விநாயகர் ஊர்வலமும் பா.ஜ.க.வின் மிரட்டலும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 3, 2021

விநாயகர் ஊர்வலமும் பா.ஜ.க.வின் மிரட்டலும்

1980களில் துவங்கி 1992களில் தமிழ்நாட்டைத் தவிர  இந்தியத் துணைக் கண்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கலவரம் வெடித்தது; மும்பை குண்டுவெடிப்பு, குஜராத் கலவரம் போன்றவற்றிற்குக் காரணம் பாஜக துவக்கிய ராமர் கோவில் ரதயாத்திரையே என்று கலவரம் தொடர்பாக பல மாநிலங்கள் அமைத்த விசாரணைக் குழுக்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மதக்கலவரம் தான் பாஜகவின் மூலதனம்!  ராமர் கோவில் தொடர்பான மதக்கலவரத்தில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா போன்ற பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட பகுதிகளில் அந்த அந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையை வைத்தே மதக்கலவரத்தைத் தூண்டி அரசியல் லாபம் பார்க்கும் உத்தியை திட்டமிட்டுச் செய்தது - செய்வது  அதன் வழிமுறை!

2016-2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் மேற்குவங்கத்தில் தொடர்ந்து துர்காஷ்டமி ஊர்வலம் - தசரா ஊர்வலம் என்று கூறிக் கொண்டு, கலவரத்தில் ஈடுபட்டதால் திட்டமிட்டபடி 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சில இடங்களைக் கைப்பற்றியது பா...

இவர்களின் தந்திரத்தை தாமதமாகப் புரிந்துகொண்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா மத ஊர்வலங்களுக்குத் தடை போட்டார். இருப்பினும் 2019 ஆம் ஆண்டு தசரா யாத்திரை நடத்தியே தீருவோம் என்று கூறி மாநிலம் முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த முயன்றனர். மேலும் மக்களிடையே மம்தா ஹிந்துக்களுக்கு எதிரி என்ற ஒரு பிரச்சாரத்தைப் பரப்பினர், இதனையே 2021ஆம் ஆண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையாகவும் மாற்றினர், ஆனால் மக்கள் பாஜகவின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு அவர்களை முற்றிலும் ஒதுக்கி விரட்டியடித்தனர்.

 ஜம்மு - காஷ்மீரில் எப்போதுமில்லாதவகையில் அங்கே கிருஷ்ணன் ஜெயந்திவிழா ஊர்வலம் நடத்தி உள்ளனர். இவர்கள் ஊர்வலம் செல்லும் பாதைகளில் எல்லாம் ராணுவம் மற்றும் இதர ஆயுதப்படையினரை நிறுத்தி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை மூட்டினர்.

 அதே போல் கேரளாவில் அய்யப்பனைக் கையில் எடுத்தார்கள். பெண்கள் அய்யப்பன் கோவிலுக்குள் நுழையலாம் என்று உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை முன்னிறுத்தி நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தவிடாமல் திட்டமிட்டுக் கலவரத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் மிகவும் வித்தியாசமாக அவர்களே எதிர்ப்பு அணி - ஆதரவு அணி என்று இரண்டு அணியை உருவாக்கினர்,

ஓர் அணியினர் கோவிலுக்குப் பெண்கள் போவதை எதிர்த்துப் போராடுவார்கள். உடனே அவர்கள் ஏற்பாடு செய்த சிலர் பெண்ணுரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் கோவிலுக்குள் நுழைய முயற்சிப்பார்கள்.

 இப்படியாக அவர்களாகவே கலவரத்தை ஏற்படுத்தி, இந்த விவகாரத்தை கேரள சட்டமன்ற தேர்தல் வரை அணையாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால்  2016ஆம் ஆண்டு பாஜக விற்குக் கிடைத்த ஒரு இடம்கூட இந்த முறை கிடைக்க வில்லை. அதைவிட பா... பிரபல முகங்களே கேரளாவில் வைப்புத் தொகையை இழந்து மோசமான தோல்வியைத் தழுவினர்.

தமிழ்நாட்டில் முருகனை வைத்து அரசியல் நடத்த வில்லையா? 2021ஆம் ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடக்க விருந்ததால் 2020 ஆம் ஆண்டு அக்டோபரிலேயே வேல் யாத்திரை என்ற பெயரில் கிளம்பி விட்டார்கள்.

 கையில் கிடைத்த வீடு துடைக்கும் குச்சி, மின்சார வயர் கொண்டு செல்லும் பிவிசி பைப் என்று பல பொருட்களில் வேல் செய்து, வீட்டு முற்றத்தில், சமையலறையில், அலமாரியில் என எங்கு பார்த்தாலும் 'வேலை' வைத்து அரசியல் வேலை பார்த்தார்கள். ஆந்திராவில் இருந்து துணை நடிகைகளைக் கூட்டிவந்து சாலைகளில் ஆபாச அசைவுகளோடு கூடிய நடன ஊர்வலம் நடத்தினார்கள் - ஆனாலும் பிள்ளை பிழைத்த பாடில்லை.

தற்போது பிள்ளையார் ஊர்வலத்தை கையிலெடுத் துள்ளார்கள்.  ஒவ்வொரு ஆண்டும் அது கலவரத்தில் தான் முடிகிறது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்குள் சென்று தடையை மீறிக் கலாட்டா செய்தனர்.

ஒன்றிய  அரசின் சுகாதாரத்துறையே கரோனா மூன்றாம் அலை எச்சரிக்கைவிடுத்து, முக்கியமாக பிள்ளையார் சதுர்த்தி, துர்க்கா பூஜை போன்ற ஊர்வலங்களை நடத்த அனுமதிக்க வேண்டாம் என்று கூறிய நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, "விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களிடமே விட்டு விடுங்கள். கரோனா விதி முறை களைப் பின்பற்றி விழாவை சிறப்பாக நடத்திக் காட்டுவார்கள்.  விழாவை நடத்தவே கூடாது என்று சொல்வதை பாஜக ஏற்றுக் கொள்ளாது.  எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும்" என்று கூறியுள்ளார்.

 மக்கள் நலன்தான் முக்கியமே தவிர மத ஊர்வலம் அல்ல; சட்டத்தை மீறினால் அரசு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

No comments:

Post a Comment