மண்டல் குழு - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடுக்குப் பரிந்துரை செய்ததற்கே காரணம் என்ன?
50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு மிகக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு, ஏற்கெனவே பட்டியலின மக்களுக்கு 22.5 விழுக்காடு இருந்ததால், அதுபோக மீதி 27 விழுக்காடு இதர பிற்படுத்தப்பட்டோருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு செயல்பாட்டில் இருக் கிறது என்றால், அதற்குக் காரணம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவுக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஏற்கப்பட்டு (76ஆம் சட்ட திருத்தம்) அரச மைப்புச் சட்டம் 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட காரணத் தால்தான்
மற்றபடி 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்பதுதான் யதார்த்தம்.
உண்மை இவ்வாறு இருக்க, பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு என்று அவசர அவசரமாக ஒன்றிய அரசு சட்டம் நிறைவேற்றியது சட்ட விரோதம் அல்லவா! இதன்படி 27 + 22.5 + 10 = 59.5 விழுக்காடாக உயரவில்லையா! இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதம் அல்லவா!
இன்னொரு முக்கிய சட்ட விரோதம் இந்தப் பிரச்சினையில் மிக முக்கியமான அடிப்படை உண்டு.
இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்ட மக்களுக்காகவே என்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் தெள்ளத் தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறுகிறது.
முதல் சட்ட திருத்தம் தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடு பொங்கி எழுந்த நிலையில் கொண்டு வரப்பட்டது. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்பதுதான் அளவுகோலாகக் கொள்ளப்பட்டது.
1951இல் பொருளாதார அளவுகோல் என்பது இணைக்கப்பட வேண்டும் என்று ஜனசங்கத்தைச் சேர்ந்த தீனதயாள் உபாத்தியாயா என்பவரால் கொண்டு வரப்பட்ட திருத்தம் 243க்கு 5 என்ற வகையில் தோற்கடிக்கப்பட்டது.
அதற்குப் பிறகும்கூட குஜராத், ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. அரசுகளால் கொண்டுவரப்பட்ட பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களால் செல்லாது என்று தீர்ப்பு கூறப்பட்டது. (குஜராத் 10% - ராஜஸ்தான் 14%)
50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு என்ற வகையிலும் பொருளாதார அளவுகோல் செல்லாது என்னும் தீர்ப்பு வகையிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதியினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு முற்றிலும் சட்ட விரோதமே!
(உயர்ஜாதியில் ஏழை என்பவர்களின் ஆண்டு வருமானம் என்ன தெரியுமா? ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை) ஒரு குலத்துக்கொரு நீதி என்னும் மனுதர்மம் தானே ஆர்.எஸ்.எஸின் அரசியல் சட்டம்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தும், அதனைப் பொருட்படுத்தாது, அவசர அவசரமாக சட்டத்தை நிறைவேற்றி செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்டது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு என்றால் இதை மோசடி என்று சொல்லாமல் என்னவென்று சொல்லுவது.
மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசு கூறிய காரணம் என்ன தெரியுமா?
சலோனிகுமாரி என்பவர் தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று காரணம் சொன்னார்கள். அந்தப் பெண்மணி இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று தான் வழக்குத் தொடர்ந்தாரே தவிர எதிர்த்து அல்ல - அதிலும்கூட அறிவு நாணயம் இல்லை.
சட்ட விரோதமான உயர்ஜாதிகாரர்க்களுக்கான இடஒதுக் கீட்டால் ஏற்பட்ட நிலை என்ன?
2020ஆம் ஆண்டில் ஸ்டேட் பாங்கில் எழுத்தர்களுக்கான தேர்வின் முடிவு எதைக் காட்டுகிறது?
எஸ்.சி.க்கு கட்ஆஃப் - 61.25%
எஸ்.டி.க்கு கட்ஆஃப் - 53.75%
இதர பிற்படுத்தப்பட்டோர் - 61.25%
உயர்ஜாதி ஏழைகளுக்கோ வெறும் - 28.5%
பழங்குடியின மக்களை (எஸ்.டி.) விட குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்ஜாதிக்காரர்களுக்கு வேலை வாய்ப்பு.
அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களைப் பொதுப் பிரிவுக்குக் கொண்டு வராமல், அவர்களுக்கான இடஒதுக்கீடுப் பிரிவில் கொண்டு வந்திருப்பது அப்பட்டமான சட்ட மீறல் மோசடி அல்லவா! இதன்மீது நடவடிக்கை என்ன?
கடந்த வாரம் அதே ஸ்டேட் பாங்கு - எழுத்தர் தேர்வு பற்றி வெளிவந்த தகவல் என்ன?
எஸ்.சி.க்கு கட்ஆஃப் - 61.75%
எஸ்.டி.க்கு கட்ஆஃப் - 57.25%
இதர பிற்படுத்தப்பட்டோர் - 61.75%
உயர்ஜாதி ஏழைக்கு - 47.75%
பொதுப் பிரிவுக்கு - 61.75%
இரண்டாண்டுகளாக நடைபெற்ற வங்கித் தேர்வுகளில் சட்ட விரோதமான இந்த சட்டத்தின் மூலம் உயர்ஜாதி ஏழைப் பார்ப்பனர்களின் வயிற்றில் இடங்கள் அறுத்துக் கட்டப்பட்டுள்ளன என்பது விளங்கவில்லையா?
இப்பொழுது கூறுங்கள் - ஒன்றிய பா.ஜ.க. அரசு பார்ப்பன அரசா? இல்லையா?
1925இல் பெரியார் சொன்ன பிரோமினோகிரசி என்பது இதுதான்! புரிந்து கொள்வீர்! பாடம் புகட்டுவீர்!
No comments:
Post a Comment