மக்கள் பணத்தைத்தான் கொடுக்கிறார்கள் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கருணை அடிப்படையில் நிதியைத் தரவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 1, 2021

மக்கள் பணத்தைத்தான் கொடுக்கிறார்கள் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கருணை அடிப்படையில் நிதியைத் தரவில்லை

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை, செப்.1 தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நிதி அளிப்பது, கருணை அடிப்படையில் அல்ல என்று சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

வானதி சீனிவாசன்:- தென்னிந்திய £வின் மான்செஸ்டர் என்று அழைக்கப் படும் கோவையில், நாட்டிலேயே மோட்டார் உற்பத்தி 60 சதவீதமும், கிரைண்டர் உற்பத்தி 40 சதவீதமும் நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கு தொழில் வளர்ச்சி தேவையான அளவு இல்லை.

கோவை விமான நிலையத்திற்கு நில எடுப்பு பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றும் இன்னும் முடியவில்லை. இது அந்த மாவட்ட வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு நில எடுப்பு பணியை விரைந்து முடித்து கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 8 விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தேவை யான நில எடுப்பு பணியை முடித்து தருமாறு மாநில அரசுக்கு ஒன்றிய அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்:- மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிக்கு நில எடுப்பு பணி முடிந்துவிட்டது. கோவை விமான நிலையத்திற்கு நில எடுப்பில் இருக்கும் பிரச்சினைகளை உறுப்பினர் எடுத்துச் சொல்லலாம். கோவை விமான நிலையத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வானதி சீனிவாசன்:- பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் நலன் சார்ந்தவைகளுக்காக பாலின ரீதியான பட்ஜெட்டை அடுத்த ஆண்டே தாக்கல் செய்ய முன்வர வேண்டும். ஆண்டாள் பெயரில் பெண் கவிஞர்களுக்கு விருது வழங்க தமிழ் வளர்ச்சி துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிரதமரை திரும்பிப் போ என்று சொன்னாலும், பாதுகாப்பு தொழில் வழித்தடம் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளது.

தமிழர்களுக்கு முன்னுரிமை

பொதுப்பணித்துறை அமைச்சர் ..வேலு:- ரயில்வே துறை, விமான துறை உள்ளிட்டவை ஒன்றிய அரசிடம்தான் உள்ளது. எனவே, அந்த நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உறுப்பினர் ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு:- பாதுகாப்பு தொழில் வழித்தடத்தை கொண்டு வருவதில் தமிழ்நாடு அரசு ஆர்வமாக உள்ளது. உறுப்பினரும் ஆர்வமாக ஒன்றிய அரசிடம் சொல்ல வேண்டும்.

கருணை அடிப்படையில் நிதியா?

நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்:- உறுப்பினர் இங்கே ஏதோ, ஒன்றிய அரசு கருணை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கியதைப் போல பேசினார். ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் வருவாய் ஈட்டிக்கொடுத்தால், அதில் 35, 40 பைசாவைத்தான் நமக்கு தருகிறார்கள். எனவே, கருணை அடிப்படையில் நிதியை தரவில்லை. இது மக்கள் பணம்.

வானதி சீனிவாசன்:- கருணை அடிப்படையில் நிதி வழங்கப்பட்டதாக நான் சொல்லவில்லை. கற்பனையாக நினைத்துக் கொண்டு அமைச்சர் பேசுகிறார். மக்கள் வரி பணம் அரசுக்கு போய் திட்டங்களாக மீண்டும் வருகிறது.

தமிழ்நாட்டிற்கு 3 மெகா ஜவுளிப் பூங்காவை ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. அதில் மாணவர் களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அது அவர்களின் வேலைவாய்ப்புக்கு உறுதுணையாக இருக்கும். பஞ்சமி நிலம் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

பஞ்சமி நிலம் மீட்பு

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்:- பஞ்சமி நிலம் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 297 ஏக்கர் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அதை மீட்டு அதே வகுப்பினரிடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment