நேஷனல் எஜூகேஷன் பாலிசி உண்மையில் நாக்பூர் எஜூகேஷன் பாலிசி ஆகும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 11, 2021

நேஷனல் எஜூகேஷன் பாலிசி உண்மையில் நாக்பூர் எஜூகேஷன் பாலிசி ஆகும்

ஆர்.எஸ்.எஸ். அடிப்படையில் உருவாக்கப்பட்டது

பெங்களூரு, செப்.11 கருநாடக அரசு தேசிய கல்விக் கொள்கை மூலம் மாநில கல்வியைப் பாழாக்குவதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தி யாவுக்கான புதிய தேசிய கல்விக் கொள்கையை அமைக்கக் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவை ஒன்றிய  அரசு அமைத்தது.  அந்த குழு இதற்கான வரைவு அறிக்கையை 2019 ஆம் ஆண்டு மே மாதம் அளித்தது. இந்த திட்டம் குறித்து கருத்துக் கேட்பு நடந்தபோது பல அம்சங்களுக்குக் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள மும்மொழிக் கொள்கைக்குத் தமிழ்நாடு உள்ளிட்ட பல இந்தி பேசாத மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   இதையொட்டி இந்தி மொழி கட்டாயம் என்பதை நீக்கி மூன்று மொழி அவசியம் என மாறுதல் செய்யப்பட்டது.  அதன் பிறகு மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இந்த கொள்கைக்கு ஒப்புதல் அளித்து இந்த ஆண்டு முதல் அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கருநாடக மாநில பாஜக அரசு ஒப்புதல் அளித்தது.  இதற்கு அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  இதையொட்டி அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவகுமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் அவர், “தேசிய கல்விக் கொள்கையை ஆங்கிலத்தில் 'நேஷன்ல் எஜூகேஷன் பாலிசி' எனச் சொல்கின்றனர். ஆனால், அது உண்மையில் 'நாக்பூர் எஜூகஷன் பாலிசி' ஆகும்.   அது முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.   டில்லியில் இருக்கும் தங்கள் எஜமானர்களை திருப்திப்படுத்த கருநாடக பாஜக மற்ற மாநிலங்களுக்கு முன்பு நமது மாநிலத்தில் அமலாக்க முன் வந்துள்ளது.

பாஜகவினர் கருநாடக மாநில கல்விக் கொள்கையில் சட்டம் ஏதுமின்றி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்காமல் மாபெரும் மாறுதல் கொண்டு வர முயல்கின்றனர்.   இதில் முக்கியமானது இந்தி மொழியை மாநிலத்துக்குள் பின்பக்க கதவு வழியாக அழைத்து வருவது ஆகும்.  நமக்கு ஏன் மூன்று மொழிகள் தேவை?  கன்னடமும் ஆங்கிலமும் போதுமானது இல்லையா?  இது இந்தித் திணிப்புக்கான மற்றொரு வழி ஆகும்எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment