சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 1, 2021

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்

 சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை, செப்.1 சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று (31.8.2021) நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பிறகு, நீர்வளத் துறை, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

அப்போது அவர், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை நட்டத்தில் இயங்கி வருகிறது.

அடுத்த ஆண்டுக் குள் லாபத்தில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார்.

தொடர்ந்து, புதிய அறிவிப்பு களை வெளியிட்டு அமைச்சர் துரை முருகன் பேசியதாவது:-

பயனற்ற பழைய சுரங்கம் மற்றும் குவாரிகளை பொதுமக்களுக்கு பயனுள்ள அமைப்புகளாக மாற்றப் படும். விதிமுறைகளுக்குப் புறம்பாக கனிமங்கள் எடுப்பதை தடுக்க ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

குவாரிப்பணிகளில் இருந்து வரலாற்று சின்னங்கள், பழந்தமிழர் கல்வெட்டுகள், சமணப்படுகை மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படும்.

கட்டுமானப் பணிகளில் ஆற்று மணலுக்கு மாற்றாக சமீப காலமாக எம்.சாண்ட் உபயோகம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தரமற்ற எம்.சாண்டினை சந்தைகளில் விற் பனை செய்வதை தடுக்கவும், கண் காணித்திடவும் எம்.சாண்ட் தயாரிப்பு, தரம், விலை மற்றும் அவற்றை கொண்டு செல்லுதல் ஆகியவற்றை வரைமுறைப்படுத்த மாநில அளவில் கொள்கை ஒன்று உருவாக்கப்படும்.

கிராபைட் தயாரிக்க ஆய்வு

பல ஆண்டுகளாக அப்புறப் படுத்தப்படாமல் குவாரி பகுதியி லேயே மலை போல் குவிந்து கிடக்கும் கிரானைட் கழிவு கற்களை அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப் படும்.  அதிக செறிவூட்டப்பட்ட கிராபைட் தயாரிக்க தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் கிராபைட் சுரங்கம் மற்றும் ஆலை யின் சுற்று வட்டாரத்தில் அமைந் துள்ள கிராம பகுதிகளில் சுற்றுச் சூழல் மேம்படுத்தப்படும்.

சேலம், திருநெல்வேலி, தூத்துக் குடி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஜிப்சம் கனிம இருப்பு பகுதிகளை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் சுரங்கங்கள் மற்றும் குவாரிகளின் குத்தகை உரிம எல்லைகளை நில அளவை செய்திட ரூ.20 லட்சத்தில் நவீன நில அளவை கருவியை கொள் முதல் செய்து சுரங்கப்பகுதிகள் மற்றும் சுரங்க செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment