ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 'சூப்பர் கெப்பாசிட்டர்' எனப்படும் மிகு மின்தேக்கிகளை உருவாக்கியுள்ளனர். இவை தான் இன்றைய தேதிக்கு, உலகின் மிக நுண்ணிய அளவிலான மின் தேக்கிகள்.
ஒரு தூசித் துணுக்கு அளவே உள்ள பல மின் தேக்கிகளை தொகுத்து இணைக்கப்பட்ட சிறிய கருவி இது. ஒரு ஏ.ஏ.ஏ., மின் கலனுக்கு இணையான மின் ஆற்றலை வழங்கும் திறன் கொண்டதாக இது உள்ளது.ஜெர்மனியிலுள்ள கெம்னிட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வேறு சில அமைப்புகளுடன் இணைந்து, இந்த மிகு மின்தேக்கிகளை உருவாக்கியுள்ளனர்.
இவை, மனித உடலுக்குள் பதிப்பதற்கு ஏற்ற பொருட்களால் தயாரானவை. மேலும், மனித ரத்தத்தின் வேதியியல் தன்மையிலிருந்தே மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. கெம்னிட்ஸ் விஞ்ஞானிகள் இச்சிறு கருவியை, ஆய்வகத்தில் ரத்தம், ரத்த பிளாஸ்மா மற்றும் உப்பு நீர் ஆகியவற்றில் வைத்து இயக்கிப் பார்த்து, அதன் திறனை உறுதி செய்துள்ளனர்.
மின்னேற்றம் பெற்ற மின் தேக்கிகள், 16 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரத்தை தேக்கி வைத்து அசத்தியுள்ளன.அளவில் மிகச் சிறிய மிகு மின் தேக்கிகள், உடலுக்குள் பதிக்கப்படும் மருத்துவ நுண் கருவிகளுக்கு மின்சாரம் வழங்க பயன்படும்.
இதற்காகவே, ரத்த நாளத்திற்குள், ரத்த அழுத்தம், ரத்த ஓட்ட வேகம் ஆகியவற்றைத் தாக்குபிடிக்கின்றனவா என்ற சோதனையையும் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்ல, ரத்தத்தின் வேதிமாற்றத்தை அளக்கும் உணரிகளுக்கு மின்சாரத்தைவழங்கவும் மிகுமின் தேக்கிகளை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
No comments:
Post a Comment