சென்னை, செப்.8 கலைஞர் மாரத்தான் போட்டிக்கு பெறப்பட்ட பதிவு கட்டணம் ரூ.56 லட்சத்தை முதல்-அமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
மேனாள் முதலமைச்சர் கலைஞரின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி தி.மு.க. சார்பில் கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் போட்டி கடந்த ஆகஸ்டு 7ஆம்தேதி முதல் 31ஆம்தேதி வரை இணையவழியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 36 நாடுகள், இந்தியாவில் 4 மாநிலங்கள், தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் இருந்துமொத்தம் 19 ஆயிரத்து 596 பேர் பங்கேற்றனர். இதன் மூலம் கரோனா பேரிடர் காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இணைய வழியாக நடத்தப்பட்ட மெய்நிகர் மாரத்தான் போட்டியில், கலைஞர் மெய்நிகர் மாரத்தான் போட்டி உலக சாதனை மற்றும் ஆசிய சாதனை படைத்தது. மேலும் இப்போட்டி பதிவு கட்டணமாக 56 லட்சத்து 2 ஆயிரத்து 693 ரூபாய் கிடைத்திருந்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா மற்றும் பதிவுக் கட்டணத்தை முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (7.9.2021) மாலை நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.56 லட்சத்து 2 ஆயிரத்து 693 பணத்தை கரோனா நிவாரண நிதிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார். அதன்படி 21 கி.மீ. தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடிய புனேயை சேர்ந்த பாபுபரந்தாமன் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், கோவையை சேர்ந்த டாக்டர் வேலாயுதம் என்பவருக்கு 2ஆம் பரிசாக ரூ.15 ஆயிரமும், சென்னையை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு 3ஆம் பரிசாக ரூ.10 ஆயிரமும், கோவையை சேர்ந்த மாரிமுத்து உதயகுமார் என்பவருக்கு 4ஆம் பரிசாக ரூ.7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.
4ஆம் வகுப்பு மாணவன்
10 கி.மீ. தூர மாரத்தானில் முதல் பரிசு பெற்ற ஓசூரை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவன் ரோகித்துக்கு ரூ.15 ஆயிரமும், 2ஆம் பரிசு பெற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி அக்ஷயா சிறீக்கு ரூ.10 ஆயிரமும், 3ஆம் பரிசு பெற்ற திருவாரூரை சேர்ந்த அருண் சுரேஷ் என்பவருக்கு ரூ.7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. 5 கி.மீ. தூர மாரத்தானில் சென்னை கலைஞர் நகரை சேர்ந்த 4ஆம் வகுப்பு மாணவர் ரூபேஷ் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், கண்ணன் என்பவர் 2ஆம் பரிசாக ரூ.7 ஆயிரத்து 500ஆம், துறையூரை சேர்ந்த கல்லூரி மாணவர் கிரிராவ் 3ஆம் பரிசாக ரூ.5 ஆயிரமும் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment