையங்கங்கள் - திராவிடமே உயிரூட்டும் அமுது; நோய் தீர்க்கும் மருந்து!

திராவிடம்' என்ற சொல்லை எதிர்த்து சிலர் பம்மாத்துக் காண்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்!

திராவிடம்' குறித்த சர்ச்சையே தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித் துறையின் அறிவிப்பை ஒழுங்காகப் படிக்காததன் விளைவுதான். அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிவிப்பை ஒழுங்காக வாசிக்கத் தெரியாத அளவுக்கு சிலருக்கு தமிழ் வாசிப்பு வளர்ச்சி அடையாமல் போனதன் விளைவு அது. தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து மலிவுப் பதிப்புகளாக வெளியிடுவது என்பது ஒன்று, திராவிடக் களஞ்சியம் என்ற நூல் வேறு ஒன்று. இரண்டையும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொண்டார்கள் தமிழ்த் தேசியம் என்பதாக ஆரியச் சேவகம் செய்து கொண்டிருக்கும் சிலர்.

இரண்டும் வேறு வேறு என்பதை அமைச்சரும் அறிவித்த பின்னால், தமிழ் இலக்கியத்தை திராவிடக் களஞ்சியம்' என்று அழைக்கக் கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி திசை திருப்புபவர்கள் நோக்கம் என்ன? தி.மு.. மீது குறைகாணுதல் தவிர வேறு அல்ல!

இந்தக் கற்பனைக் குற்றச்சாட்டை வைத்துப் பேசும் சிலர், தங்களது இரத்த வழக்கமான பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டுவதற்கு கி..பெ.விசுவநாதமும், அண்ணல் தங்கோவும் எதிர்த்தார்கள். தமிழர் கழகம் என்றுதான் பெயர் சூட்டச் சொன்னார்கள்' என்கிறார்கள். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதே உண்மை.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம்' என்ற பெயரை நீக்கிவிட்டு திராவிடர் கழகம்' எனப் பெயர் சூட்ட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தவர் பேரறிஞர் அண்ணா. தமிழர் கழகம்' என்று பெயர் சூட்ட கி..பெ.விசுவநாதம் அவர்கள் சேலம் மாநாட்டில் சொல்லவில்லை. தமிழ்நாடு நீதிக்கட்சி' என்றுதான் பெயர் சூட்டச் சொன்னார் விசுவநாதம் அவர்கள். இதனை முத்தமிழ்க் காவலரின் பேரன் கோ.வீரமணி அவர்கள் தனது ஆய்வு நூலில் விளக்கமாக எழுதி இருக்கிறார்.

திராவிட நாடு குறித்த அய்யம் எனக்கு இருந்தது. அது நீங்கிவிட்டது. பெரியார் தலைமையில் திராவிட நாடு அமைத்தே தீருவோம். இதை நாம் தமிழ்நாட்டில் மட்டுமே பேசக் கூடாது. மலையாளம், தெலுங்கு, கன்னட நாட்டிலும் பேச வேண்டும்' என்று அந்த மாநாட்டில் பேசியவர் தான் கி..பெ. அவர்கள். அதன் பிறகு அவர் அரசியலை விட்டு ஒதுங்கினார். மூன்று ஆண்டுகள் கழித்து தமிழர் கழகம்' தொடங்கினார். எனவே, சேலம் மாநாட்டில் திராவிடர் கழகம்' என்ற பெயரை யாரும் எதிர்க்கவில்லை. பத்து ஆண்டுகள் கழித்து பெரியாரும், முத்தமிழ் காவலரும் பல மாநாடுகளில் ஒன்றாக பங்கெடுத்தார்கள். போராட்டங்களில் ஒன்றாக ஈடுபட்டார்கள். எனவே, தனது கற்பனைகளை வரலாறு ஆக்க முயலக்கூடாது.

ஆரியர்களைக் குறிக்கவே திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது' என்பது இந்த சிலரின் அடுத்த கற்பனை. நல்லவேளை மறைமலையடிகளும், பாவாணரும், பாவேந்தரும் சீக்கிரமாகவே செத்துப் போய்விட்டார்கள். இதைக் கேட்டால் தலையில் அடித்துக் கொண்டிருப்பார்கள். தமிழ் பிராமணர், கன்னட பிராமணர், மலையாள பிராமணர் என்பதைப் போல - பஞ்ச திராவிடர்' என்று சிலர் வடமாநிலங்களில் அழைக்கப்பட்டார்கள். திராவிட நாட்டில்' இருந்து மராட்டியம் போன்ற வடமாநிலங்களில் குடியேறியவர்கள் இவர்கள். திராவிட நாட்டில் இருந்து குடியேறிய பிராமணர்கள், திராவிட பிராமணர்களாக அழைக்கப்பட்டார்கள். இதை 1950 ஆம் ஆண்டே  குயில்' இதழில் விளக்கமாக எழுதிவிட்டார் பாவேந்தர்.

கழகம் உதயம் ஆவதற்கு முன்பாகவே உள்ள அறிவுப்பனுவல்கள் அனைத்தையும் பாருங்கள். அய்ம்பத்தாறு தேசங்களில் ஒன்று' என்கிறது யாழ்ப்பாண அகராதி. தட்சிணப் பிரதேசத்திலிருந்து கன்னியாகுமரி ஈறாக உள்ள தேசம்' என்கிறது அபிதானசிந்தாமணி. திராவிடம் என்றால் தமிழ்நாடு - தமிழ்' என்கிறது தமிழ்மொழி அகராதி. திராவிடம் என்றால் தமிழும் அதன் கிளைமொழிகளும்' என்கிறது கழகத் தமிழ் கையகராதி. தமிழ் என்றால் திராவிடம் என்கிறது நாமதீப நிகண்டு. 18 மொழிகளில் திராவிடம் ஒன்று என்கிறது சேந்தன் திவாகரம். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இடப் பெயராகவும், இனப்பெயராகவும், மொழிப் பெயராகவும் பல நூற்றாண்டு காலமாக இருந்த பெயரை அரசியல் களத்தில் பயன்படுத்தியவர்தான் அயோத்திதாசப் பண்டிதர். இரட்டைமலை சீனிவாசனும் எம்.சி.இராஜாவும் அமைப்பின் பெயராகவும் ஆக்கினார்கள். இதனையே ஆயுதம் ஆக்கி அரசியல் களத்தில் செயல்பட்டார் தந்தை பெரியார். அவரது எண்ணத்தின் அடித்தளத்தில்தான் திராவிடர் கழகம்' என்ற தீர்மானத்தை அண்ணா கொண்டு வந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை அண்ணாவும், அவரது தம்பிமார்களும் தொடங்கி னார்கள். தமிழ்நாடு என்ற நிலத்தில், தமிழினத்துக்காக திராவிடச் சிந்தனை கொண்ட' அரசியலை முன்னெடுத்ததே இதன் உள்ளடக்கம் ஆகும். அரசியலில் சிறு ஞானம் உள்ளவர்களும் இதனை உணர்வார்கள்.

திராவிடம் என்றால் என்ன தெரியுமா? இதுதான்....

தமிழில் இருந்து ஆரியம் நீக்கச் சொல்கிறது திராவிடம். தமிழனில் இருந்து ஆரியர்களை விலக்கச் சொல்கிறது திராவிடம். தமிழ்ச் சிந்தனை மரபில் சமஸ்கிருதத்தைப் பிரிக்கச் சொல்கிறது திராவிடம். அனைத்து கல்வி, வேலை வாய்ப்புகளிலும் தமிழர்களை உட்கார வைக்கச் சொன்னது திராவிடம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிறது திராவிடம். கோவில்களில் மட்டுமல்ல; அனைத்திலும் தமிழ் கோலோச்ச வேண்டும் என்பது திராவிடம். இப்படி ஆரியத்தின் அனைத்து வாசல்களையும் அடைக்கச் சொல்வது திராவிடம். அதனால்தான் இங்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை பார்த்தால் அவர்களுக்கு காய்ச்சலாக இருக்கிறது. பெரியார் இல்லை, அண்ணா இல்லை, கலைஞர் இல்லை என்று நிம்மதியாக டான்ஸ் ஆடப் பார்த்தவர்களின் தூக்கம் கெடுக்கும் வகையில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் திராவிட மாடல்' ஆட்சியை நவீனச் சொல்லாடல்களுடன் சொல்லி வருவதைப் பார்த்ததும் எரிச்சலாக இருக்கிறது. விபீஷ்ணர்களை இறக்கிவிட்டு சாமரம் வீசுகிறார்கள்.

மொழி ஆராய்ச்சியாளர்கள் வசம் இருந்த திராவிடத்தை' அரசியல் மயமாக்கி - அதனை ஆட்சிக் கட்டிலிலும் அமர்த்திச் செயல்படுத்தி விட்டார்களே என்ற ஆத்திரத்தில்தான் திராவிடம்' இன்று ஆரியச் சக்திகளால் எதிர்க்கப்படுகிறது. கைக்கூலிகளும் அதில் சேர்ந்து கொண்டதுதான் பேரவலம்!

- நன்றி: ‘முரசொலி', 8.9.2021

No comments:

Post a Comment