சென்னை, செப்.10 தொழிற்கல்வி பட்டப்படிப்பு மாணவர் களுக்கு, முதலமைச்சரின் நிவாரண நிதியின் கீழ் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் குறைந்துள்ளதால், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து கல்லூரிகளுக்கும், உயர் கல்வித்துறை சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தொழிற்கல்வியான, பி.இ., - பி.டெக்., - எம்.பி.பி.எஸ்., சட்டம் உள்ளிட்ட படிப்புகளை படிக்கும் மாணவர்களில், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களில், ஆண்டுக்கு 200 பேர் தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சரின் நிவாரண நிதியின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இந்த திட்டம், 18 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
இந்த திட்டத்தில் தற்போது, ஒவ்வொரு மாணவருக்கும் படிக்கும் காலத்தில், ஒரு முறை மட்டும் தலா, 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். பயன் பெற விரும்பும் மாணவர்கள், மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். அங்கிருந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படும். அவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு நிதி உதவி வழங்கப்படும்.
இந்நிலையில், தொழிற்கல்வி படிப்புகளில், ஒற்றை சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்கள் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சரின் நிவாரண நிதியில் உதவி கேட்கும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வருவது குறைவாக உள்ளது.எனவே, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உரிய விண்ணப்பங்களை பெற்று, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
காட்டுவிலங்காண்டித்தனம்!
மத்தியப் பிரதேசத்தில் கல்வீச்சு திருவிழாவாம்
400 பேர் காயமடைந்த அவலம்
சிந்த்வாரா,செப்.10- மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கோத்மார் என்ற பெயரில் கல்வீச்சு திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின்போது, அங்குள்ள ஜாம் நதியின் இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொள்வது வழக்கம்.
அதன்படி, 8.9.2021 அன்று நடைபெற்ற திருவிழாவில் மக்கள் கற்களால் தாக்கிக் கொண்டதில் 400 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த கோத்மார் திருவிழாவுக்கு சுவாரசியமிக்க பின்னணி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, 300 ஆண்டுகளுக்கு முன்பு ஜாம் நதியின் ஒருபுறம் அமைந்துள்ள பதூர்னா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதன் மறுபுறம் உள்ள சாவர்ஹான் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தவற்காக அவரை அழைத்துச் சென்றாராம். அப்போது அவர்களை தடுப்பதற்காக, சாவர்ஹான் கிராம மக்கள் அவர்கள் மீது கற்களை வீசியுள்ளனர். அப்போது, அந்த காதல் இணையர்களை காப்பாற்றுவதற்காக பதூர்னா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பதிலுக்கு கல்வீசி அவர்களை ஊருக்கு அழைத்து வந்தனராம். இந்த சம்பவத்தை நினைவுகூரும் விதமாக, அன்று முதல் இந்த கல்வீச்சு திருவிழா நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment