* முனைவர் பேராசிரியர்
ந.க.மங்களமுருகேசன்
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 3இல் தமிழ்நாடு எங்கும் களை கட்டுகிறதோ இல்லையோ, பெரியார் திடல் களை கட்டி விடும் என்பதை விட, ஓர் அரை நாள் திருவிழாத்தான்?
தலைவர் கலைஞர் தந்தை பெரியார் நினைவிடம் வந்து, மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்திச் செல்லும் அந்த அரை மணி நேரம் ஒரு பரபரப்பு மிகுந்த நேரம்.
கருப்புச் சட்டைத் தோழர்கள் பட்டாளம் ஒருபுறம் எனில், தி.மு.கழகக் கண்மணிகள் மறுபுறம். காலை 8:00 மணிக்கெல்லாமே பரபரப்புத் தொற்றிக் கொள்ளும்.
தலைவரை அழைத்துச் சென்று நினைவிடம் சேர்க்கத் தமிழர் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் பரபரப்புடன் இருப்பர். கைப்பேசியைக் காதில் வைத்த வண்ணமே இருப்பார் அன்புராஜ் அவர்கள். தலைவர் அண்ணா நினைவிடம் சேர்ந்து விட்டார். தலைவர் நினைவிடம் விட்டுப் புறப்பட்டு விட்டார். அண்ணாசாலை கடந்து விட்டார். என்று தகவல்கள் வந்த வண்ண மிருக்கத் தலைவரின் ஊர்தி, தலைவர் கலைஞரின் தந்தை இல்லத் தில், ஊட்டி வளர்த்த தாய்வீட்டில் நுழையும்.
அதற்குப் பின் தலைவரைத் தமிழர் தலைவர் அழைத்துச் சென்று மரியாதை செலுத்தியவுடன், நினை விட வாயிலில் சிறிது நேரம். ஆண்டு தோறும் புத்தகப் பேழையுடன் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கொடுக்கக் கலைஞர் முகத்தில் தோன்றும் புன்னகை இருக்கிறதே, அது விவரிக்க இயலாத ஒரு தனி ரகம்.
சில ஆண்டுகளில் தமிழர் தலைவர் அருகில் ஓங்கி வளர்ந்து கொண்டிருக்கும் மாமரத்தைக் கலை ஞரிடம் காட்டுவார். சில ஆண்டுகள் முன்பு கலைஞர் நட்ட மரத்தில், விளைந்த மாங்கனிகளை அளித்து, நீங்கள் நட்ட மரத்தில் விளைந்தது என்று சொல்லி அளிக்கும் போதும் ஓர் ஆனந்தம் அந்தத் தலைவர் முகத் தில் பளிச்சிடும். கலைஞர் ஊர்தி புறப்படும். பிறகு அங்கே ஒரு பக்கம் தட்டுகளில் லட்டுகள் பங்கிடுவர் பலருக்கும்.
அது மட்டுமா? ஒரு பக்கம் தட்டில் இட்டலி, சுடச்சுடப் பொங்கல், வடை, கேசரி என்று காலை உணவும் கிடைக்கும். இவை எல்லாம், இந்தப் பரபரப்பு எல்லாம் அடங்கிய பிறகு தி.மு.கழகக் கொடிகள் மட்டும் காற்றில் அசைந்தாடும்.
வெளிவருகிறது - தாய்வீட்டில் கலைஞர் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் தாய்க் கழகமாம் திராவிடர் கழக நிகழ்வுகளில் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு என்பதைப் படித்தபோதுதான் மேலே கண்ட நிகழ்வுகள் நிழலாடின.
என்ன, என்னவெல்லாம் தாய் வீட்டில் கலைஞர் எனும் புத்தகத்தில் இடம்பெறவிருக்கின்றன என்ற நீண்ட பட்டியலைப் பார்த்தவுடன் ஆவல் மேலும் மேலும் உயர்ந்து கொண்டு சென்றது.
இனமானப் பேராசிரியர் பார்வை யில் தந்தை பெரியார் நூற் செய்தி களைத் தொகுத்துக் காட்டியபோது, பேராசிரியர் என்னிடம் கூறியது, திராவிடர் கழக (இயக்க) வெளியீடு பார்க்கிறாய் அல்லவா? ஆண்டு தோறும் வெளிவரும் தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் பார்க் கிறாயல்லவா? அதுபோல் கச்சிதமாக, எடுப்பாக, அழகாக வெளிவர வேண் டும்.
அய்யாவின் பிறந்த நாள் மலருக்குக் கட்டுரை கேட்டபோது, அண்ணா குறிப்பிட்ட செய்தி ஒன்றை ஆசிரியர் தமிழர் தலைவர் ஒருமுறை சுட்டிக்காட்டியது நினைவில் வந்து நின்றது.
அய்யா, வீரமணிக்கு அதிக சுதந் திரம் கொடுத்திருக்கிறார். மலர்களை எல்லாம் செலவைப் பார்க்காமல் அழகு கொழிக்க வெளியிடுகிறார் என்று கூறியதாக நினைவு.
அண்ணாவின் பார்வை சரிதான். திராவிடர் கழக மலர்கள், தந்தை பெரியார் பிறந்த நாள் மலராயினும் சரி, மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆங்கில ஏடு மலர்களாயினும் சரி, குடிஅரசு கட்டுரைத் தொகுப்புகளானாலும் சரி, தனி ரகம். நம்மவர் மட்டுமில்லை, மலர் வெளியிடுகின்ற அவாளும் கூடப் பொறாமை கொள்வர்.
பெண்ணுக்குப் பெண் ஆசை கொள்ளும் பேரழகி என்பதுபோல், இதழாளர்களே வியக்கும் வண்ணம் வந்துள்ள திராவிடர் கழக (இயக்க) வெளியீடுகள்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஒரு நடமாடும் பேரகராதி இலக்கியம் - திராவிட இயக்கக் களஞ்சியம். எனவே, அவருடைய நினைவில் எதுவும் தப்பாது.
எனவே, தாய் வீட்டில் கலைஞர் தொகுப்பில் அரிய பல கருத்துக் கோவைகள், எழுத்தோவியங்கள், நெகிழ்ச்சி உரைகள், உணர்ச்சி உரைகள், பேருரைகள், சொற்பொழி வுகள், சங்கநாதம், எழுச்சி முழக் கங்கள், கலைஞரின் பொழிவுகள், கலைஞரின் கருத்துரைகள், வாழ்த் துரைகள் மட்டுமல்லாமல், அன்பு உடன் பிறப்பே என்று விளிக்கும் தலைவர் கலைஞரின் கடிதங்கள் கண்டிருப்போம், தந்தை பெரியா ருக்குத் தலைவர் எழுதிய கடிதங்கள் இருக்கின்றனவே அவை அரிதின் அரிதானவை. என அத்தனையுமா என்று மலைத்து விடுகையில், அழகிய வடிவமைப்பில் அரிய ஒளிப்படங்களுடன் - 650 பக்கங் களுடன் எனும்போது நம் படிக்கு அவசியம் முன்பதிவு செய்ய வேண்டும்.
"பெரியார் அவர்கள் வாழ்த்து களை பெறுவதற்காக ஏன் ஓடிவரு கிறோம் என்பதை குறிப்பிட்டேன். கிராமங்களில் சொல்வார்கள் பாம்பும் கீரியும் சண்டைப்போட்டுக் கொண் டால் கீரிப்பிள்ளை பாம்பைத் துண்டு துண்டாக வெட்டி எறிந்துவிடும். ஆனாலும், சண்டை முடிந்தபிறகு பாம்பின் விஷப்பற்கள் கீரியின் உடலில் பாய்ந்திருக்கும் அந்த விஷம் தன்னைக் கொல்லாமல் இருப்பதற்காக பாம்பை கண்டம் துண்டமாக வெட்டி எறிந்த அந்த கீரிப்பிள்ளை தனக்குத்தெரிந்த மூலிகைச் செடி இருக்கிற இடத்திற்கு ஓடிபோய் தன் உடம்பை அதில் புரட்டிக் கொள்ளும். அதன்மீது பதிந் துள்ள விஷம் அற்று போகும் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.
அதைப்போலதான் நாட்டிலே இருக்கிற மூடநம்பிக்கைகளை சண்டாளர்களை, சதிக்காரர்களை எதிர்த்து, ஜாதி திமிர் பிடித்தவர்களை எதிர்த்து, நாட்டுமக்களை ஏமாற்று பவர்களை எதிர்த்து போராடுகிற திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகிய நான், தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் பொறுப்பை உங்கள் அருளால் பெற்றிருக்கிற நான் எதிரிகளை வீழ்த்திவிட்டு தன்மீது பதிந்துள்ள விஷத்தைப் போக்கிக்கொள்ள மூலிகையைத் தேடி ஓடி செல்கிற கீரிப்பிள்ளையைப் போல் உங்களை நாடி வருகிறேன். பெரியாரை நாடி வருகிறேன் என்று கூறிக்கொண்டு பெரியார் வாழ்க! வாழ்க!! அண்ணாவின் திருநாமம் வாழ்க! வாழ்க!! என்று கூறி விடை பெறுகிறேன் வணக்கம்."
- 17.09.1971 அன்று ஈரோட்டில் தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்து கலைஞர் ஆற்றிய உரை : விடுதலை, 18.09.1971, 13.10.1971
தி.மு.க உறவு பற்றி கீழ்க்கண்ட வாறு விளக்குகிறார். "புதிது புதிதாக நேற்று பெய்த மழையில் இன்று காலையில் முளைக்கின்ற காளான் களைப் போல கட்சிகளைத் தொடங்கி எனக்கு பெரியாரைத் தெரியும், அண்ணாவைத் தெரியும் என்றெல் லாம் பேசிக் கொண்டிருக்கிற புதிய வர்களுக்குச் சொல்கிறேன். நாங்கள் தியாக அரசியல் பாரம்பரியத்தைப் படைத்தவர்கள்; இன்று திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக இருக்கிற வீரமணி சிறுவன் வீரமணி என்று அறிமுகப்படுத்தப்பட்டு, மாணவர் குழுக்களை அமைத்துக் கொண்டு, அந்தக் குழுவின் கால் படாத கிராமங்களே தமிழ் நாட்டில் இல்லை என்னும் அளவிற்கு பகுத் தறிவுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக் கிறோம்.
1945-1946இல் புதுவையில் நடை பெற்ற மாநாட்டின்போது, சில எதிர்க் கட்சி முரடர்களால் தாக்குண்டு, பெரியார் அவர்களால் காயங்களுக்கு மருந்து போடப்பட்டு, அங்கிருந்து குடிஅரசு அலுவலகத்திற்கு அழைத் துச் செல்லப்பட்டு, அங்கே துணை யாசிரியனாக வேலை பார்த்து ஓராண்டு காலத்திற்கு மேல் அன்னை மணியம்மையார் கையால் சாப்பிட்ட கருணாநிதி தான் இன்றைக்கு அதே மணியம்மையார் தலைமையில் பெரியார் சிலையைத் திறந்து வைத் திருக்கிறேன். இவைகளை முற்றிலும் புதியவர்களுக்கு ஞாபகப்படுத்த நான் கடமைபட்டிருக்கிறேன்.
பெரியார் சிலைகளைத் திறக் கிறோம் - படங்களைத் திறக்கிறோம்; அவர் பெயரால் நினைவுச் சின்னங் களை அமைக்கிறோம்; கட்டடங் களுக்கு பெயர் வைக்கிறோம் என்ப தோடு பெரியாருடைய கொள்கை களை நாம் நிறைவேற்றி விட்டோம் என்று பொருளல்ல. அவர் எந்த இலட்சியங்களுக்காக பாடுபட் டாரோ, எந்தக் கொள்கைகளை நாட்டு மக்களிடம் எடுத்துச் சொன் னாரோ, அவைகளுக்காக நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிற சூளுரையை மேற்கொண் டாக வேண்டும்.
பெரியாரின் - கடவுளின் பெய ரால், மதத்தின் பெயரால், புராண இதிகாசங்களின் பெயரால் மக்களை ஏமாற்றக் கூடாது என்பதில் அழுத் தம் திருத்தமாக இருந்தார். அதை இன்றைக்கு நாம் செயல்படுத்தித் தீரவேண்டும்.
தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப் பிலே இருக்கிறது. ஆகவே வேக மாகப் போகக் கூடாது என்று பெரியார் எங்களுக்குச் சொல்லி இருக்கிறார் என்றாலும், பெரியா ருடைய கொள்கைகளை இந்த நாட்டு மக்களுக்கு ஏற்ற வகையில், இந்த நாடு முன்னேறுகிற வகையில் தி.மு.கழக அரசு - எவ்வளவு எதிர்ப் புகள் வந்தாலும் அவைகளைத் தாங்கிக் கொண்டு நிச்சயமாக நிறை வேற்றும் என்ற உறுதியை இந்தச் சிலைக்கு முன்னால் நின்று தெரிவித்துக் கொள்கிறேன்."
13.03.1975 அன்று காரைக்குடியில் நடைபெற்ற பெரியார் சிலை திறப்பு விழாவில் கலைஞர் ஆற்றிய உரை- விடுதலை, 15, 16.03.1975
"அந்தக் காலத்திலே வேண்டு மானால் வாலியையும், சுக்ரீவனையும் மோதவிட்டு மறைந்திருந்து இராமன் வெற்றி பெறலாம் என்று வீரமணி சொன்னார்.
இந்தக் காலம் அப்படியல்ல; வாலியும், சுக்ரீவனும் எப்படி, எப்படி என்று புரிந்துவிட்டது நேரடியாகவே இராமன் வந்துவிட்டான் என்றும் சொன்னார். அந்தக் கருத்திலிருந்து நான் மாறுபடுவதற்காக மன்னிக்க வேண்டுகிறேன்.
இன்றைக்கு வீடணர்கள் தமிழகத் திலிருக்கிறார்கள். இன்றைக்கும் காட்டிக் கொடுக்கிற துரோகிகள் - எட்டப்பர்கள் தமிழகத்திலே இருக் கிறார்கள்.
இன்றைக்கும் கருவுற்று, பத்து மாதம் வாழ்ந்து, வளர்ந்து, பால் குடித்த தாயின் மார்பை அறுத்தெ றியக் கூடிய கயவர்கள் கூட்டம் தமிழகத்தில் இருக்கிறது.
எனவேதான், அந்தக் கயவர் கூட்டத்தை வேரறுக்க - அந்த வீபீஷணக் கூட்டத்தை வேரறுக்க - அந்தச் சுக்ரீவன்களின் கூட்டத் தைச் சுக்குநூறாக்க - தந்தை பெரி யாரின் சுயமரியாதைக் கொள்கை, தன்மான உணர்வு, தமிழினப் பற்று இவைகளையெல்லாம் கேடயங் களாக - வாள்களாக நாம் பயன்படுத் தியாக வேண்டும். அதைப் பயன் படுத்துவோம்! என்று பலரறிய - நாடறிய - உலகறியச் சூளுரைக்கின்ற நாள்தான். பெரியாரின் சிலை திறக் கின்ற நாள்!"
- 01.11.1981 அன்று ஆத்தூரில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து கலைஞர் ஆற்றிய பேருரை: விடுதலை 03, 04.11.1981
புத்தகம் வந்து பலர் பாராட்டி, நாம் வாங்க வேண்டும் என்பதைவிட, நாம் முன் பதிவு செய்வது நல்லது அல்லவா!
எப்போது வரும்
'தாய் வீட்டில் கலைஞர்'?
எப்போது வரும்
'தாய் வீட்டில் கலைஞர்'?
பெரியார் புத்தக நிலையம், எண்கள்: 044-2661 8163, 83003 93816 - சென்னை - 0431 - 4200987, 92266 57609 - திருச்சி.
No comments:
Post a Comment