பெரு நாட்டில் நடக்க உள்ள, உலக துப்பாக்கி சுடும் வாகையர் பட்டப் போட்டிக்கு, தமிழ்நாட்டின் சார்பில் கோவையைச் சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரைபிள் கிளப் எனப்படும் துப்பாக்கி சுடும் பயிற்சி கிளப்புகளில் பங்கேற்று முறையாக பயிற்சி பெற்று, மாநில, தேசிய, பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
உலகளவிலான துப்பாக்கி சுடும் மன்றத்தின் சார்பில், உலக துப்பாக்கி சுடும் வாகையர் பட்டப் போட்டி பெரு நாட்டில் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 22ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இப்போட்டியில் இளையோருக்கான பிரிவில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து மகேஷ் பசுபதி(18), நிவேதிதா (20) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கோவை ரைபிள் கிளப் செயலாளர் மருதாசலம் கூறும்போது, இங்கு ஏராளமானோர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இளையோருக்கான உலக அளவிலான துப்பாக்கி சுடும் வாகையர் பட்டப் போட்டிக்கு, தமிழ்நாட்டின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட இருவருமே கோவையைச் சேர்ந்தவர்கள். இதில், மகேஷ் பசுபதி இளையோருக்கான 25 மீட்டர் தூர ஸ்டாண்டர்டு பிஸ்டல் பிரிவு போட்டிக்கும், இளையோருக்கான மகளிர் பிரிவில் நிவேதிதா வி.நாயர் 25 மீட்டர் தூர ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவுக்கும், 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் பிரிவு போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும், கோவை அவிநாசி சாலையில் உள்ள கோவை ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர், என்றார்.
இதுதொடர்பாக மகேஷ் பசுபதி கூறும்போது, நான் கடந்த 4 ஆண்டுகளாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
கடந்த 2019ஆம் ஆண்டு போபாலில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு 4 தங்கப் பதக்கம், 2 வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளதோடு, தேசிய அளவிலான சாதனைப் பதிவையும் பதிவு செய்துள்ளேன். பெரு நாட்டில் நடக்க உள்ள உலக துப்பாக்கி சுடும் வாகையர் பட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களை தேர்வு செய்ய, கடந்த ஆகஸ்ட் மாதம் பரிதாபாத்தில் தகுதிச் சுற்று போட்டி நடந்தது. இதில் நான் கலந்து கொண்டேன். இதன் இறுதியில், உலக வாகையர் பட்டப் போட்டியின் இளையோர் பிரிவில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளேன், என்றார்.
மகளிர் பிரிவுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ள நிவேதிதாவின் தந்தை கூறும்போது, நிவேதிதாவுக்கு நான் பயிற்சி அளித்து வருகிறேன்.
2018ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நிவேதிதா கலந்து கொண்டு 2 தேசிய அளவிலான சாதனையை பதிவு செய்துள்ளார். தவிர, 2 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
தற்போது இளையோருக்கான உலக துப்பாக்கி சுடும் வாகையர் பட்டப் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார், என்றார்.
No comments:
Post a Comment