வாய்மையே வெல்லும்! (சத்யமேவ ஜெயதே!) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 1, 2021

வாய்மையே வெல்லும்! (சத்யமேவ ஜெயதே!)

அதிகாரத்தில் இருப்பவர்கள், அவர்கள் பேரரசு அதிகாரம் படைத்தவர்களாகவோ அல்லது அனைத்து அதிகாரம் பெற்றிருக்கும் அரசாகவோ இருந்தாலும் சரி, அவர்களிடம் மக்கள் உண்மையையே பேச வேண்டும் என்பதன் தேவையை உச்சநீதிமன்ற நீதிபதி  டி. ஒய். சந்திரசூட் வலியுறுத்திப் பேசியுள்ளார்.

"ஜனநாயகம் பிழைத்து உயிர் வாழ்வதற்கு உண்மை தேவை.  ஜனநாயகமும் உண்மையும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்துக் கொண்டு பயணம் செய்பவையாகும். அதிகாரத்தில் இருப்பவர்களிடம் உண்மையைப் பேசுவ தற்கான உரிமை ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனுக் கும் உள்ளது. அதே நேரத்தில் அவ்வாறு உண்மை பேசுவது குடிமகனின் கடமையுமாகும்" என்று கடந்த 28 ஆம் தேதி ஆறாவது ஆண்டு எம்.சி. சாக்ளா நினைவு காணொலிக் காட்சியில் உரையாற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி  டி. ஒய். சந்திரசூட் கூறியுள்ளார்.

"உண்மை ஆணைய"மாக உச்சநீதிமன்றம் செயல் பட்டுள்ளது.   கோவிட்-19 தொற்று நோயின்போது,  உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்ற உண் மையைத் தனது திறமையைக் கொண்டு நமது எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக உச்சநீதிமன்றம் ஆவணப் படுத்தி உள்ளது.  தேசத்தின் மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ளும்  பொது நினைவுகள் உண்மையின் மீது கட்ட மைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.  உண்மையையே பேசும் செயல் ஆட்சி யதேச்சதிகாரத்தை எதிர்த்து, ஒரு கொடுங்கோலாட்சி உருவாவதற்கான வாய்ப்புகளையும், வழிகளையும் அடைத்து ஒழித்து விடுகிறது" என்று அவர் கூறினார்.

"நவீன ஜனநாயக நடைமுறைகள் உயிர் பிழைத்து வாழ்ந்திருக்க வேண்டுமானால், அதிகாரத்திடம் உண்மை பேசுவது முற்றிலும் இன்றியமையாதது ஆகும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் மேற்கொள்ளப்படும் முடிவுகளுக்குப் போதுமான அளவிலான காரண காரியங்கள், நியாயங்கள் பக்க பலமாக இருக்கும் "நியாயமான இடத்தை" ஜனநாயக நாடுகள் கண்டுள்ளன. பொய்யின் அடிப்படையிலான எந்த ஒரு நியாயமும், நியாயமே அல்ல என்று அவர் கூறினார். யதேச்சதிகார அரசுகள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள் வதற்காக தொடர்ந்து பொய்களையே சார்ந்திருக்கின்றன என்று குறிப்பிட்ட அவர்,  ஜனநாயகத்தில் மக்களுக்கு நம்பிக்கை உணர்வை உருவாக்குவதற்கு அரசாட்சியில் உண்மையும் நேர்மையும் கடைப்பிடிக்கப்படுவது மிகவும் முக்கியமானது என்று கூறினார். இதனை நன்றாக உணர்ந் திருந்த, நமக்கு ஓர் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த பேரறிவு கொண்ட  நமது முன்னோர்களின்  நோக்கம் 'சத்யமேவ ஜெயதே' (வாய்மையே வெல்லும்) என்பதாகத் தான் இருந்தது" என்றும் நீதிபதி சந்திரசூட் கூறினார். நமது சமூகத்தின் முக்கியமான விருப்பமாக உள்ள, உண் மையைத் தேடும் பணியில் ஓரு ஜனநாயக நாட்டின் குடி மக்களாக  நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார்.

உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் சொல்லியிருப்பது பொதுவான கருத்தாக இருந்தாலும், இன்றைய நாட்டு நடப்பையும், ஒரு வகையில் ஆட்சி முறையையும்  இடித்துக் காட்டுவதாக உள்ளது.

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்." (குறள் 448)

என்பது குறள். இதனைத்தான் தனது மொழியில் தன்மையாக எடுத்துக் கூறியுள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதி.

ஒன்றிய அரசை எதிர்த்து உண்மைச் செய்திகளை வெளியிட்டாலும் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் தொடர் கதையாகத் தானே இருந்து வருகின்றன. ஊடக சுதந்திரத்தில் உலகில் இந்தியாவுக்கான இடம் - 142 என்பது பெருமைக்கு உரியது தானா?

மனீஷ்குமார் சிங், சென்ன கேஷ்வரலு, சுலப சிறீவாஸ்தவ, எஸ்.வி. பிரதீப், ராகேஷ்சிங், பரங்க் பயூன், இஸ்ரவேல் மோசஸ், சுனில் திவாரி, சுபம்மனி, அச்சு தானந்தசாகு, சஹுஜாத்புகாரி, சந்திப் சர்மா, நவீன நிஸ்சால், விஜய்சிங் உள்ளிட்ட (இன்னும் பட்டியல் உள்ளது).

ஊடக இயலாளர்கள் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்தால் நீதிபதியின் கருத்து எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment