சென்னை, செப்.1 சட்டப்பேரவையில் நேற்று (31.8.2021) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானிய கோரிக்கை விவாதத்துக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அது வருமாறு:
* திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மின்தூக்கி வசதியுடன் பொதுமக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கம் மற்றும் இதர அலுவலக கட்டடங்கள் ரூ.12.50 கோடியில் புதிதாக கட்டப்படும்.
* விருதுநகர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் ரூ.72 கோடியில் கட்டப்படும்.
* விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
* அ-பதிவேடு, சிட்டா, புலப்படம், பயிர் சாகுபடி, நில பயன்பாடு போன்ற விவரங்களை உள்ளடக்கி ஒருங்கிணைந்த நில ஆவணம் இணைய வழி சேவை மூலம் வழங்கப்படும்.
* புல எல்லையை அளந்து காட்ட பொதுமக்கள் எங்கிருந்தும் இணையம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
* ஒன்றிய நில அளவை அலுவலகம் மற்றும் நலவரி திட்ட அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பழமையான ஆவணங்களை ஒளிபிம்ப நகல் எடுத்து பராமரிப்பதற்காகவும், தேவைக்கேற்ப பயன்படுத்தவும் ரூ.8.74 கோடியில் மென்பொருள் உருவாக்கப்படும்.
* முறையற்ற நில பரிவர்த்தனைகளை தடுக்கும் வகையில், இணையவழி சேவையில் உள்ள நில ஆவணங் கள் பிற அரசுத் துறைகள், நீதி மன்றங்கள், பாதுகாப்பு துறையுடன் ஒருங்கிணைப்படும்.
* கடலோர மாவட்டங்களில் ஏற்படும் பேரிடர்கள் அபாயத்தை சிறப்பாக கையாள, 13 கடலோர மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக) நீலகிரி மாவட்டம் என 14 வட்டாட்சியர் பணியிடங்களை துணை ஆட்சியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படும்.
* வெள்ள பாதிப்பு தணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள 187 தானியங்கி வானிலை மய்யங்கள், தானியங்கி மழைமானிகள் 1000 குறுவட்டங்களில் ரூ.25 கோடியில் தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டில் நில எடுப்பு நடவடிக்கைகளில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமைபடுத்தும் பொருட்டு, நில உரிமையாளர்களுக்கு சரியான இழப்பீட்டு தொகையை தீர்மானிக்க மாநிலத்தில் உள்ள அனைத்து வகையான நில எடுப்பு சிறப்பு அலகுகளையும் ஒருங்கிணைத்து மாநில அளவில் நில எடுப்புக்கான தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்.
No comments:
Post a Comment