சாவர்கர், ஞானகங்கை பற்றிய பாடங்களாம் அரியானாவில் சரஸ்வதி நதிபற்றி தனிப் பாட நூலாம்!
கேரளாவில் மாணவர் அமைப்பினர் போராட்டம்
கோழிக்கோடு, செப்.10 கேரள பல்கலைக் கழகங்களில் சாவர்கர், கோல்வால்கர் அவரின் ஞானகங்கை பற்றி எல்லாம் பாடத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன, அரியானாவில் கற்பனை நதியான சரஸ்வதிபற்றி தனி நூல் என்று காவிகள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். கேரளா வில் மாணவர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதுபற்றிய விவரம் வருமாறு:
கேரள முதுகலைப் பாடப்பிரிவில் கோல் வால்கர், சாவார்கர் குறித்த பாடம் பெரும் விமர் சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள பல்கலைக் கழகங்களில் முதுகலை படிப்பில் அரசியல் மற்றும் நிர்வாகம் என்ற பிரிவில் குறிப்பாக சாவர்கரின் 'ஹிந்துத்துவா', 'யார் ஹிந்து?' மற்றும் கோல்வால்கரின் 'ஞானகங்கை' மற்றும்
'வி ஆர் அவுர் நேசனல்ஹுட் டிபைண்ட்' போன்ற நூல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் போராட்டம்
கண்ணூர் பல்கலைக் கழகத்தின் பாடத்தில் இந்த நூல்கள் சேர்க்கப்பட்டதால் புரட்சிகர ஜனநாயக முன்னணி மற்றும் இதர மதச் சார்பற்ற மாணவர் அமைப்புகளிடையே பெரும் எதிர்ப்பை கேரள கல்வித்துறை சந்தித்து வருகிறது
சாவர்கர் மற்றும் கோல்வால்கரின் நூல்களோடு பாஜக அரசியல் தலைவர்களுள் ஒருவரான தீன் தயாள் உபாத்யாயாவின் 'இண்டெகரல் ஹியூமனிசம்' மற்றும் பால்ராஜ் மோதக் எழுதிய 'இந்தியனிசேசன், வாட், ஒய் அண்ட் ஹூ' போன்ற நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கேரள மாணவர் சங்கம், இடதுசாரி மாணவர் அமைப்பு மற்றும் காங்கிரஸ் மாணவர் அமைப்பு போன்றவை 9.9.2021 அன்று பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தின. மார்க் சிஸ்ட் மாணவர் அமைப்பினர் முக்கிய பதவிகளில் உள்ள இப்பல்கலைக்கழகத்தில் சங்பரிவார் கொள்கைகள் அடங்கிய பாடத்திட்டம் எப்படி வந்தது என்ற கேள்வி எழுப்பி உள்ளனர்
இது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ரிஜில் மக்குட்டி பேசும் போது "கேரளாவில் உயர் கல்வியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எவ்வளவு நுணுக்கமாக ஊடுருவி உள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது, நாங்கள் கல்வியில் காவிகள் நுழைவதை கடுமையாக எதிர்ப்போம். இது தொடர்பாக மாநில அரசுக்கும், முதலமைச்சருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பப் போகிறோம்" என்று கூறினார்.
கண்ணூரில் காவிமய பாடத் திட்டத்தை கேரள மாணவர் சங்கத்தினர் எரித்தனர்.
விதிமுறையை மீறவில்லையாம்!
இவ்விவகாரம் தொடர்பாக கன்னூர் பல்கலைக் கழக துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் கூறும் போது, "கல்வியில் காவி என்ற இவர்களின் கருத்தை நான் ஏற்கமாட்டேன், காந்தி, நேரு, அம்பேத்கர், தாகூர் போன்றவர்களின் வரலாறு எப்படி பல்கலைக்கழகத்தில் படிக்கப் படுகிறதோ அதே போன்றுதான் கோல்வால்கர் மற்றும் சாவர்கரின் நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் தவறு எதுவும் இல்லை. மாணவர்கள் இவர்களின் கருத்துகளையும் தெரிந்து கொள்வது நல்லது, இந்திய அரசியல் என்பது சாவர்கர், கோல்வால்கர் போன்றோரில் இருந்தும் துவங்கியது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு வீணாக இவர்களின் பாடங் களை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்துப் போராடுவது, தேவையற்ற ஒன்று ஆகும். அல்லது மாணவர்கள் சகிப்புத்தன்மையற்றவர்களாக உள்ளனர் என்று தோன்றுகிறது. இவர்களின் பாடங்களை சேர்த் ததில் எந்த விதிமுறையும் மீறப்படவில்லை" என்று கூறினார்.
அரியானா பள்ளி கல்லூரிகளில் காணாமல் போன சரஸ்வதி நதி குறித்த பாடம் இருக்குமாம்!
எந்த ஒரு ஆய்வாளர்களாலும் கண்டு பிடிக்கப்படாத -வெறும் கட்டுக்கதைகளில் மட்டுமே உள்ள சரஸ்வதி நதிகுறித்து ஆய்வு செய்யவும் சரஸ்வதி நதி கண்டுபிடிப்பிற்கெனவும் அரியானாவில் தனித்துறை ஒன்றை அரியானா பாஜக அரசு துவக்கி உள்ளது.
இந்தத் துறை சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு சரஸ்வதி குறித்த பாடங்கள் சேர்க்கப்படுமாம். விரைவில் புதிய பாடநூலில் சரஸ்வதி நதி, அதன் வரலாறு, அதன் பெருமைகள் மற்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ள சரஸ்வதி குறித்தும் கற்பிக்கப் படுமாம். இது தொடர்பாக புதிய பாடங்கள் அச் சிற்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் போது இந்த நூல்கள் மாணவர்களின் கைகளில் இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.
அரியானாவில் உள்ள பாஜக அரசு ஹிந்தி - சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் சரஸ்வதி நதி குறித்த தனிப்பாடநூல் ஒன்றை வரலாற்றுப் பாடத்தோடு சேர்த்துப் படிக்க மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பான 15 நபர் களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, மேலும் குருஷேத்திர பல்கலைக்கழக பேராசிரியர் பிரிதம் சிங் இந்த குழுவின் மூத்த நிர்வாகியாக இருப்பார். மற்ற உறுப்பினர்கள் அனைவரும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவர். வரும் செப்டம்பர் 15 அன்று இந்தக் குழு உருவாக்கிய சரஸ்வதி குறித்த பாடத் திட்டங்கள் முதலமைச்சருக்கு அனுப்பப்படுமாம்
அரியானா பள்ளிகல்வித்துறை துணைத் தலைவர் துமன் சிங் கிர்மாச் இது குறித்துக் கூறும் போது "முதலமைச்சருக்கு சரஸ்வதி நதி நாகரிகம் குறித்த நூலுக்கான சில தலைப்புகளை அனுப்பி உள்ளேன், பள்ளிக்கல்வித்துறை தலைவராக உள்ள முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், கல்வி அமைச்சர் கன்வர் பால் சேர்ந்து சரியான தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.
சரஸ்வதி நாகரிகம் குறித்த இந்த நூல் பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளிலும் இது பாடமாகக் கொடுக்கப்படும். மேலும் தேசிய கல்வி ஆணை யத்திலும் இந்த நூலைச் சேர்க்க பரிந்துரை செய் யப்படும். சரஸ்வதி நதி குறித்த பாடம் படிப்பதன் மூலம் மாணவர்கள் இந்திய கலாச்சாரத்தின் அருமை பெருமைகளை அறிந்து கொள்ள முடியும்" என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment