தலிபான்கள் அறிவித்துள்ள அரசு சட்டவிரோதமானது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 10, 2021

தலிபான்கள் அறிவித்துள்ள அரசு சட்டவிரோதமானது

கிளர்ச்சிப் படைத் தலைவர் தகவல்

காபூல், செப்.10 தலிபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்ட விரோத மானது என்று கிளர்ச்சிப் படையின் தலைவர் அகமது மசூத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் அந்நாட்டின் பெரும்பாலான பகுதி தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால் பஞ்ச்ஷீர் பகுதி மட்டும் தலிபான்களை எதிர்த்து போராடி வந்தது. இதனைத்தொடர்ந்து ஒட்டுமொத்த பஞ்ச்ஷீர் மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆனால் தலிபான்கள் எதிர்ப்பு கூட்டணியின் முக்கிய தலைவர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

இதனிடையே இடைக்கால அமைச்சரவையையும், இடைக்கால பிரதமரையும் தலிபான்கள் அறிவித்து உள்ளனர். தற்போது முந்தைய ஆட்சியின்போது அவர்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை கைது செய்தும் கொலை செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்ட விரோதமானது என்றும் இது ஆப்கானிஸ்தான், பிராந்தியம் மற்றும் உலகின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்றும் ஆப்கான் தேசிய கிளர்ச்சிப் படையின் தலைவர் அகமது மசூத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தான் மக்களை தலிபான்களுக்கு எதிராக எழுச்சிபெறுவதற்கு அழைப்பு விடுத்த அவர், அய்க்கிய நாடுகள் சபை, அய்க்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, அய்ரோப்பிய ஒன்றியம், ஷாங்காயின் அமைப்பு, பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு போன்ற உலகளாவிய நிறுவனங்களையும் தலிபான்களுடன் ஒத்துழைக்கக் கூடாது என்று அகமது மசூத் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment