அமெரிக்கா விட்டுச் சென்ற ஆயுதங்களுடன் தலிபான்கள் வெற்றிப் பேரணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 3, 2021

அமெரிக்கா விட்டுச் சென்ற ஆயுதங்களுடன் தலிபான்கள் வெற்றிப் பேரணி

காபூல், செப்.3 அமெரிக்கப் படைகள் வெளி யேறுவதற்கு முன்னதாக, காபூல் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தங்களுக்குச் சொந்தமான விமானங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ஏவுகணை அழிப்பு அமைப்புகள் என மொத்தம் 73 வாகனங்களை செயலிழக்கச் செய்தனர்.

அதேசமயம் சில ஆயுதங்களை அப்படியே விட்டுச் சென்றதாக தெரிகிறது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை கொண்டாட காந்தகாரில் தலிபான்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

இந்த பேரணியில் அமெரிக்க ராணுவம் விட்டுச் சென்ற ஆயுதங்களை எடுத்துச் சென்றனர். மேலும் அமெரிக்க ராணுவத்திடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள், சில வாகனங்கள் இந்த பேரணியில் இடம் பெற்றன. பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் கந்தகார் மீது பேரணியின் மீது பறந்து சென்றது. தலிபான்களுக்கு தகுதிவாய்ந்த விமானிகள் இல்லாததால் முன்னாள் ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அதனை ஓட்டிச் சென்றார்.

புதிய அரசு: தலிபான்கள் ஆலோசனை

ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக தலிபான் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறியுள்ளன. இதையடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தின் கீழ் முழுமையாக வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். ஏற்கெனவே இது சம்பந்தமாக முடிவு எடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு தலீபான் தலைவர்களையும் சந்தித்து பேசி வந்தனர்.

இதைத் தொடர்ந்து ஆப்கான் தலைநகர் கந்தகாரில் தலிபான் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரான் நாட்டில் உள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர தலிபான்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான் இயக்கத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் பதவி வழங்கும் வகையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.


No comments:

Post a Comment