10.01.1948 - குடிஅரசிலிருந்து....
தோழர்களே! இந்தியப் பெண்கள் நிலையைப் பற்றி பேசுவதென்றால் அது மிகவும் பரிதாபகரமான விஷயமாகும். அங்குள்ள ஆண், பெண் வித்தியாசமானது முதலாளி, தொழிலாளிக்கு உள்ள வித்தியாசத்தைவிட மிகக் கடினமானது. ஒரு தொழிலாளியானவன் எப்படியாவது பணம் சம்பாதித்துக் கொண்டானேயானால், அவன் மெல்ல மெல்ல முதலாளி கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடியவனாகி விடுவான். ஆனால் இந்தியப் பெண்களோ அப்படியில்லை. அவர்கள் எந்த நிலையிலும் ஆண்களுக்கு அடிமையாகவும், அவர்களுடைய அனுபவப் பொருளாகவும், ஆண்களையே தெய்வமாகக் கருதிப் பூஜித்துத் தொண்டு செய்து கொண்டிருக்க வேண்டியவர்களாகவும் இருப்பார்கள்.
பெண் பிறவியே பெரிய பாவமாம்
இந்தியாவில் இந்துப் பெண்கள், இந்து மத சம்பிரதாயப்படி பாவ ஜென்மங்களாகக் கருதப்படுவர். அதாவது சென்ற ஜென்மத்தில் அவர்கள் செய்த பாவ காரியங்களால், இந்த ஜென்மத்தில் பெண்களாய்ப் பிறக்கிறார்கள் என்பது ஒரு சாஸ்திர விதி. ஒரு குடும்பத்தில் எத்தனை பெண் குழந்தை இருந்தாலும், அக்குடும்பத்திற்கு ஆண் குழந்தை இல்லாவிட்டால், அதைப் பிள்ளையில்லாத குடும்பம் என்றே சொல்லுவது வழக்கம். ஒரு வீட்டில் ஒரு பெண்குழந்தை பிறந்தால், அது அவ்வீட்டுக்கு அதிருப்தி தரத்தக்க விஷயமாகவே கருதப்படும்.
ஆண்குழந்தை பிறந்தால் வெகு திருப்தியுடன் ஆடம்பரச் செலவு செய்வார்கள். ஏதாவது ஒரு சபை அல்லது கூட்டம், யாரும் பேசாமல் நிசப்தமாய் இருப்பதாய் இருந்தால் அதைப் பார்த்து, என்ன பெண் பிறந்த வீடு போல் இருக்கிறதே என்று கேட்பது வழக்கம். எவ்வளவு பெண் குழந்தை இருந்தாலும் ஒருவனுக்கு ஆண் குழந்தை இல்லாவிட்டல், வேறு குடும்பத்தில் இருந்து ஒரு ஆண் பிள்ளையைச் சுவீகாரம் எடுத்துக் கொள்வார்களே ஒழிய பெண் குழந்தையை வாரிசு குழந்தையாய்க் கருதுவதில்லை.
பெண் பிறப்பிலேயே விபசாரியாம்
பெண்கள் எந்த நிலையிலும் சுதந்திரத்திற்கு அருகதை அற்றவர்கள் என்பதே மத சம்பிரதாயம். ஒரு பெண்ணானவள் குழந்தைப் பருவத்தில் தாய், தகப்பன் மேற்பார்வையிலும், வாலிப பருவத்தில் புருஷன் மேற்பார்வையிலும், வயோதிகப் பருவத்தில் தன் மக்கள் மேற்பார்வையிலும் இருக்க வேண்டுமே ஒழிய, சுதந்திரமாய் இருக்க விடக் கூடாதென்று மனுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதுமாத்திரமல்லாமல் பெண்களைக் கடவுள், பிறவியிலேயே விபசாரியாய்ப் பிறப்பித்திருப்பதால் அவர்களைச் சர்வ ஜாக்கிரதையாகக் காவல் காக்க வேண்டும் என்றும் மத சாஸ்திரத்தில் எழுதப்பட்டிருக்கின்றது.
கல்வி கற்பதே விரோதமாம்
பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதும் மத சாஸ்திர விரோதமான காரியமாகும். இவ்வளவு நாகரிகமான காலத்திலும் இந்தியாவில் மொத்த ஜனத்தொகையில் 100 - க்கு ஒருவர் வீதம் தான் பெண்கள் கல்வி கற்றிருக்கக் கூடும். அப்படிக் கற்றிருந்தாலும் அந்தக் கல்வி அவர்களது வாழ்க்கையில் யாதொரு காரியத்திற்கும் பயன்படுவதில்லை. பெண்களுக்குக் கற்றுக் கொடுப்பதெல்லாம் வீட்டு சமையல் வேலை முதலிய வேலைகளைச் செய்யத்தான் கற்றுக் கொடுப்பது வழக்கம்.
சிறு பருவ முதலே அவர்களை ஆண்குழந்தைகளிடம் இருந்து பிரித்து வைக்க வேண்டுமென்று கருதுவதால் பொதுப் பள்ளிக் கூடங்களுக்கு அவர்களை அநேகமாய் அனுப்பவே மாட்டார்கள். மற்றபடி சிறு குழந்தைப் பருவத்தில் யாருக்காவது சங்கீதம், பாட்டு முதலியவைக் கற்றுக் கொடுக்கப்பட்டாலும், அவை அப்பெண்ணின் வாழ்க்கையில் சிறிதும் பயன்படச் சந்தர்ப்பம் இருப்பதே கிடையாது.
கல்யாணப் பொருத்தம் கடுகளவும் இல்லை
கல்யாண விஷயம் என்பது மிகவும் பரிதாபகரமானது. அநேகமாகப் பெண்களுக்கு 10, 12 வயதிற்குள்ளாக கல்யாணம் ஆகிவிடும். பிறந்த ஒரு வருஷத்திலிருந்தே எப்பொழுது வேண்டுமானாலும் கல்யாணம் செய்யலாம். சில வகுப்புகளில் எப்படியானாலும் 10 வயதுக்குள் கல்யாணம் செய்தாக வேண்டும் என்கின்ற நிர்பந்தம் உண்டு. கல்யாணம் என்பது பெண் கழுத்தில் ஆண் ஒரு கயிற்றைக் கட்டுவதுதான் கல்யாணம். தாலி கட்டுகின்றது என்கிற சடங்கு வரையிலும், பெண்ணுக்கு மாப்பிள்ளை இன்னார் என்றே அடையாளம் தெரியாது. மாப்பிள்ளைக்கும் பெண் இன்னார் என்றே அடையாளம் தெரியாது. கல்யாணம் என்பது பெண், மாப்பிள்ளை ஆகியவர்களின் பெற்றோர்கள் செய்துகொள்ளும் ஏற்பாடே ஒழிய, பெண் மாப்பிள்ளை ஆகிய இருவருடைய சம்மதம் என்பது கிடையாது. பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பொருத்தம் என்பது ஜோசியத்தின் மூலமும், சகுனத்தின் மூலமும் பார்ப்பதே தவிர, பிரத்தியட்ச யோக்கியதை முதலியவைகளைக் கொண்டு பார்ப்பதில்லை. 5, 10 வயதுள்ள சிறு பெண்களுக்கு 40, 50 வயதுள்ள மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்வதும் உண்டு. 10 வயதுப் பையனுக்கு 20 வயதுப் பெண்ணைக் கட்டுவதும் உண்டு.
60, 70 வயதுக் கிழவனுக்குச் சிறு பெண்களைக் கல்யாணம் செய்வதும் உண்டு. சென்ற வருஷத்தில் கூட 90 வயதுக் கிழவன் ஒரு சிறு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். பெண்ணின் தாய் தகப்பன்மார் யாருக்குக் கல்யாணம் செய்து கொடுப்பதானாலும் பெண் சம்மதித்துத்தான் ஆக வேண்டும். பெண் ஏதாவது ஒரு அதிருப்தியைக் காட்டினால், அது பெண்ணின் கற்பிற்கே விரோதமானது என்று சொல்லி விடுவதால், பெண் யாருக்குக் கொடுப்படுவதானாலும் சம்மதித்தாக வேண்டும்.
No comments:
Post a Comment