தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் என்று அறிவித்தது பொருத்தமானதே உறுதிமொழியின் ஒவ்வொரு வாசகமும் ஒவ்வொருவரையும் உயர்த்துவதே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 8, 2021

தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் என்று அறிவித்தது பொருத்தமானதே உறுதிமொழியின் ஒவ்வொரு வாசகமும் ஒவ்வொருவரையும் உயர்த்துவதே

தளபதி மு..ஸ்டாலின் தலைமையிலானது திராவிடப் "பொற்கால" ஆட்சியாகும் தந்தை பெரியார் பிறந்த நாளை திராவிடர் திருவிழாவாகக் கொண்டாடுவோம்

தஞ்சையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

தஞ்சை, செப்.8- தளபதி மு..ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவது திராவிடப் பொற்கால ஆட்சி என்றும், இந்த ஆட்சியில் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்திருப்பது மிகவும் பொருத்தமானது என்றும் தந்தை பெரியார் பிறந்த நாளை திராவிடர்  திருவிழாவாகக் கொண்டாடுவோம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.

6.9.2021 அன்று தஞ்சையில்செய்தியாளர்களை சந்தித்தார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது பேட்டியின் விவரம் வருமாறு:

சென்ற சில வாரங்களுக்கு முன்பு, அனைத்து ஜாதி யினர் அர்ச்சகர் பிரச்சினை தொடங்குகின்ற அந்தக் காலகட்டத்தில், நீதிமன்றத்தில் முதல் வழக்கு தாக்கல் செய்த பிற்பாடு, கடந்த 25 நாள்களுக்கு முன்பு, உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது, மகிழ்ந்தேன்.

இந்தக் கரோனா காலகட்டத்தில் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்கிற எங்களுடைய அவாவைத் தெரிவித்தேன்.

அந்த வகையில், இன்றைக்கு மிக்க மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில், உங்களையெல்லாம் சந்திப்பதில், அதுவும் பெரியார் அவர்களுடைய நூற்றாண்டு விழா கல்வி நிறுவனத்தில் சந்திப்பது இன்னும் மகிழ்ச்சியானது.

 வரலாற்றில் காலங்காலமாக நிலைக்கக்கூடிய ஓர் அறிவிப்பு

அந்த வகையில், இன்றைக்குக் காலை நம்முடைய  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறப்பான ஓர் அறிவிப்பை - வரலாற்றில் காலங்காலமாக நிலைக்கக் கூடிய ஓர் அறிவிப்பை அருமையாக அறிவித்திருக் கிறார்கள்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி - தந்தை பெரியாரின் பிறந்த நாளை ‘‘சமூகநீதி நாள்'' என்று தமிழ்நாடு அரசால் பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது.சமூகநீதிக்காகவே தந்தை பெரியார் அவர்கள் போராடினார். மிக அருமை யான கருத்துகளை முதலமைச்சர் அவர்கள் விளக்கியிருக் கிறார்கள். அது உங்களுக்கெல்லாம் தெரியும்.

தந்தை பெரியார் அவர்களுடைய திராவிடர் இயக்கம் - சமூகநீதிக்கான போராட்டங்கள் - தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் பயன்படக் கூடியனவல்ல.

தந்தை பெரியாரின் போராட்டத்தினுடைய விளைச்சல் இந்தியா முழுவதற்கும் பயன்பட்டது!

அவர் தொடங்கியது தமிழ்நாடு என்றாலும், எப்படி ஒரு விஞ்ஞானி கண்டுபிடிக்கின்ற மருந்து, உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா நாடுகளிலும் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படுமோ - அதுபோலத்தான், தந்தை பெரியாரின் போராட்டத்தினுடைய விளைச்சல் என்பது அதனுடைய பயன் இந்தியா முழுவதற்கும் கிடைக்கக் கூடிய அளவிற்கு வந்தது. அதைத்தான் மிக அழகாக முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் - கம்யூனல் ஜி.. என்று 1928 இல் கொண்டு வந்தது - முத்தையா முதலியார் அவர்களால், நீதிக்கட்சி ஆதரவு ஆட்சியினால் வந்த பலனாக இருந்தது - 1950 இல் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளாலே, ரத்து செய்யப்படக்கூடிய மிகப்பெரிய பேராபத்து வந்த நேரத்தில், தந்தை பெரியார்தான் களத்தில் நின்றார்கள் - வென்றார்கள்.

அப்படி அதனுடைய விளைவு, புதிய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை முதன் முறையாகத் திருத்தக்கூடிய வாய்ப்பு 15 ஆவது விதியின் 4 ஆம் உட்பிரிவு வந்தது.  அதைப் பிரதமராக இருந்த பண்டித ஜவகர்லால் நேரு தெளிவாக அறிவித்தார்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சராக இருந்தார்கள். அதனுடைய விளைவுதான் மிகப்பெரிய அளவிற்குக் கல்வியில் இட ஒதுக்கீடு இல்லாது இருந்த சூழ்நிலை. அரசமைப்புச் சட்ட முதல் திருத்தத்தால் கல்வியில் இட ஒதுக்கீடு வரக்கூடிய வாய்ப்புகள் வந்தது. ஆகவே, அது ஒரு நல்ல திருப்பமாகும்.

அதுமட்டுமல்ல நண்பர்களே, மிக முக்கியமான ஒரு செய்தி என்னவென்று சொன்னால், தமிழ்நாட்டிற்காக ஒரு சட்டத்தை செல்லுபடியாக்கவேண்டும் என்பதற்காக நடந்த போராட்டம் என்றாலும், இதனால் ஏற்பட்ட விளைவு என்பது - முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்பது, இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள், எஸ்.டி., எஸ்.சி., சமூகத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் கல்வி வாய்ப்புக்குப் பயன்பட்டது.

எனவே, ஒரு சமூகநீதிக் கொடி மிகப்பெரிய அளவில் பறக்கக்கூடிய வாய்ப்பை - முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தினால் கொண்டு வந்தார்.

இத்தனைக்கும் பெரியார் அவர்கள் நாடாளுமன்றத் திற்குள் போனவர் அல்ல; அவருக்கென்று ஒரு  தனி எம்.பி., கிடையாது. ஆனால், எல்லா எம்.பி.,க்களும் அவரோடு சேர்ந்து போராடினார்கள்.

தொலைநோக்கோடு ஒன்றைச் சொன்னார் பிரதமர் நேரு அவர்கள், ‘‘இன்றைக்கு அது தமிழ்நாட்டுப் பிரச்சினையாக இருக்கலாம்; நாளைக்கு அது இந்தியா முழுவதும் உருவாகும். ஆகவே, நாம் அதனை இப்பொழுதே அதற்குரிய பரிகாரத்தை செய்வது மிகவும் அவசியம்'' என்று நாடாளுமன்ற அறிமுக உரையில் மிகத் தெளிவாக சொன்னார்.

அந்த அடிப்படையில், இன்றைக்கு இதையே நம்முடைய முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களும் சிறப்பாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தந்தை பெரியாருடைய நீண்ட பொது வாழ்க்கையில், அவர்கள் ஈரோட்டிலிருந்து பொது வாழ்க்கைக்கு வந்தது சமூகநீதிக்காக - காங்கிரசில் சேர்ந்ததும் சமூகநீதிக்காக - காங்கிரசிலிருந்து வெளியேறிதும் சமூகநீதிக்காக - பிறகு தொடர்ந்து போராடி யதும் சமூகநீதிக்காகத்தான்.மக்களாட்சி - மக்களுக்கான ஆட்சி - மக்கள் நினைப்பதையெல்லாம் சாதிக்கக்கூடிய ஆட்சி

சமூகநீதிதான் பெரியாருக்கு அடையாளம்; சமூகநீதிதான் அவருக்கு அளவுகோல்

அவரைப் பொறுத்தவரையில், ஆட்சிக்குப் போகா விட்டாலும், ஆட்சியை நிர்ணயம் செய்யக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய சக்தி வாய்ந்த தலைவராக, இயக்கமாக அவருடைய இயக்கம் இருந்தது என்றால், அவரைப் பொறுத்தவரையில், சமூகநீதிதான் அவருக்கு அடையாளம்; சமூகநீதிதான் அவருக்கு அளவுகோல். அந்த அளவில் வைத்துக்கொண்டு, சமூகநீதியை ஆதரிக்கின்ற அரசா? நான் கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பேன் என்றார். சமூகநீதியை எதிர்க்கின்ற அரசா? அந்த ஆட்சியை எதிர்க்கவேண்டியது என்னு டைய வேலை என்று உறுதியாகக் கூறினார்.

இப்படிப்பட்ட ஒரு கண்ணோட்டத்தோடு பெரியார் அவர்கள், தொடர்ந்து ஒரு அரை நூற்றாண்டுக்கு மேலாக அவருடைய வாழ்நாள் முழுவதும் இதையே மய்யப்படுத்தி வந்திருக்கிறார்.

தந்தை பெரியார் ஆட்சிகளை ஆதரித்ததும் - எதிர்த்ததும் எதற்காக?

ஏன் காங்கிரசை எதிர்த்தார்?

சமூகநீதிக்கு விரோதமாக இருந்தது என்று.

ஏன் காமராஜரை ஆதரித்தார்?

சமூகநீதிக்கு ஆதரவாக இருக்கிறார் என்று.

எனவேதான், அவருடைய பொதுவாழ்க்கையில், இடைவிடாத ஒரு ஜீவநதி ஓடிக் கொண்டிருப்பதைப்போல, தொடர்ந்து அவர்கள் பணியாற்றியது என்பது சமூக நீதியை மய்யப்படுத்தித்தான்.

அதை மிக அழகாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எடுத்து, சமூகநீதி என்பதுதான் பெரியாருடைய வாழ்க்கையில், அவருடைய லட்சியத்தில் முதலாவது. அந்த சமூகநீதியை பெரியார் அவர்கள் காப்பாற்றுவ தற்காகப் பாடுபட்டதினால், சமூகநீதி நாளாக - பெரியாருடைய பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு அரசு கொண்டாடும் என்றார்.

அதுமட்டுமல்ல, அன்றைய தினம் ஓர் உறுதி மொழியை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

அந்த உறுதிமொழி - ஒரு பெரிய வரலாற்றுப் பிரகடனம். சாதாரணமானதல்ல - இது இன்றைக்கு சாதாரணமானதாக இருக்கலாம் - பொன்னெழுத் துக்களால் வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய காலம். காரணம், இந்த ஆட்சியே ஒரு பொற்காலத்தினுடைய உதயமாக இருக்கிறது. 150 நாள்கள்கூட நிறையவில்லை என்று நினைக்கலாம் மற்றவர்கள். ஆனால், நல்ல தொடக்கம் - வரலாற்றில் பல திருப்பங்கள் என்று சொல் லக்கூடிய அளவிற்கு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று அவர்கள் சொல்லி பதவிப் பிரமாணம் ஆரம் பித்ததில், அதிலேயே மிகத் தெளிவான அளவிற்கு, காலங்காலமாக இருக்கக்கூடிய சமூக அநீதிகளுக் கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, தொடர்ந்து இந்த ஆட்சி நீதிக்கட்சியினுடைய ஆட்சியின் தொடர்ச்சி என்று சொன்னதை நிரூபிக்கும் அளவில், அவர் சொன்னது வெறும் வார்த்தையல்ல!

அதேபோல, அண்ணா அவர்கள் 1969 இல் ஆட்சிக்கு வந்தபொழுது, இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சொன்னதினுடைய முழுப் பொருள் என்ன? என்றால், அந்தக் கொள்கை யையும் நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்பதையெல் லாம் உள்ளடக்கி, இன்றைக்குக் காலை சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர்கள் கொடுத்த அந்த அறிவிப்பு - ஏன்? எப்படி? இது சமூகநீதி நாளாக எதற்காகப் பிரகனப் படுத்தப்படுகிறது என்பதைத் தெளிவாக சொல்லியிருக் கிறார்.

அதேபோல, அருமையான ஓர் உறுதிமொழியை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

உறுதிமொழியினுடைய வாசகங்கள் ஒவ்வொருவரையும் உயர்த்துவதாக இருக்கிறது

ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் பொழுது, அந்த உறுதிமொழியினுடைய வாசகங்கள் ஒவ்வொருவரையும் உயர்த்துவதாக இருக்கின்றன. யாரையும் வேற்றுமைப்படுத்தவில்லை. மாறாக, எல் லோரையும் இணைத்து வளருகின்ற ஒரு சமுதாயம், முன்னேறக்கூடிய ஒரு சமுதாயம், உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு சமுதாயம் எப்படி மிகத் தெளிவாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாக, சிறப்பாகச் சொல்கிறார்.

அந்த உறுதிமொழி வாசகங்கள் மிக அற்புதமாக அமைக்கப்பட்டு இருக்கின்றன.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற அன்பு நெறியையும்,

யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பண்பு நெறியையும்

எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப் பிடிப்பேன்!

சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!

(ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றியடையவேண்டு மானால், இதுதான் அடிப்படை. எந்த மனிதனாக இருந் தாலும் - எந்த நாடு, எந்த ஜாதி, எந்த மதம் எல்லாம் பிறகுதான். அதேபோல, பகுத்தறிவுக் கூர்மைப் பார்வை - நல்லது, கெட்டது; தேவையா? தேவையில்லையா? என்று பகுத்தறிந்து பார்க்கக்கூடிய கூர்மையான பகுத் தறிவுப் பார்வை).

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!

(அனைவரையும் வாழ வைப்பது; பெரியார் இரண்டே வார்த்தையில் சமூகநீதிக்கு விளக்கம் சொன்னார் - ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்று. அதைத்தான் இங்கே விளக்கிச் சொல்லியிருக்கிறார்).

மானுடப் பற்றும், மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!

சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்'' என்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டியது, நம்முடைய உணர்ச்சிக்கு ஒரு புத்துணர்ச்சி. வாழ்க்கையில் ஒரு புதிய நம்பிக்கையைத் தரக்கூடிய அளவிற்கு அருமையான வாசகங்களை அமைத்து, இதை வருகின்ற செப்டம்பர் 17 இல் தலைமைச் செயலகத்திலிருந்து, அரசு அலுவலகங்களிலிருந்து, கல்வி நிலையங்களிலிருந்து எல்லா இடங்களிலும் சொல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கக்கூடிய ஒரு சூழல். இந்த அறிவிப்பு இன்றைக்கு வந்திருப்பது பாராட்டத்தகுந்தது.

அந்த வகையில், முதலமைச்சரின் அறிவிப்புச் செய்தி எனக்குக் கிடைத்தவுடன், அவரை தொலைப் பேசியில் தொடர்புகொண்டு, அவருக்கு என்னுடைய ஆழ்ந்த நன்றியை, நம்முடைய ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவும், கழகத்தின் சார்பாகவும் சிறப்பாக வாழ்த்து சொன்னதோடு மட்டுமல்ல, மிகுந்த மகிழ்ச்சியோடு, எல்லையற்ற மகிழ்ச்சியை நாங்கள் பெறுகின்றோம்.

முதலமைச்சர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி சாதாரணமானதல்ல.

105 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் அண் மையில் வந்தது. இந்தத் திருத்தம், முதலாவது அரசமைப் புச் சட்டத் திருத்தத்தில் எப்படி பறிக்கப்பட்ட உரிமைகள் மறுபடியும் வந்ததோ, அதேமாதிரி, 102 ஆவது அர சமைப்புச் சட்டத் திருத்தத்தில், மாநிலங்களுக்கே உரி மையில்லை - பிற்படுத்தப்பட்டவர்களை, மற்றவர்களை அடையாளப்படுத்துவதற்கு என்கிற உரிமை பறித்துக் கொள்ளப்பட்டது.

அதனை எதிர்த்து முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள், நாங்கள், எல்லோரும் குரல் கொடுத்தோம். அதைத் தமிழ்நாடுதான் எடுத்துச் சொன்ன மாநிலம். இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன் எங்களை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அழைத்திருந்தார்கள், இந்தச் சட்டத்தை நிறைவேற்றினால், ஆபத்தானது, சிக்கல்கள் வரும் என்று சொன்னோம்.

இழந்த சமூகநீதியை நாம் மீண்டும் பெற்றிருக்கிறோம்

ஆனால், அதை மீறி அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள். உச்சநீதிமன்றம் அதைச் சுட்டிக்காட்டிய பின்பு. அரசியல் கண்ணோட்டம் இருக்கலாம், சில நேரங்களில் ஆளும் கட்சிக்கு, பா... வுக்கு - அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை நமக்கு.

ஆனால், உடனடியாக அவர்கள் 105 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்மூலமாக இட ஒதுக்கீட்டை அடையாளப்படுத்துவதற்கு மாநிலங் களுக்கு உரிமை உண்டு என்று சொன்னார்கள்.

எனவே, இழந்த சமூகநீதியை நாம் மீண்டும் பெற்றிருக்கிறோம். அதுபோலவே, முதலாவது அரச மைப்புச் சட்டத் திருத்தத்திலும் இழந்ததை மீண்டும் பெற்றிருக்கிறோம்.

அதேபோன்று மருத்துவக் கல்வியில் வழக்கு - அதன்மூலமாக நமக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு  - அகில இந்திய அளவில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கும் கிடைத்தது.

இப்படி வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம் - காரண காரியங்களை விளக்கிச் சொல்லவேண்டும் என்றால். ஏதோ விளையாட்டுத்தனமாகவோ, யாரையோ திருப்தி செய்யவேண்டும் என்பதற்காகவோ முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு அந்த அறிவிப்பை வெளியிடவில்லை.

‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்''

இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று - ஒரு நீண்ட போராட்டத்தினுடைய வெற்றியினுடைய விளைச்சலுக்கு ஒரு உருவகம் கொடுத்தது போன்றுதான் இந்த சமூகநீதி நாள் அறிவிப்பு அமைந்திருக்கிறது.

அந்த வகையில், அதற்காக நாங்கள் இனிமேல் நம்முடைய முதலமைச்சரை அழைக்கின்ற நேரத்தில், ‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' என்ற சிறப்பான பட்டத்தோடு அழைக்கக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

இதுவரையில், சமூகநீதிக் காவலர்கள் இருந்திருக் கிறார்கள்; சமூகநீதி காத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், சமூகநீதியை சுவாசித்துக்கொண்டே - எப் பொழுதெல்லாம் ஆபத்து ஏற்படுகிறதோ, அப்பொழு தெல்லாம் உடனடியாகப் போராட்டத்தை - தன்னுடைய ஆட்சியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஆட்சியை ஒரு கருவியாகக் கொண்டு நடத்தக் கூடிய அளவில் இருப்பதினால்தான், ‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' என்ற பட்டத்தினை நாங்கள் - தாய்க்கழகத்தின் சார்பாக - பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக -ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக - சமூகநீதிப் போராளிகள் சார்பாக அந்தப் பட்டத்தை அளிப்பதில்  மகிழ்ச்சி அடைகிறோம்.

எனவே, மிகுந்த மகிழ்ச்சியோடு உங்களையெல்லாம் சந்திக்கின்றோம். இந்த நாளில், அதுவும் குறிப்பாக தஞ்சை ஊடகத் தோழர்கள் என்னுடைய சகோதரர்கள் - மிகவும் நெருக்கமானவர்கள் எங்களுக்கு.

அப்படிப்பட்ட ஒரு நிலையில், இன்றைக்கு உங்க ளைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. உங்களைச் சந்திக்கவேண்டும் என்று கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் சொன்னார்கள்.

தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற திராவிடர் ஆட்சி என்பது பொற்காலம்

ஆகவே, மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கும்பொழுது, அதனை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டும். சிறப்பான வகையில் இந்த ஆட்சி தொடரும். தமிழ்நாட் டில் நடைபெறுகின்ற திராவிடர் ஆட்சி என்பது பொற் காலமாகும்.

அதைவிட இன்னொன்றுக்கு  நன்றியையும் செலுத்த வேண்டும். அது என்னவென்றால், அனைத்துக் கட்சிக் களுக்கும் திராவிடர் கழகம் நன்றி செலுத்துகிறது. முதல மைச்சருக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருக்கின்ற .தி.மு..வின் சார்பாக பேசிய வைத்தியலிங்கம் அவர்கள், ‘‘பெரியாரால்தான் நாம் எல்லாம் பேரவையில் உட்கார்ந்திருக்கிறோம். அவர் இல்லையென்றால் யார் யார் பேரவையில் உட்கார்ந்து இருப்பார்கள் என்பது தெரியாது'' என்று சொன்னார்.

பா... உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சொல் கிறார், ‘‘நாங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். ஆனால், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை சமூகநீதி நாள் என்று முதலமைச்சர் அறிவித்ததை வரவேற்கிறோம்'' என்று.

நல்ல முதலமைச்சர், ஒரு ஆட்சியை பொதுமையாக்கி நடத்துகிறார். ஒரு கட்சியினுடைய ஆட்சியாக இல்லா மல், மக்களுடைய ஆட்சியாக இருக்கிறது.

மக்களாட்சி - மக்களுக்கான ஆட்சி - மக்கள் நினைப்பதையெல்லாம் சாதிக்கக்கூடிய ஆட்சி

எனவே, இது மக்களாட்சி - மக்களுக்கான ஆட்சி - மக்கள் நினைப்பதையெல்லாம் சாதிக்கக்கூடிய ஆட்சியாக இருக்கிறது. அவருடைய ஒவ்வொரு பெருந் தன்மையும், ஒரு குறுகிய நோக்கத்தோடு வருவதில்லை.

இல்லையானால், எந்தக் காலகட்டத்திலும், தமிழ் நாட்டினுடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால், காண முடியாத அளவில் பழைய முதலமைச்சருடைய படம் அப்படியே இருக்கட்டும் என்று புதிய முதலமைச்சர் சொல்கிறார்.

புதிய முதலமைச்சர் கொடுக்கின்ற நல்லாசிரியர் சான்றிதழில்கூட முதலமைச்சரின் படம் இல்லை.

மலையினும் மாணப்பெரிது' என்று சொல்வது போன்று,  அவர்கள் அடக்கத்தோடு இந்த வெற்றிகளைப் பெற்றிருக்கிறார். வெற்றிகளை எதிர்கொள்ளும்பொழுது சிறந்த பண்பு எதுவென்றால், அடக்கத்தோடு பெறுவது தான். ஆணவத்தோடு பெறுகின்றவர்கள் வாழ்ந்த தில்லை. ஆகவேதான், இந்தக் குறுகிய காலத்திற்குள் இந்தியாவிலேயே உள்ள முதலமைச்சர்களில், முதலா வது இடத்தைப் பெற்ற முதலமைச்சர் என்ற பெரு மையைப் பெற்றிருக்கிறார்.

இது நமக்குப் பெருமை - தமிழ்நாட்டிற்குப் பெருமை - அனைவருக்கும் பெருமை.

எனவே, இந்திய வரலாற்றிலேயே இது ஒரு திருப்பு மய்யம். இன்றைக்கு உங்களைச் சந்திப்பதிலும், இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதிலும் நான் மிகுந்த பெருமையடைகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.

ஒன்றிய அரசினுடைய ஆணையை பாண்டிச்சேரி அரசு மதிக்கவில்லை!

செய்தியாளர்: தமிழ்நாட்டில் விநாயகர் ஊர்வலத் திற்கு அனுமதியில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்; ஆனால், அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் அனுமதி அளித்திருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: பாண்டிச்சேரியில், ஒன்றிய அர சினுடைய விதியை மீறியிருக்கிறார்கள்; தமிழ்நாட்டில், ஒன்றிய அரசினுடைய விதியை மீறவில்லை.

இரண்டாவது, பாண்டிச்சேரியில் இருக்கின்றவர் களைப்பற்றி கவலையில்லை. அதேநேரத்தில், தமிழ்நாட் டைப் பொறுத்தவரையில், தெளிவான அளவிற்கு ஒன்றிய அரசே சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது. மத விழாக்களை அனுமதிக்காதீர்கள்; மூன்றாவது அலை வரக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று சொல்லி, ஒன்றிய உள்துறை  செயலாளர் சுற்றிக்கையை அனுப்பியிருக்கிறார். அந்த சுற்றறிக்கையை கடைப்பிடித்துத்தான் தமிழ்நாடு அரசு அதனை செய்திருக்கிறது.

அவரவர்கள் தனியே வீட்டிற்குள் வைத்துக் கொள்வதற்கு எந்தத் தடையும் போடவில்லை. பொது இடங்களில் கூட்டம் சேரக்கூடாது என்பதற்காகத்தான் அதனைச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆகவே, அதை மீறி பாண்டிச்சேரியில் அனுமதி அளித்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் ஒன்றிய அரசினுடைய, அவர்களுடைய அரசின் ஆணையை அவர்கள் மதிக்கவில்லை.

இன்னொரு அரசாக ஒன்றிய அரசு இருந்தாலும், அதனை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மதிக்கிறது என்பதுதான் அதற்குப் பொருள்.

மக்களையும் காப்பாற்றுகிறது - அதேநேரத்தில், அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு மிகத் தெளிவாக செயல்படுகிறது.

நிச்சயம் விடியல் கிடைக்கும்

செய்தியாளர்: ஏழு பேர் விடுதலைபற்றி...?

தமிழர் தலைவர்: குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறது தமிழ்நாடு அரசு. அவருடைய முடி விற்காகக் காத்திருக்கிறது. அந்த முடிவு தெரிந்தவுடன், அடுத்தபடியான நடவடிக்கையை எடுப்பார்கள்.

ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமையில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதற்கு, அண்மையில்கூட அவர்களை அகதிகள் என்றெல்லாம் சொல்லக் கூடாது என்று சொல்லி, பெயரை மாற்றியிருக்கிறார்கள்.

ஆகவே, சட்ட சிக்கலான பிரச்சினையில், தெளிவாக சட்ட நிபணர்களுடைய கருத்துகளைக் கேட்டுக் கொண் டிருக்கிறார்கள். அதற்கு விடியல் ஏற்படவேண்டும். ஏனென்றால், இது விடியல் ஆட்சி. ஆகவே, விடியல் உடனே நடக்கிறதா? கொஞ்சம் தள்ளி நடக்கிறதா? என்பது பிரச்சினையல்ல - நிச்சயம் அதற்கு விடியல் கிடைக்கும்.

தந்தை பெரியார் பிறந்த நாள்திராவிட தேசியத் திருவிழா

செய்தியாளர்: திராவிடத் திருவிழா என்று சொல்கிறீர்களே, சமூகநீதி நாள் திராவிடத் திருவிழாவா?

தமிழர் தலைவர்: பெரியாருடைய பிறந்த நாளே, திராவிடத் திருவிழாதான். திராவிடம் என்பது ஒரு குறுகிய நோக்கம் கொண்டது கிடையாது.

முதலமைச்சர் சொன்ன உறுதி மொழியில் சொன்னார் அல்லவா,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதுதான் திராவிடம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று சொல்வதுதான் திராவிடம்.

ஆகவே, இந்தத் திராவிடத்திற்கு நேர் எதிராக

மேல்ஜாதி - கீழ்ஜாதி

தொடக்கூடிய ஜாதி - தொடக்கூடாத ஜாதி

படிக்கக் கூடிய ஜாதி - படிக்கக் கூடாத ஜாதி

பணிக்குப் போக தகுதியுள்ள ஜாதி - பணிக்குப் போக தகுதியற்ற ஜாதி என்றெல்லாம் சொன்ன சமுதாயத்தில்,

எல்லோருக்கும் எல்லாமும் - அனைவருக்கும் அனைத்தும் என்பதைக் கொண்டு வந்ததினால்தான், திராவிட தேசியத் திருவிழா - அதைத்தான் கொண்டாடு கிறோம்.

உண்மையாகவே, அதனுடைய முழுப் பொருளை இன்றையப் பிரகடனத்தின்மூலம் கொடுத்திருக்கின்ற முதலமைச்சருக்கு உங்கள் மூலமாக மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடவுளை ஏமாற்றுகின்ற வேலைதான்

செய்தியாளர்: கோவில்களில் இலவசமாக மொட்டை யடித்துக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருப்பது அவசியமானதா?

தமிழர் தலைவர்: கோவிலுக்குப் போவதே, மொட் டையடிப்பதற்காகத்தான். அவசியமா? இல்லையா? என்பது அவர்களைப் பொறுத்ததுதான்.

அந்தக் காலத்தில், பெரியார் அய்யா அவர்கள் வேடிக்கையாக சொல்வார், வேண்டுதல்களில்கூட கடவுளை ஏமாற்றுகின்ற வேலைதான் பக்தர்களுக்கு.

எப்படி என்றால், எது இலவசமாக, கேட்காமல் வளருமோ அதை மட்டும்தான் காணிக்கையாகக் கொடுப்பேன் என்று வேண்டிக் கொள்கிறார்கள்.

ஆனால், சுண்டு விரலை வெட்டிப் போடுகிறேன் என்று யாராவது வேண்டிக் கொள்கிறார்களா?

கட்டை விரலை வெட்டிப் போடுகிறேன் என்று யாராவது வேண்டிக் கொள்கிறார்களா?

கண் பிரச்சினை சரியாகிவிட்டால், தங்கத்தில் கண் செய்து போடுகிறேன் என்று சொல்வார்களே தவிர, கண்களைத் தோண்டிப் போடுகிறேன் என்று யாராவது வேண்டிக் கொள்கிறார்களா?

ஆகவேதான், மிக முக்கிமான அளவிற்கு, அது ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி.

அந்தத் துறையில் அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்; யாரைத் திருப்தி செய்யவேண்டும் என்பதற் காகச் செய்வார்கள். ஏனென்றால், எல்லோருக்கும் உரிய அரசு இது.

அது ஒரு சூப்பர் மார்க்கெட் போன்றது. சூப்பர் மார்க்கெட்டில் எனக்குத் தேவையானதை நான் வாங்கிக் கொள்ளவேண்டும்; அவருக்குத் தேவையானதை அவர் வாங்கிக் கொள்ளவேண்டும். அவ்வளவுதானே தவிர, வேறு கிடையாது.

இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்

செய்தியாளர்: சங்க இலக்கியத்தை திராவிடக் களஞ்சியம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னதாக பிரச்சினையை எழுப்பியுள்ளார்களே?

தமிழர் தலைவர்: நம்முடைய அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மிகத் தெளிவாக பதிலளித்துள்ளார்.

திராவிடக் களஞ்சியம் என்றால் என்ன?

சங்க கால இலக்கியம் என்றால் என்ன? என்று புரியா மல், இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட குழப்பத்தை நாட்டிற்கே ஏற்பட்ட குழப்பம்போன்று ஆக்கிக் கொள்கிறார்கள்.

திராவிடக் களஞ்சியம் என்பது வேறு. கால்டுவெல் அவர்கள், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் என்றுதான் தலைப்பைப் போட்டார்கள். ஆகவே,  அது தனி - சங்க இலக்கியம் தனி.

எனவே, திராவிடம் என்பதுதான் புராதனத்தில் இருக்கக்கூடிய வரலாற்றுப் பெயருடைய மொழிக் குடும்பம் என்பது தெளிவு.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடையே கூறினார்.

No comments:

Post a Comment