அமெரிக்க தி.மு.க. சார்பில் நடைபெற்ற மெய்யிணைக் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை,செப்.1 பட்டம் பெற்றவர் அல்ல - பட்டறிவு பெற்றவர் கலைஞர்; பன்முகக் கொள்கையாளர், ஆற்ற லாளர், ஆளுமையாளர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .
‘‘கலைஞரின் சாதனைகளும், நமது கடமைகளும்!''
கடந்த 8.8.2021 அன்று மாலை அமெரிக்க தி.மு.க.வின் மெய்யிணைக் கலந்துரையாடல் காணொலி கூட்டத்தில், ‘‘கலைஞரின் சாதனைகளும், நமது கடமைகளும்'' என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அண்ணாவிற்குப் பிறகு யார் முதலமைச்சராக வரவேண்டும்?
எங்களை அழைத்துச் சொன்னார், அண்ணாவிற்குப் பிறகு யார் முதலமைச்சராக வரவேண்டும்? அவருக்குத் தனிப்பட்ட முறையிலே ஆசாபாசங்கள் இல்லை. ஒரு விஞ்ஞானப் பார்வை.
அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றினார்.
புயல் வரலாம், பூகம்பம் வரலாம், சுனாமிகள் வரலாம், எத்தனையோ சோதனைகள் வரலாம். இவற்றையெல் லாம் தாக்குப் பிடித்து இந்த இயக்கத்தைக் காப்பாற்றக் கூடிய ஆற்றல் யாருக்கு இருக்கும் என்றால், அது கலைஞருக்குத்தான் இருக்கும் என்று சொல்லி, ஒரு தொலைநோக்கு - ஏனென்றால், தந்தை பெரியார் அவர்கள் எத்தனை அரசியல் தலைவர்களைப் பார்த் தவர் - எத்தனையோ அரசியல் கட்சிகளின் வரலாற்றை அறிந்தவர்.
அண்ணாவிற்குப் பிறகு கலைஞர்தான்
அப்படிப்பட்ட அந்த சிறந்த முதிர்ந்த அனுபவம் - அவருக்குத் தோன்றியது அண்ணாவிற்குப் பிறகு கலைஞர்தான் என்று.
பெரியார் அவர்கள் என்னை அழைத்து, அண்ணா விற்குப் பிறகு கலைஞர்தான் என்று ஆணையிட்ட தைப்போல சொன்னார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, பெரியார் திடல் மேடை யில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலைஞர் அவர்கள் சொன்னார், அய்யாவை வைத்துக்கொண்டு சொன்னார், நாங்கள் எல்லாம் அந்த மேடையில் இருந்தோம்.
அய்யா அவர்கள் ஆணையிடுவதுபோன்று சொன்னார்!
‘‘வீரமணியை அனுப்பி, எனக்கு அவர் உத்தரவு போட்டது போன்று சொல்லிவிட்டார். நான் வேறு வழியில்லாமல் திக்குமுக்காடிப் போனேன்; முதலில் தயங்கினேன், நான் அந்தப் பொறுப்புக்கு வருவதற்கு முதலில் நினைக்கவில்லை. அய்யா ஆணையிட்டு சொன்னவுடன்தான் ஏற்றுக்கொண்டேன்'' என்றார்.
பெரியார் அவர்கள் கவலையோடு எழுதினார், ‘‘தி.மு.க. கெட்டியான பூட்டுதான்; ஆனால், அதற்கு யாரும் கள்ளச்சாவி போட்டுவிடக் கூடாது'' என்று.
எவ்வளவு அற்புதமான வார்த்தை. அதற்கு ஒரே வழி என்னவென்றால், அண்ணா அவர்கள் சொன்னதிலே, அவர் கவலையெடுத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் அறிவுரை சொன்னார்.
இப்படி ஒரு தந்தை - தனயன் - அந்தத் தனயனுடைய தொடர்புகள். இது எங்கே இருந்து ஆரம்பித்தது?
அண்ணா அவர்களாவது மாணவப் பருவம் போய் பிறகு வந்தவர். கலைஞர் அதிலும் அண்ணாவைத் தாண்டி, ஒரு வகையில், மாணவப் பருவத்திலேயே அய்யாவின் தலைமையை ஏற்றுக்கொண்டவர்.
‘‘உங்கள் வாழ்வில் எது திருப்புமுனை?''
செய்தியாளர்கள் கேட்கிறார்கள், கலைஞரைப் பார்த்து - ‘‘உங்கள் வாழ்வில் எது திருப்புமுனை?'' என்று.
கலைஞர் சொல்கிறார், ‘‘பெரியாரை சந்தித்ததுதான் என் வாழ்வின் திருப்பு முனை'' என்று.
வாழ்வின் திருப்புமுனை அதுதான். ஈரோட்டுக் குருகுலம் - புதுச்சேரியில் அவர்கள் அடிபட்ட நேரத்தில், அவரைக் காப்பாற்றி, புண்ணுக்கு மருந்து போட்டார் என்பது மட்டுமல்ல, அவரை தன்னுடன் அழைத்துப் போனார்.
ஈரோட்டு குருகுலப் பயிற்சி. ‘‘உழைப்பு, உழைப்பு உழைப்பு'' என்று சதா உழைத்துக் கொண்டிருந்தவன் இங்கே இன்றைக்கு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான்'' என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவருடைய நினைவிடத்தில் வாசகங்கள் இருக்கிறது.
ஓய்வே அறியாத தலைவர். காரணம், ஓய்வறியாது உழைக்கின்ற பெரியாரிடம் நான் அதை வரித்துக் கொண்டேன் என்று சொல்கின்றார்.
பட்டம் பெற்றவர் அல்ல - பட்டறிவு பெற்றவர் கலைஞர்
அந்தத் துணிவு, அந்த குருகுலப் பயிற்சி- எங்களுக் கெல்லாம் கிட்டாத வாய்ப்புகள். இங்கே அழகாகச் சொன்னார்கள், பட்டம் பெற்றவர் அல்ல - பட்டறிவு பெற்றவர் என்று.
ஆம்! மற்றவர்களுக்கு இல்லாத துணிச்சல் அவருக்கு வரும். இயற்கையான அறிவு - கேள்வி கேட்டவுடன், கணினியிலிருந்து பதில் பளிச்சென்று வருமே - வில்லிலிருந்து அம்பு வேகமாகப் பாய்வதைப்போல, பதில் சொல்வார். அப்படிப்பட்ட வேகம், விவேகமா வதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்ட இடம் ஈரோட்டுக் குருகுலம்தான்.
நெருக்கடி காலத்தில் அவரிடம் கேள்வி கேட் கிறார்கள், மற்றவர்கள் எல்லாம் அஞ்சி, அடங்கி, ஆமைகளாய், ஊமைகளாய் அடங்கிப் போயிருந்த காலகட்டத்தில், கலைஞருக்கு இருந்த அந்தத் துணிவு - முதலமைச்சர் பதவி போய்விட்டது; அவருடைய அருமை மகனுக்குத் திருமணமாகி ஒரு வாரம்தான் ஆகியிருக்கிறது. மிசா சட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
கொள்கை என்பது வேட்டி; பதவி என்பது மேல்துண்டு!
அந்தக் காலகட்டத்தில்கூட அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவரிடம் செய்தியாளர்கள் கேட்கிறார்கள், ‘‘உங்களுடைய ஆட்சியை ஏன் கலைத் தார்கள்; தேசிய நீரோட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ள வில்லை, அதற்காகத்தான் என்று சொல்கிறார்களே, அதற்கு உங்கள் பதில் என்ன?'' என்று கேட்கிறார்கள்.
ஈரோட்டு குருகுலத்தில் கற்ற பாடம், துணிச்சல் - ரத்தத்தில் உறைந்த ஒன்று - அரசியலிலே பதவி போய் விட்டது; அதிகாரம் போய்விட்டது. ஒரு பஞ்சாயத்துத் தலைவருக்குக்கூட அந்தப் பதவியை இழக்க மனமிருக்காது.
ஆனால், கலைஞர் அவர்கள் பதவி போனதைப்பற்றி கவலைப்படவில்லை. அண்ணா அவர்கள் சொன்ன தத்துவம் அது; கொள்கை என்பது வேட்டி; பதவி என்பது மேல்துண்டு என்று.
நான் ஈரோடு போனவன்; நீரோடு போகமாட்டேன் என்றார்!
செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொன் னார், ‘‘நான் ஈரோடு போனவன்; நீரோடு போகமாட்டேன். எதிர்நீச்சல் அடித்துத்தான் எனக்குப் பழக்கம்'' என்று பளிச்சென்று கலைஞர் பதில் சொன்னார்.
அதில் எவ்வளவு ஆழமான பொருள் இருக்கிறது; எவ்வளவு மனப் பக்குவம் இருக்கிறது; எவ்வளவு ஆழ்ந்த திண்மை இருக்கிறது?
ஆகவே, இந்தத் திண்மையை மிகத் தெளிவாக எண்ணிப் பார்க்கவேண்டும்.
அதற்கு அஸ்திவாரம் மிக முக்கியமானது. அதைத்தான் கலைஞர் அவர்கள் குருகுலத்திலிருந்து வரித்துக் கொண்டார்.
ஆட்சிக்காக ஆட்சியல்ல - இந்த இனத்தினுடைய மீட்சிக்காக ஆட்சி - கொள்கைக்காக ஆட்சி!
எத்தனையோ இயக்கங்கள் தமிழ்நாட்டில் வந்தி ருக்கின்றன. கட்சிகளுக்குப் பஞ்சமேயில்லை. இரண்டு பேர் இருந்தாலே கட்சி ஆரம்பித்துவிடுகிறார்கள். ஏன்? ஒருவர் இருந்தாலே கட்சியை ஆரம்பித்துவிடுவார்கள். கட்சிக்கு என்ன கொள்கை என்றால், அதை பின்னால் சொல்கிறேன் என்கிறார்கள்.
தான் வகித்த 29 பதவிகளை ஒரே காகிதத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்!
ஆனால், அதேநேரத்தில் தந்தை பெரியார் அவர்கள், தான் வகித்த 29 பதவிகளை ஒரே காகிதத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்.
அதேநேரத்தில், தன்னுடைய சமூகநீதிக் கொள் கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றவுடன், காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்தார்.
அதுபோன்று, ஆட்சி என்று சொன்னால், ஆட்சி போனால் என்ன? அதைப்பற்றி கவலையில்லை. ஆட்சி என்பது மக்களுக்காகத்தான்.
ஆட்சிக்கு வருவோம் என்று இந்த இயக்கத்திற்கு வரவில்லை.
எத்தனைக் கிளர்ச்சிகள்?
கலைஞரைப்பற்றி அறிஞர் அண்ணா!
‘‘தண்டவாளத்தில் தலையை வைத்துப் படு என் றாலும், என் தம்பி கருணாநிதி படுப்பார்.
பாளையங்கோட்டை சிறைச்சாலைக்குப் போக வேண்டும் என்று சொன்னாலும், கோட்டைக்குப் போகவேண்டும் என்று சொன்னாலும், அவருக்கு இரண்டும் ஒன்றுதான்'' என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.
இந்த மனப்பக்குவம் எங்கே இருந்து கிடைத்தது? ஈரோட்டுக் குருகுலப் பள்ளியிலிருந்துதான்.
அந்தத் துணிச்சல், அந்த மனப்பக்குவம், அந்த மனத்தின்மை இதைத்தான் பெரியார் தொலைநோக் கோடு அடையாளம் கண்டார்.
கலைஞர் அவர்கள் பன்முகக் கொள்கையாளர்; ஆற்றலாளர், ஆளுமையாளர்!
இந்த ஆட்சியினுடைய சிறப்புகள், சாதனைகள் பெரும்பாலும் உங்களுக்குத் தெரியும். கலைஞர் அவர்கள் பன்முகக் கொள்கையாளர்; ஆற்றலாளர், ஆளுமையாளர்; அவருடைய திரைப்பட வசனங்கள், தொடர்ந்து 60 ஆண்டுகால வெற்றி - தொடர்ந்து 50 ஆண்டுகால தலைமை இவைப்பற்றியெல்லாம் உங் களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால், இன்றைக்கு நான் சொல்கின்ற கருத்து என்பது, தத்துவ ரீதியாக இந்தக் கொள்கை நிலைத் திருப்பதற்கு எது எடிப்படை?
திராவிட மாடல் வெற்றிகரமானது என்று சொல் வதற்கு, எங்கே மூல பலமிருக்கிறது? அந்த மூல பலம் எப்படி வந்தது? அதனுடைய வரலாறு என்ன?
இளைஞர்கள் தெரிந்துகொண்டு, அதனைத் தக்க வைப்பதிலே உங்களை நீங்கள் அர்ப்பணித்துக் கொள்வதுதான் இந்த நினைவு நாள். அதற்காகத்தான் இத்தனை கருத்துகளை எடுத்துச் சொல்கிறோம்.
ஆட்சி பெரியாருக்கு அளிக்கப்பட்ட காணிக்கை என்றார் அண்ணா!
குறிப்பாக, அதைத்தான் அண்ணா அவர்களும் சொன்னார்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் அவர் என்ன சொன்னார் சட்டமன்றத்தில், இந்த ஆட்சி பெரியாருக்கு அளிக் கப்பட்ட காணிக்கை என்று சொன்னார்.
அதைக் கேட்டு தந்தை பெரியாரின் வலி குறைந்தது என்றார். வலி என்று சொன்னால், உடல் வலி என்பதல்ல. எத்தனையோ வலிகள்.
இப்படி ஒரு தொண்டர், தலைவர், அவரால் ஆளாக்கப்பட்டவர், அவருடைய காலத்தில், அவருக்கே ஆட்சியை காணிக்கையாக்கப்பட்டது என்பது உலக வரலாற்றில் வேறு எந்த இயக்கத்திலாவது உண்டா? இது அறிவார்ந்த அரங்கம் - உலக வரலாற்றை அறிந்தவர்கள் நீங்கள். இன்னும் கொஞ்சம் காலம் எடுத்துக்கொண்டு, நூலகங்களிலும் தேடிப் பாருங்கள், வேறு ஏதாவது உதாரணம் உண்டா என்று.
அதுமட்டுமல்ல நண்பர்களே, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த இயக்கம்.
யாருக்காக தொடங்கப்பட்டது?
யார் அடித்தளத்தில் இருக்கிறார்களோ, அந்த மக்களுக்காகத்தான்.
சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும்பொழுது அய்யா அவர்கள் சொன்னார், பிறவியில் மனிதன் பேதப்படுத்தப்படக் கூடாது. பிறவி பேதம் என்றால், ஜாதி மட்டுமல்ல - பிறவி பேதம் என்றால், ஆண் உயர்ந் தவன் - பெண் தாழ்ந்தவள் என்று அந்தப் பிறவி பேதமும் கூடாது.
இதை அப்படியே எடுத்துக்கொண்டு லட்சியமாக் குவதுதானே திராவிடர் இயக்கம்.
திராவிட மாடல் - வெற்றிச் சூடியது - வாகை சூடியது
அந்த லட்சியத்தை சட்டமாக்கி, மக்களுக்குப் பயன்படக் கூடிய அளவிற்கு செய்ததுதானே அரசியல் பிரிவாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனை.
நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி, பெண்களுக்கு வாக் குரிமை என்று தொடங்கி பல்வேறு சாதனைகள்.
இதுதான் திராவிட மாடல். எனவேதான், வெற்றிச் சூடியது - வாகை சூடியது என்கிறார்கள்.
கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஹண்டே அவர்கள் சொன்னார் ஆங்கிலத்தில் சொன்னார், ‘‘திஸ் இஸ் தேட் கிரேடு கவர்ன்மெண்ட்'' என்று குற்றம் சுமத்தினார்.
திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பி னர்கள் அனைவரும் கோபப்பட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டிவிட்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள்,
இது மூன்றாந்தர அரசல்ல;
நாலாந்தர அரசு!
‘‘மாண்புமிகு எதிர்க்கட்சி உறுப்பினர் சொன்னார், இது மூன்றாந்தர அரசு என்று. நான் சொல்கிறேன், இது மூன்றாந்தர அரசல்ல; நாலாந்தர அரசு'' என்று சொல்லி விட்டு நிறுத்தினார்.
அனைவருக்கும் சில விநாடிகள் அதிர்ச்சி.
தொடர்ந்தார் கலைஞர், ‘‘ஆம், இது நாலாந்தர மக்களுக்காக இருக்கக்கூடிய அரசு. அவர்களின் நலம் காக்கக் கூடிய அரசு. பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று இருப்பதில், சூத்திர மக்களுக்காக, சூத்திரர்களால் ஆளப்படும் சூத்திர அரசு'' என்று சொல்லி, ஆபிரகாம் லிங்கன் கொடுத்த அந்த விளக்கம் உங்களுக்குத் தெரியும் மக்களாட்சிக்கு - அதை அப்படியே உருவாக்கிக் காட்டினார்; அதுதான் கலைஞர்.
எல்லோரும் அதிர்ந்து போய் கைதட்டினர்.
இந்த செய்தி வந்தவுடன், திருச்சியில் இருந்த தந்தை பெரியாருக்கு நான் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு சொன்னேன்.
அய்யா, இன்று காலையில் சட்டப்பேரவையில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்றேன். ஏனென்றால், இப்பொழுது இருப்பதுபோன்று தொலைக்காட்சிகள் அப்பொழுது கிடையாது.
‘விடுதலை'யில் தலைப்புச் செய்தி
நான் சொன்ன செய்தியைக் கேட்டுவிட்டு, அய்யா அவர்கள், அப்படியா, மிக்க மகிழ்ச்சி. அதையே நீங்கள் ‘விடுதலை'யில் பேனர் செய்தியாகப் போடுங்கள் என்றார்.
அப்படியே ‘விடுதலை'யில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டோம்.
எவ்வளவு பெரிய மகிழ்ச்சி அது. இதனுடைய தத்துவம் என்ன? அண்ணா என்ன கருத்தைச் சொன்னார் - அதனுடைய தொடர்ச்சியாக கலைஞர் எப்படித் தொடர்ந்தார். நீதிக்கட்சி ஆட்சியினுடைய தொடர்ச்சியாகத்தான் இந்த ஆட்சி இருக்கிறது என்று அண்ணா சொன்னதை உறுதிப்படுத்தினார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இந்த திராவிட நீரோட்டம் - ஆட்சி எவ்வளவு சிறப்பான வகையில் ஒரு தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை மிகத்தெளிவாக நீங்கள் உணரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கலாம்.
பெரியார் ஒரு தனி மனிதரல்ல - அவர் ஒரு சகாப்தம் - ஒரு காலகட்டம்!
அய்யா அவர்களைப்பற்றி அண்ணா அவர்கள் சொல்லும்பொழுது,
பெரியார் ஒரு தனி மனிதரல்ல - அவர் ஒரு சகாப்தம் - ஒரு காலகட்டம் - ஒரு திருப்பு முனை என்று சொன்னார்.
சகாப்தம் என்று சொன்னால், ஒருவரோடு முடி வதல்ல. அண்ணா - கலைஞர் இன்றைக்கும் அரசியல் ரீதியாக இன்றைய ஆட்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்படி வரிசையாக.
திராவிட இயக்கத்தைச் சீண்டிப் பார்த்தவர்கள் எல்லாம் இன்றைக்கு எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது.
தனிப்பட்ட நபர்கள்மீது நமக்கு வெறுப்பு கிடையாது
திராவிட இயக்க எதிர்ப்பு நடத்தியவர்கள் எல்லாம், திராவிட இயக்கத்திலே சரணடைந்தார்கள். திராவிட இயக்கம் அவர்களுக்குப் புகலிடம் கொடுத்து அவர் களை அணைத்துக் கொண்டது. ஏனென்றால், யார்மீதும் வன்மம் கிடையாது; தனிப்பட்ட நபர்கள்மீது நமக்கு வெறுப்பு கிடையாது. தத்துவங்களின்மீது நமக்கு வெறுப்பு உண்டே தவிர, தனிப்பட்ட மனிதர்கள்மீது வெறுப்பு கிடையாது நமக்கு. இதுதான் திராவிடம்.
இணைப்பது பெரியார் - இணைப்பது திராவிடம்!
ஏனென்றால், ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்.''
எல்லோரையும் ஒருங்கிணைப்பது - இன்க்ளுசிவ் என்று சொல்லக்கூடிய ஒருங்கிணைப்பது. எக்ஸ்ளுசிவ் என்று சொல்லக்கூடிய அளவிற்கு யாரையும் பிரித்து வைப்பதல்ல.
இணைப்பது பெரியார் -
இணைப்பது திராவிடம்!
பிரிப்பது மதங்கள்
பிரிப்பது ஜாதிகள்
பிரிப்பது கடவுள்கள்
பிரிப்பவை வெவ்வேறானவை.
இதுதான் தனித்தன்மை. இந்த உணர்வுகளை அடிப் படையாகக் கொண்டுதான், அடித்தளத்தில் இருக்கின்ற மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்கிற உணர்வோடு, மிகப்பெரிய அளவிற்கு காலங்காலமாக அதைச் செய்தார்கள்.
மன்னார்குடி பொதுக்கூட்டத்தில் அண்ணா உரை
அப்படி செய்கின்ற நேரத்தில் நண்பர்களே, அண்ணா அவர்கள் எளிய மக்களுக்காக, ஏழை மக்களுக்காக சிந்தித்து, ஓராண்டுகாலம் ஆண்டு - முப்பெரும் சாத னைகளை செய்து - எனக்குப் பிறகு அதன் தொடர்ச் சியாக அடுத்த கட்டத்தை கருணாநிதி முடிப்பார் என்று மன்னார்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சொன்னார்.
அது மன்னார்குடி பொதுக்கூட்டத்திற்கு மட்டுமல்ல - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றுக்கும் பொருந்தக்கூடிய அளவிற்கு, அடுத்தகட்ட முடிவை அவர் தொடர்ச்சியாக எடுத்துச் சொன்னார்.
அதைத்தான் தொடர்ந்து அய்ந்தாண்டு ஆட்சியில் இருந்தபொழுதும், எதிர்க்கட்சியாக இருந்தபொழுதும் இதே கொள்கையை எடுத்துச் சொல்லக்கூடிய அளவிற்கு கலைஞர் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.
கலைஞர் சொல்கிறார், அவரே எழுதியிருக்கின்ற நெஞ்சுக்கு நீதியில்,
ஒரு ஆட்சி அமையும்பொழுது, அந்த ஆட்சி யாருக்காக? இதுதான் திராவிடத்தினுடைய சிறப்பு. ஏன் திராவிடம் பலமாக இருக்கிறது?
ஊடக பலம் இல்லை; பண பலம் இல்லை, பத்திரிகை பலம் இல்லை. ஆட்கள் பராமரிப்பு, அடியாட்கள் பலமில்லை. இவையெல்லாம் இல்லையென்றாலும், கொள்கை பலம் இருக்கிறது; லட்சிய பலம் இருக்கிறது. அதை தந்தது ஈரோடு; அதை வளர்த்தது காஞ்சி. அதை வளர்த்து பாதுகாத்தது திருவாரூர்.
- தொடரும்
No comments:
Post a Comment