சுதந்திரத்துக்காக யார் யார் எல்லாமோ பாடுபட்டார்கள்; பாடுபட்ட பலரும் பிற்காலத்தில் பெரும் பதவிப் பல்லக்கில் பவனி வந்தனர். தன் தியாகத்துக்காக கிண்டி ஆளுநர் தோட்டத்தையே தியாகி மானியமாகக் கேட்ட ராஜாஜி போன்றவர்கள் அனுபவிக்காத பதவிகளா? (குங்குமம் 7.4.2000)
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது அதற்கு எதிராக நின்றதால் ஆகஸ்டுத் துரோகிப் பட்டம் அவரைத் தேடிச் சென்றது - ஆனாலும் வெள்ளையன் வெளியேறிய சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும் அவரே! என்ன செய்வது! அவர் தோளில் பூணூல் தொங்கியதே! ஆனால் இரட்டை ஆயுள் தண்டனை (40 ஆண்டுகள்) பெற்ற தமிழன் வ.உ. சிதம்பரனாரை எத்தனைப் பேர் நினைத்து பார்க்கிறார்கள்? (அவரின் பிறந்த நாள் 1872, செப்டம்பர் 5).
சிதம்பரனாருக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி ஏ.எஃப் பின்ஹே கூறிய வாசகங்கள் கொடுமையானவை என்றாலும் - அவை ஒரு வகையில் வ.உ.சி.யின் வீரத்திற்கும், தீரத்திற்கும், தியாகத்திற்கும் காலத்தைக் கடந்து கட்டியம் கூறிக் கொண்டு தானிருக்கும்.
“வ.உ. சிதம்பரம் பிள்ளை வெறுக்கத்தக்க மிகப்பெரிய ராஜதுரோகி! மேன்மை தங்கிய மன்னர் பிரானின் பிரஜைகளில் இந்தியர் - ஆங்கிலேயர்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் விதைப்பவர். அவருடைய எலும்புகள்கூட சாவிற்குப் பிறகு ராஜ துவேஷத்தைப் பரப்பும்!” என்று தீர்ப்பில் சொன்னார் என்றால் வ.உ.சி.யின் தீரம் எத்தன்மையது என்பது எளிதில் விளங்கும்.
பாளையங்கோட்டையில் அடைக்கப்பட்ட (7.7.1908) அந்தஅரிமா அதற்குப்பின் கோவை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அந்தச் சிறையில் அவரைச் செக்கிழுக்க வைத்தனர்.
அந்த மாவீரன் சிறையிலிருந்து வெளியேவந்த போது அவரை வரவேற்க வந்தவர்கள் வெறும் 5 பேர்கள் தான்!
என்ன கொடுமையடா இது! கடைசிக் காலத்தில் வறுமைத் தேள் கொட்டக் கொட்ட தன் அன்றாட வாழ்வுக்கே அல்லற்பட்டார்! மண்ணெண்ணெய்க் கடை வைத்திருந்தார்; சென்னையில் லோன் ஸ்கொயரில் அரிசிக் கடையும் வைத்தார்; அதுவும் நட்டத்தில் முடிந்தது.
பிற்காலத்தில் சுயமரியாதை இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு தந்தை பெரியார் அவர்களின் உற்ற நண்பராகவும் விளங்கினார்; சுயமரியாதை மாநாடுகளில் எல்லாம் கர்ச்சித்தார்.
வ.உ.சி.யைப்பற்றி தந்தை பெரியார் சொல்கிறார்: என்னை வ.உ.சி. அவர்கள் தலைவர் என்று சொன்னதற்காக நான் மிகுதியும் வெட்கப்படுகிறேன். அவர் வங்காளப் பிரிவினையின் போது, தலைவராக இருந்து நடத்திய பெருங்கிளர்ச்சியின்போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஷனாய் விளையாடிக் கொண்டிருந்தேன்.
அவரையும் அவர் போன்றோரையும் கண்டே பொதுத் தொண்டில் இறங்கினேன் (குடிஅரசு 26.6.1927) என்று கோவில்பட்டி திராவிடர் கழக 18ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் பேசினார்.
- கலி.பூங்குன்றன்
குறிப்பு: 1944இல் திராவிடர் கழகம் தோன்றியது என்றாலும் கோவில்பட்டியில் திராவிடர் கழகம் என்றோர் அமைப்பு இருந்ததும், அதில் வ.உ.சி.யும், பெரியாரும் பங்கேற்று உரையாற்றினர் என்பதும் நோக்கத்தக்கது.
No comments:
Post a Comment