சட்டமன்றத்தில் இன்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

சட்டமன்றத்தில் இன்று

 நீட் தேர்வினை புறந்தள்ளுவதற்கு புதிய சட்டத்தினை இயற்றி மாணவ சமுதாயத்துக்கான சமூக நீதியைப் பாதுகாப்பதை அரசு உறுதிசெய்யும்

சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை,செப்.2- சட்ட மன்றத்தில் இன்று (2.9.2021) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான மானியக் கோரிக்கையை இத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.

அதில், நீட் தேர்வினை புறந்தள்ளுவதற்கு தமிழ்நாடு அரசு புதிய சட்டத்தினை இயற்றி, மாணவர் சமுதாயத் துக்கான சமூக நீதியை பாதுகாப்பதை உறுதி செய்யும் என்றார்.

தமிழ்நாடு அரசு மருத்துவப்படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்கு தொடர்ந்து எதிரப்பு தெரிவித்து வருகிறது. மருத்துவப்படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் 5.6.2021 அன்று ஓய்வுபெற்ற நீதியரசர்  .கே.ராஜன் அவர்கள் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்து ஆணையிட்டார்கள்.

மேற்படி, உயர்மட்டக் குழு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ மாணவர்கள் சேர்க்கை முறை சமூக, பொருளாதார மற்றும் கூட்டாட்சி முறையினை மோசமாக பாதிக்கிறதா என்பதையும், மேலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் தமிழ்வழி கல்வி பயிலும் மாணவர்கள் அல்லது வேறு பிரிவு மாணவர்களை பாதிக்கிறதா என்பதையும் அவற்றைக் களைய எடுக்கப்பட வேண்டிய தகுந்த முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து தகுந்த ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை 14.7.2021 அன்று அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.

உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அதனை செயல்படுத்தும் பொருட்டு தலைமைச்செயலாளர் அவர்களின் தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மேற்காணும் குழு மருத்துவக் கல்வி சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வினை புறந்தள்ளுவதற்கு தமிழ்நாடு மாநில சட்டம் 3/2007னை போன்றதொரு புதிய சட்டத்தினை இயற்றி  குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று பரிந்துரைத்தது.

இது மருத்துவக்கல்வி சேர்க்கை முறைகளில் பாகுபாடு காட்டப்படுவதால் ஒதுக்கப்படும் மற்றும் பாதிக்கப்படும் மாணவ சமுதாயத்துக்கான சமூக நீதியை பாதுகாப்பதை உறுதி செய்யும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment