சத்ரு சம்ஹார யாகமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

சத்ரு சம்ஹார யாகமாம்!

"உலக நன்மைக்காகவும், ஹிந்து சமயத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனைகளில் இருந்து விடுபடவும், சத்ரு சம்ஹார, லோக சேம ஹோமங்கள், சென்னையில் சங்கராலயத்தில்  நடந்தன.

ஹிந்து கலாச்சாரத்தையும், ஆன்மிகத்தையும் வளர்த்து போதித்து வருகிறது, 'சுதேசி' பத்திரிகை. இதன் சார்பில், நாட்டில் பரவியுள்ள நோயினை அகற்றவும்; பொருளாதார தேக்கத்தில் இருந்து மீண்டு வரவும்; ஹிந்து சமயத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனைகளில் இருந்து விடுபடவும், சத்ரு சம்ஹார லோக சேம ஹோமங்கள் நடத்தப்பட்டன.

சென்னை சேத்துப்பட்டு, சங்கரமட சங்கராலயத்தில், துவங்கிய நிகழ்ச்சியில், நடிகர் எஸ்.வி.சேகர் பங்கேற்று, சங்கல்பம் செய்து கொண்டார். ஆன்மிக பேச்சாளர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசியதாவது:

நம் தேசத்தின் தற்போதைய நிலைமை மாற வேண்டும். நம்மை என்னென்ன துன்பங்கள் சூழ்ந்துள்ளன; அவை யாரால் ஏற்படுகின்றன என்பதை அறிந்து, அவற்றுக்கு பரிகாரம் தேட வேண்டும்.

பகவான் கிருஷ்ண பரமாத்மா, 'தர்மத்தை காப்பாற்ற, நான் வருவேன்' என்று கூறியுள்ளார். அவர் வரும் வரை காத்திருக்கக் கூடாது. முயற்சிக்காமல் பகவான் வருவார் என, நாமும் கைகட்டி நின்றால் அழிந்து போவோம்.

காஷ்மீர் முதல் குமரி வரை, ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமை, வல்லபாய் பட்டேலை சாரும்.

கட்சிகளுக்கு தேசத்தை பற்றி அக்கறை இல்லை. நம் யாருக்கும் கட்சி உணர்வே இருக்கக் கூடாது; தேசிய பற்று மட்டுமே இருக்க வேண்டும்.இவர்களை வைத்து, தேசம் முன்னேறுவது கஷ்டம். நாட்டின் எதிர்காலம் குறித்து யோசிக்கவே, இந்த சத்ரு சம்ஹார ஹோமம் நடத்தப் படுகிறது.சுப்பிரமணிய சுவாமி அசுரர்களை அழித்தது போல, நாட்டை அழிப்பவர்களிடம் இருந்து காப்பது தான் இந்த யாகம், ஹோமம். அக்னி வளர்த்து யாகம் செய்வதால், நம் வேண்டுதல் நேரடியாக கடவுளை சேரும்.இவ்வாறு அவர் பேசினார்.ஹோமத்திற்கான ஏற்பாடுகளை, சுதேசி பத்திரிகை நிறுவனரும், நிர்வாக ஆசிரியருமான பத்மினி ரவிச்சந்திரன் செய்திருந்தார்."

(தினமலர் 31.8.2021 பக்கம் 2)

இந்த 2021லும் பார்ப்பனர்களின் மனப்பான்மை ஹிந்துத்துவா பேசுவோரின் போக்கு எந்த ரீதியில் இருக்கிறது என்பதற்கு மேலே கூறப்பட்ட 'தினமலர் செய்தி - அப்பட்டமாக நிர்வாணத் தன்மையுடன் தன்னிலை விளக்கமாக விவரிக்கிறது.

யாகம் என்பது பார்ப்பனர்கள் கலாச்சாரம் - உயிர்களைப் பலி கொடுப்பது என்ற வரிசையில்  - மனிதர்களைக் கூடக் கொன்று யாகம் நடத்தியவர்கள் ஆவார்கள். (புருஷயஜ்ஞ)

ஆரியர்களின் இந்த யாகக் கலாச்சாரத்தை கவுதமப் புத்தர் எதிர்த்து முறியடித்தார். "உங்களுக்குச் சொர்க்கம் செல்ல ஆவல் இருந்தால் நீங்களே அல்லவா பலி பீடத்தில் கழுத்தை வைக்க வேண்டும். உங்களுக்குத் தேவை சொர்க்கமா? சோம பானமும், ஆடு, மாடுகளின் இறைச்சியுமா? மக்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்?" என்று யாகம் செய்யும் பார்ப்பனர்களைப் பார்த்துக் கேட்டார்.

எத்தனையோ முறை பார்ப்பனர்கள் யாகம் நடத்தி யதுண்டே! கரோனாவைத் தடுக்க முடிந்ததா? சுனா மியைத் தடுக்க முடிந்ததா? வறுமையை விரட்ட முடிந்ததா?

வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திருவாங்கூர் சிறையில் இருந்தார். அவரை சாகடிக்க இதுபோலதான் "சத்ரு சம்ஹார யாகத்தை" நம்பூதிரிப் பார்ப்பனர்கள் நடத்தினர். பெரியார் சாகவில்லையே - அதற்குப் பிறகு 50 ஆண்டுகள் வாழ்ந்தாரே - மாறாக திருவாங்கூர் ராஜாதானே செத்தார் - பெரியார் விடுதலையானார்.

சென்னை சேத்துப்பட்டு சங்கராலயத்தில் யாகம் நடத்தினார்களே - அதில் ஒரே ஒரு பார்ப்பனர் அல்லாதார் உண்டா?

இந்த 2021லும் பார்ப்பனர்கள் தங்கள் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளவில்லை. அதே சேத்துப்பட்டில் ஸ்பர்டங் சாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்தான் நீதிக்கட்சி தலைவரானடாக்டர் டி.எம். நாயர் "சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பனர்கள் தம் பிறவிப் புத்திகளை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள்" என்றாரே, நினைவிருக்கட்டும்!

No comments:

Post a Comment